Sunday 25 September 2022

வேதனைத் தருகிறது

 

சமீபத்தில் படித்த ஒரு செய்தி மனதிற்கு வேதனைத் தருகிறது. அதுவும் இந்தியருக்காக  ஒரு மருத்துவக் கல்லூரி என்று சொல்லப்படும்  ஏம்ஸ்ட்  பல்கலைக்கழகத்தைப் பற்றியான ஒரு செய்தி.

இந்தியர்களுக்கு என்று சொல்லும் போது அந்தக் கல்லூரியின் மூலம் ஒரு சில சலுகைகளாவது  கிடைக்கும் என்கிற எண்ணம் எழுவது இயல்பு தான்.

மாணவன் ஒருவனால் கட்டணம் கட்ட முடியாத நிலையில் அந்த மாணவனுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று கொஞ்சமாவது ம.இ.கா. வினர் சிந்தித்திருக்க வேண்டும். அந்த மாணவனின் குடும்பத்தார்  நிச்சயமாக ம.இ.கா. வின் உதவியை நாடியிருப்பர். கல்லூரி நிர்வாகத்தைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. நிர்வாகம் ம.இ.கா. தலைமை சொல்லுவதைத்தான் கேட்கும். ம.இ.கா. தான் அவர்களின் முதலாளி.

அந்த மாணவர் முதலில் படிக்க வேண்டும், படிப்பைத் தொடர வேண்டும். அவர் படிப்பை நிறுத்தவது எந்த வகையிலும் நியாயமாகாது.

மேலும் அங்குப் படிப்பவர்கள் குறைவான இந்திய மாணவர்கள் தான். ம.இ.கா.வின் கல்லூரி என்பதால் எப்படியும் படித்துவிட முடியும்  என்கிற எதிர்ப்பார்ப்பு பெற்றோரிடம் இருக்கத்தான் செய்யும். இப்படி குறைவான இந்திய மாணவர்கள் பயிலுவதற்கும் ம.இ.கா.  வைத்தான் குறை சொல்ல வேண்டியுள்ளது. ஏம்ஸ்ட் கல்லூரியில் அதிகமான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயிலுகிறார்கள் என்கிற  காரணத்தைக் கூறி அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதுவும் இல்லை இதுவும் இல்லை என்கிற சூழலை உருவாக்கியவர்கள் ம.இ.கா.வினர் தான்.

இப்போது ஏம்ஸ்ட் ப'கழகத்தில் மருத்துவக் கல்லூரியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்கிற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இந்திய மாணவர்களாக இருக்க முடியாது. அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ப'கழகத்திற்கு சுமார் இருபத்தைந்து இலட்சம் வெள்ளி  மானியம் வழுங்குவதாகச் சொல்லப்படுகிறது.  அரசாங்கம் அவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்குகிறது என்றால் அங்கே மலாய் மாணவர்கள் கணிசமான அளவு  மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. உண்மை நிலவரம் தெரியவில்லை.

ப'கழகத்திற்கு அரசாங்கத்திலிருந்து மானியம் உண்டு. மாணவர்களிடமிருந்து  வசூலிக்கப்படும் கட்டணம் உண்டு. இப்படியெல்லாம் இருந்தும் கட்டணம் கட்ட தவிக்கும் ஒர் இந்திய மாணவனுக்கு  உதவக்கூடிய ஆற்றல் ம.இ.கா.வுக்கு இல்லை என்பதை அறியும் போது அவர்கள் மேல் நமக்கும் வருத்தம் உண்டு.

இன்று இந்திய மாணவர்களின் நிலை இரண்டும் கெட்டான் நிலை. அரசாங்கமும் உதவவில்லை, ம.இ.கா.வும் உதவவில்லை. ம.இ.கா.வை நம்பி இந்திய சமுதாயம் இறக்கத்தைத்தான் கண்டதே தவிர  ஏற்றத்தை அல்ல என்பதற்கு  மற்றொரு உதாரணம்!

No comments:

Post a Comment