Friday 16 September 2022

நாமும் ஆதரவுகரம் நீட்டுவோம்!

                                           

மலேசிய இந்தியர்களின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த, மறைந்த துன் சாமிவேலுவின்  பெயரை கோலாலம்பூரில் உள்ள இரண்டு சாலைகளில் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்கிற கோரிக்கைக்கு ஆதரவாக நாமும் ஆதரவுகரம் நீட்டுகிறோம்.

நீண்ட நாள் மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். மலேசிய   இந்தியர்களை பிரதிநிதித்தவர். நல்லதும் செய்திருக்கிறார். பலருக்கு நல்லதும்  நடந்திருக்கிறது.  மலேசிய இந்தியர்களின் கல்வியில் அதிக கவனமும் செலுத்தியிருக்கிறார்.

சாலை ஒன்றுக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்னும் கோரிக்கை இப்போது எழுந்திருக்கிறது. இந்தியர்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்குத்  தோன்றவில்லை.

சாலைக்குப் பெயர் வைப்பது,  பெயர்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவது, எப்போதும் எல்லாகாலங்களிலும் உண்டு.  நாட்டுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்களை வைப்பது பொதுவான நடைமுறை. 

துன் சாமிவேலு அவர்களின் சேவை என்றால் அனைவருக்கும் தெரிந்தது: இன்று நாட்டில் உள்ள நெடுஞ்சாலை எல்லாம் அவரது பெயரைச் சொல்லும். அதே ஒன்றே போதும் அவரது சேவையைப்பற்றி அறிந்துகொள்ள.

இப்போது எழுப்பப்பட்டிருக்கும் கோரிக்கை இரண்டு சாலைகள் சம்பந்தமானது. ஒன்று ஜாலான் ஈப்போ இன்னொன்று ஜாலான் ராஜா லாவுட்.  இந்த இரண்டு சாலைகளில் ஏதோ ஒன்றில் அவரது பெயர் சூட்டினால் இந்திய சமூகம் பெருமை அடையும். அவரது சேவைக்கும் அரசாங்கம் மரியாதை கொடுத்ததாகவும் இருக்கும்.

அரசாங்கத்திற்கு இந்தியர்களின் கோரிக்கை இது. அதற்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும். இந்தியர்கள் என்றாலே  இன்றைய அரசாங்கத்திற்கு ஓர் அலட்சிய போக்கு உண்டு.  அதனைத் தொடரக் கூடாது   என்பதே நமது வேண்டுகோள்.

மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  அதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை இப்போதே வலியுறுத்த  வேண்டும்.  தொடர்ந்து வலியுறுத்திவர  வேண்டும்.  இதனை ஆற போட்டால் இந்த பிரச்சனை இழுத்துக் கொண்டே போகும். கடைசியில் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ம.இ.கா. இந்த ஒரு பிரச்சனையையாவது அக்கறை எடுத்து செயல்படுத்த முனைய வேண்டும். வெறும் பேச்சோடு இது முடிந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment