"காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" அதைத்தான் மலேசியாவும் செய்திருக்கிறது.
மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், இலங்கையிலிருந்து சுமார் 10,000 தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இலங்கையின் நிலைமை நாம் அறிந்தது தான். நிர்வாக சீர்கேட்டினால் இன்று நாடு படு பாதாளத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அரிசி இல்லை, பால் இல்லை, மருந்துகள் இல்லை, பெட்ரோல் இல்ல, டீசல் இல்லை, வேலை இல்லை, மக்களிடன் பணம் இல்லை - இப்படி எத்தனையோ இல்லை! இல்லை! இல்லைகள்!
சர்வாதிகாரம் உச்சத்தில் உள்ள நாடுகளில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது? இப்போது முதல் நாடாக இலங்கை வெளி உலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. இந்த அவலம் இன்னும் ஒரு சில நாடுகளில் தொடரவே செய்யும்! நாமும் பார்க்கவே செய்வோம்!
இந்த நேரத்தில் இந்த உதவி நமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை எனினும் இலங்கைக்கு அது பெரிய உதவி. அரசாங்கமே தனது குடிமக்களை 'வெளிநாடுகளில் போய் வேலை செய்யுங்கள்' என்கிற ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வெளிநாடு போய் வேலை செய்தால் தான் அங்கிருந்து பணம் உள்நாட்டுக்கு வரும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானமும் வரும்.
நமது அரசாங்கத்தையும் நாம் பாராட்டுகிறோம். இப்படி ஒரு முடிவுக்கு வந்தது என்பது சாதாரண விடயம் அல்ல. ஒருசில நாடுகளை 'வேண்டாம்! வேண்டாம்!' என்று ஒதுக்கிவிட்டு இப்போது இலங்கைக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி கூறுகிறோம்.
ஒன்றை மலேசியர்கள் மனதில் கொள்ள வேண்டும். வேலைக்கு இவர்களை எடுப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து கொண்டிருப்பவர்கள் இப்போது இங்குவர ஆர்வம் காட்டவில்லை. ஒன்று சம்பளம். இன்னொன்று அவர்களுக்குச் சம்பளம் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. நம்மீது பல புகார்கள். அடிப்பது, உதைப்பது போன்று பல புகார்கள்.
அங்கிருந்து வருபவர்கள் ஏழைகள் என்பதற்காக அவர்களை அடிமைகள் போல நடத்துவது மிகக் கேவலமான செயல். அவர்கள் வேலை செய்கிறார்கள் நாம் சம்பளம் கொடுக்கிறோம். அத்தோடு சரி. வரம்பு மீறுவது மகா கேவலம். நாம் ஒன்றும் கொடி கட்டிப்பறக்கவில்லை. மிஞ்சிப் போனால் அவர்களைவிட கொஞ்சம் வசதியாக இருக்கிறோம். அவ்வளவு தான்!
அதனால், அரசாங்கம் வாய்ப்புக் கொடுக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்துங்கள். மீண்டும் உங்கள் புத்தியைக் காட்டாதீர்கள்.
ஒர் அருமையான வாய்ப்பு! மற்றவை உங்கள் கையில்!
No comments:
Post a Comment