Thursday 15 September 2022

மீண்டும் பிரதமரா!

 


வரும் 15-வது பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதிரின் பெஜுவாங் கட்சி வெற்றி பெற்றால் அவரே மீண்டும் பிரதமராக, மூன்றாவது முறையாக, வருவார் என அவரது கட்சி கூறுகிறது.

டாகடர் மகாதீரும் தாம் மீண்டும் பிரதமராக   வரவேண்டும்  என்று   மக்கள் விரும்புகின்றனர் என்பதாகக் கூறியிருக்கின்றார்.

டாக்டர் மகாதீரை விரும்பும் மக்கள் எல்லா காலங்களிலும் இருக்கின்றனர். நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றார். நிறைய வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். மலாயக்காரர்களைக் கல்வி கற்றவர்களாக மாற்றியிருக்கிறார். அவர்களைத் தொழிலதிபர்களாக உருவாக்கியிருக்கிறார். 

இவைகள் எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அவருக்குப் பின் வந்த எந்த ஒரு பிரதமரும் அவர் அளவுக்கு எதனையும் செய்துவிடவில்லை. அவருக்கு இருந்த அந்த ஆளுமை, நாவன்மை வேறு யாருக்கும் இருந்ததில்லை. மலாய்க்காரர்கள் பின்னடைந்த  சமூகம் என்பதினால் அவர் பதவியில் இருந்த காலத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

அவர் இரண்டாவது முறையாக பிரதமராக வந்த பொழுது அவர் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் ஓடி மறைந்தன. அரசியலில் அவர் செய்த கூச்சநாச்சமற்ற செயல்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான்  உண்மை.

வாராத வந்த மாமணி போல எதிர்கட்சியினர் ஆட்சிக்கு வந்தனர். அதுவே பெரிய அதிசயம். சரித்திரமே மாறியது. ஆனால் டாக்டர் மகாதிர் அந்த ஆட்சியை அவரே கவிழ்ந்து போகக்கூடிய சூழலை உருவாக்கினார்! ஆட்சி கவிழ்ந்தது! பின்னர் யார் யாரையோ குற்றம் சொன்னார்!

இப்போது மூன்றாவது முறை பிரதமரா?  நமது நாடு தாங்காது!  அரசியலில் அவரது காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது கட்சியினர் அவர் பிரதமராக வருவதை விரும்பலாம்.  அதற்காக மக்கள் விரும்புகிறார்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவரால் யாருடனும் ஒத்துப்போக முடியாது என்பதே பெரிய குறை.

அவர் பதவியில் இருந்த காலத்தில் உள்ள மலாய்க்காரர்கள் வேறு இப்போது உள்ள தலைமுறை  வேறு. இப்போது அவர்கள் கல்வி கற்றவர்கள்.  நல்லது கெட்டது உணர்ந்தவர்கள். அன்று அவர் செய்த மாபெரும் முன்னேற்றங்கள் எல்லாம்  இப்போது வெள்ளத்தால் நாடெங்கும் அடித்துக் கொண்டு போகின்றன! காரணம் அரைகுறையான, அரைவேக்காடு முன்னேற்றங்கள்!

அவரது கட்சியினர் அவர் பிரதமராவதை விரும்பலாம்.  வருகின்ற தேர்தலில் அவரது கட்சி காணாமல் போய்விடும் என்பதையும் நம்பலாம்!

வெறும் கானல் நீரே!

No comments:

Post a Comment