பிரதமர் அவர்களின் அறிவிப்பை நம்மால் வரவேற்க முடியவில்லை!
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்காக - அவர்களுக்கு உதவுவதற்காக - அரசாங்கம் 20 இலட்சம் ஒதுக்கீடு செய்யும் என்பதாக, ம.இ.கா. வின் கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார்.
ஒதுக்கீடு செய்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஒரு பிரச்சனை என்னவென்றால் ஒதுக்கீடு என்பது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை. இது எப்போது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஒதுக்கீடும் ஆகலாம். ஆகாமலும் போகலாம். அல்லது தேர்தல் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். இந்த அறிவிப்பை நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் காலங்களில் இதுபோன்ற தேர்தல் அறிவுப்புகள் வரத்தான் செய்யும். இதற்கு முன்னரும் நாம் இதுபோன்ற அறிவுப்புகளைப் பார்த்திருக்கிறோம்.
அதனால் ஒதுக்கீடு அப்படியே இருக்கட்டும்.
இந்திய மாணவர்களுக்கு 20 இலட்சம் ஒதுக்கீடு என்பதைவிட இப்போது அவர்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அதனை முதலில் பிரதமர் அவர்கள் களைய வேண்டும். எஸ்.பி.எம். தேர்வில் எல்லாப் பாடங்களிலும் "ஏ" எடுத்த இந்திய மாணவர்கள் இன்று "ஏண்டா எடுத்தோம்" என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்! குறைவான தகுதி உள்ளவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி பயில இடம் கிடைக்கும் நிலையில் இப்படி சிறப்பான தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக இந்திய மாணவர்கள்.
இந்த நேரத்தில் பிரதமருக்கு நமது வேண்டுகோள் என்பதெல்லாம் நீங்கள் ஒதுக்கப்போகும் 20 இலட்சம் ஒருபக்கம் இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள். இந்திய மாணவர்களுக்கு இன்னும் அதிக இடங்களை ஒதுக்குங்கள்.. இப்போது எத்தனை இடங்கள் கொடுக்கப்பட்டன என்பதைக் கூட இந்திய சமூகம் அறியவில்லை. அனைத்தும் ரகசியம்! கல்வியில் கூட ரகசியமா!
இப்போது பிரதமர் அறிவித்திருக்கும் இருபது இலட்சம் என்பது ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவே நமக்குத் தெரிகிறது. மெட்ரிகுலேஷன் கல்வியை மறக்கடிப்பதற்கு இருபது இலட்சம் கொடுத்து இந்திய சமுதாயத்தை திசை திருப்புவதாகவே நமக்குத் தோன்றுகிறது. இப்படி இருபது இலட்சம் ஒதுக்கீடு செய்கிறோம் என்று அறிவிப்பு செய்ததைவிட "நாங்கள் இன்னும் அதிகமான இந்திய மாணவர்களை மெட் ரிகுலேஷனில் சேர்த்திருக்கிறோம்" என்று அறிவித்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அப்படியென்றால் "அவ்வளவு தானா மெட்ரிகுலேஷன்!" என்று கேட்கத் தோன்றுகிறது?
No comments:
Post a Comment