இந்தியரின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட "மித்ரா" அமைப்பு மீண்டும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் என பிரதமர் அறிவித்தார்.
இப்போது மித்ரா ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஒற்றுமைத்துறை அமைச்சில் பல்வேறு குற்றச்சாட்டுகள், எழுப்பப்பட்டன. எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களில் ம.இ.கா. வினரும் அடங்குவர்.
இதற்கு முன்னரும், மித்ராவின் ஆரம்பகாலத்தில், மித்ரா பிரதமர்துறையின் கீழ் தான் செயல்பட்டு வந்தது. அப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதும் ம.இ.கா. வினரின் பெயர்கள் தான் அடிபட்டன!
ஆனாலும் அனைத்தும் வெறும் குற்றச்சாட்டுகள் தான். இதுவரையில் ம.இ.கா.வினர் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை. கைது செய்யப்படவும் இல்லை. அதுமட்டும் அல்ல குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வெளிநபர்கள் தான், ம.இ.கா.வினர் அல்ல!
ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் மித்ரா செயல்பட்டபோது குற்றச்சாட்டுகள் நிறையவே சுமத்தப்பட்டன. ஆனால் அந்தத்துறையின் அமைச்சர் டத்தோ ஹலிமா ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்! கடைசிவரை அப்படியே புன்னகையோடு மௌனம் சாதித்துவிட்டு இப்போது அதனைப் பிரதமர்துறைக்குச் சாமர்த்தியமாக மாற்றிவிட்டார்! அது நமது பார்வை அவ்வளவு தான். ஒர் அமைச்சர் பதில் சொல்லாமல் காலத்தைக் கடத்தினால் நாமே அவரைப்பற்றி தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது!
மித்ரா அமைப்பு பிரதமர் துறையின் கீழ் தான் வரவேண்டும், செயல்பட வேண்டும் என்பது தான் எதிர்கட்சிகளின் கோரிக்கை. அவர்கள் தான் அதனைச் சாதித்தவர்கள்.
ஆனாலும் நாம் எல்லாகாலங்களிலுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது வழக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. காரணம் ம.இ.கா.! மித்ரா அல்லது அதற்கு முன்னர் செடிக் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அது பிரதமர் துறையின் கீழ் தான் செயல்பட்டு வந்தது. அப்போதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் ம.இ.கா.வினர் மீது தான்!
மித்ரா எந்தத் துறையின் கீழ் இருந்தாலும் அதனை வழி நடத்துபவர்கள் ம.இ.கா.வினர் தான் என்று சொல்லப்படுவதுண்டு! இப்போது தேர்தல் காலம் ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் வரும்வரை எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஒவ்வொரு அயோக்கியனும் யோக்கியமானவனாக மாறிவிடுவான்!
ஆனால் அடுத்த ஆட்சி யாருடையது என்பது மிக முக்கியமான கேள்வி. மீண்டும் தேசிய முன்னணி என்கிற நிலை வந்தால் மித்ரா மீண்டும் ம.இ.கா.வின் கையில் தான்! எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் மித்ராவின் மூலம் இந்தியர்கள் பயன்பெறுவர்.
பிரதமர்துறையின் கீழ் மித்ரா வந்தாலும் அனைத்தும் அடுத்த தேர்தல் முடிவுக்குப் பின்னர் தான் அதற்கான பலாபலன் தெரிய வரும்!
No comments:
Post a Comment