Saturday 24 September 2022

இந்தியர்களின் ஒரே மருத்துவக் கல்லூரி

 

இந்திய மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கும் நோக்கம் கொண்டது தான் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம்.

அப்படித்தான் அதன் நிறுவனரான துன் சாமிவேலு அதன் ஆரம்பக் காலகட்டத்தில் அறிவித்திருந்தார். இந்தியர்களிடமிருந்தும் பணம் வசூல் செய்யப்பட்டது. வழக்கம் போல தலைவர் சொன்னால் தலையாட்டுவது நமது கடமையாகக் கருதி நம் மக்களும் கணிசமாக அள்ளிக் கொடுத்தனர். மக்கள் தவறு என்று எதனையும் நினைக்கவில்லை.

அவர் காலத்தில், துன் சொன்னவாறு, ஓரளவு தனது சொல்லைக் காப்பாற்றினார். அப்போதும் சரி இப்போதும் சரி  நூறு விழுக்காடு இந்திய மாணவர்களை நாம் எதிர்பார்க்கவில்லை. அது சரியாகவும் இருக்காது. பல இன மாணவர்கள் இருக்கத்தான் வேண்டும். அதுவே சிறப்பு.

அதற்குக் காரணம் அரசாங்கமும் தனது பங்கிற்கு ஏம்ஸ்ட் கல்லூரிக்குப் பல வழிகளில் உதவியிருக்கிறது. அதனால் சீன, மலாய் மாணவர்களுக்கும் போதுமான இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ப'கழகத்திற்கு  இருக்கிறது.

துன் சாமிவேலு காலத்தில் ஓரளவு பின்பற்றப்பட்ட  "இந்தியர் மாணவர்களுக்கே முதலிடம்"  கொள்கை இப்போது இல்லை என்பதாகச் சொல்லப்படுகிறது. அது நமக்கு வருத்தம் தான். 

இட ஒதுக்கீடு மட்டும் அல்ல இந்திய மாணவர்களுக்கு ஒருசில வகைகளில் அவர்களுக்குச் சலுகைகள் காட்ட வேண்டிய பொறுப்பும்  ப'கழகத்திற்கு உள்ளது.  இந்திய மாணவர்களுக்கும் மற்ற இன மாணவர்களுக்கும் ஒரே விதமான கட்டணம் தான் என்றால் அது எப்படி சரியாக வரும்?

மலாய் மாணவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் கைகொடுக்கும். அது நமக்குத் தெரியும்.  அதே போல இந்திய மாணவர்களுக்கு ம.இ.கா உதவ வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அதுவும் குறிப்பாக B40 இந்திய மாணவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும். ம.இ.கா. கஜானாவில் அவ்வளவு பணம் தேறாது என்றால் அரசாங்க கஜானாவை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதுவரை ம.இ.கா. அதைத்தானே செய்து வருகிறது! இதனை நாம்  அவர்களுக்குச்  சொல்லியா கொடுக்க வேண்டும். 

பணம் கட்ட முடியாத  இந்திய மாணவர்களைக் கேவலப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும்,  இழுத்தடிப்பதும் ம.இ.கா.வுக்கு எந்த நன்மையும் கொண்டுவராது. அந்த மாணவனுக்கு, அவன் கல்வி முடியும்வரை, ம.இ.கா. அவனுக்குத் துணை நிற்க வேண்டும். அது அவர்களது கடமை.

இந்திய மாணவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கலாம்  என்று ம.இ.கா. நினைத்தால் அதனை நாம்  ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் கொடுக்க முடிந்தவர்கள் இப்போதும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியர்களில் அனைவருமே பணம் கட்ட முடியாதவர்கள் அல்ல. முடிந்தவர்கள் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முடியாதவர்கள் அதிகம். அவர்களுக்கு உதவுவது ம.இ.கா.வின் கடமை.

"நாங்கள் உதவவே மாட்டோம். நீங்கள் பணம் கட்டித்தான் ஆக வேண்டும்" என்று ம.இ.கா. பிடிவாதம் பிடித்தால்  இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்ல உங்களுக்கு அருகதையே இல்லை!

இந்தியர்களின் பெயரைச் சொல்ல  ஒரே மருத்துவ கல்லூரி. அதிலும் இந்தியர்களுக்கு ஆபத்து என்றால் என்கே போவது? ம.இ.கா.வினர் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment