Friday 9 September 2022

தகுதியுள்ள கட்சிகள் உண்டா?

 

IPF கட்சியின் சின்னம்
அடுத்த பொதுத்தேர்தலின் தாக்கம் இப்போதே  ஆரம்பமாகிவிட்டது!

எல்லாக் கட்சிகளும் தொகுதிகளைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டன. 'இது எனக்கு, அது உனக்கு' என்று பேரங்கள் பேசப்படுகின்றன.  இதில் வெற்றி தோல்வி என்பது சகஜம். கேட்பதெல்லாம் கிடைக்கப் போவதில்லை. அப்படி கிடைக்காமல் போனால்  கட்சிகளில் மாற்றம் ஏற்படும்! கட்சிகளில் தேர்தலில் உடன்பாடு காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி வாய்ப்பு எந்தத் தொகுதியில் பிரகாசமாக இருக்கும் என்பதாக ஒரு சில கணிப்புகளை வைத்திருப்பர். ஆனால் இன்னொரு கட்சியும் அதே தொகுதியைக் குறி வைத்து காய்களை நகர்த்துவர். இது தான் அரசியல். சிறு சிறு கட்சிகளால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது.  யாருடனாவது கைகோத்துத்தான் போகவேண்டிய சூழல்.

ஆமாம், நீண்ட காலமாக தேர்தலில் போட்டியிடத் துடிக்கும் ஐ.பி.எப். கட்சியின் இன்றைய நிலை என்ன? அவர்களிடமிருந்து எந்த சத்தத்தையும் காணோமே! பாவம்! அவர்களும் என்ன செய்வார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும் முட்டி மோதிப்  பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ம.இ.கா.  அவர்கள் பாரிசானில் சேர்வதையே விரும்பவில்லை. அதனால் பாரிசானின் ஓர் அங்கமாக ஐ.பி.எப். இடம் பெற முடியவில்லை.  கடைசியில் அவர்கள் அசந்து போனார்கள் என்றே தோன்றுகிறது!

ஆனாலும் இப்போது கொஞ்சம் நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. பாரிசான் கூட்டணி தனது சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்பதாக அதன் தலைவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.  சட்டதிருத்தம் நடக்குமா நடக்காதா என்று  உறுதியாகச் சொல்ல முடியாது. 

பாரிசானில் யாரும், தங்கள் குரலை உயர்த்தி, நாங்கள் வச்சது தான் சட்டம் என்று சொல்ல முடியாத சூழலில் தான் கட்சியின் நிலைமை  இருக்கிறது. 'எங்களால் வெற்றி பெற முடியும்'  என்று எந்த கொம்பானுலும்  தம்பட்டம் அடிக்க முடியாது. ஏதோ ஒரு குருட்டுத் தைரியம் தான். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல எல்லாக் கட்சிகளிலும்  வாசற்படி சரியாகயில்லை.  எல்லாம் நெளிந்தும், உடைந்தும் தான் காணப்படுகிறது!

சமீபத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறையில் இருப்பதும் பின்னடைவு தான். அடுத்து அம்னோ இப்போதைய தலைவருக்கு எப்போது கத்தி விழும் என்றும்  சொல்ல முடியாத ஒரு நிலை. இதுவே அம்னோவுக்கு ஓர் அனுதாப அலையை ஏற்படுத்தலாம் என்று நினைத்தாலும் அது ஒரு வேளை வயதானவர்களிடையே ஏற்படுத்தலாம். ஆனால் இளைய தலைமுறையினரிடம் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?

இந்திய கட்சிகளிடையே ம.இ.கா.  தான் ஓரளவு தொந்தியும், தொப்பையுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!  ஆனால் ஐ.பி.எப். பாரிசானில் சேர்வதும், இவர்கள் தேர்தலில் போட்டிப் போட்டு ஜெய்ப்பதும் அது கனவாகத்தான் இருக்கும்.  ம,இ,கா, வே 'எங்களுக்கு மலாய் தொகுதிகளைக் கொடுங்கள்' என்று கேட்கும் போது அதற்கு என்ன பொருள்? இந்தியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பது தானே பொருள்!  

எப்படிப் பார்த்தாலும் இப்போதைக்கு ம.இ.கா. தான்! வேறு இந்தியக் கட்சிகள் என்பதெல்லாம் சும்மா தமாஷ்!

No comments:

Post a Comment