Monday 12 September 2022

பொது மன்னிப்பு கூடாது!

 

சிலாங்கூர் சுல்தான் அவர்கள் மலேசியர்களுக்கு நல்லதொரு அறிவுரையைக் கூறியிருக்கிறார்.

 'நமது நாட்டின் நீதிபரிபாலனத்தை நம்புங்கள்' என்பது தான் அவர் சொல்ல வருவதின் சுருக்கம். வழக்குகள் என்று வரும் போது நீதிமன்றங்கள் அதனை முறையாக விசாரித்த பின்னர் தான் தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

சுல்தான் அவர்களின் கருத்தை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.`நீதிபரிபாலனம் என்பது சரியாகத்தானே  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  நாம் என்ன குற்றத்தைக் கண்டு பிடித்தோம்? ஒவ்வொரு நாளும் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாருமே நீதிமன்றம் சொல்லுகின்ற தண்டனைகளை, தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறோம். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதைவிட இன்னொரு படி மேல் சென்று மீண்டும் மேல்முறையீடு செய்கிறோம்.  மீண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்யத்தானே செய்கிறோம்!இத்தனை வசதிகளை நீதிமன்றங்கள் கொடுக்கத்தானே செய்கின்றன? அனைத்தும் உங்களைக் குற்றவாளி என்றால் உங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்.  வேறு வழியில்லை!

ஆனால் கொள்ளையடிப்பதையே  மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்ட அம்னோ, ம.இ.கா. போன்ற கட்சிகள் நீதிமன்றத்தைக் குற்றம்  சொல்லுகின்றன. அப்படியென்றால் உங்களிடம் உள்ள பெரிய பெரிய வழக்கறிஞர்களை அனுப்பி வாதாடியிருக்கலாமே! உண்மையை வாதாடி நீதியை நிலைநாட்டியிருக்கலாமே!  அவர்கள் என்ன இன்னும் கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கிறார்களா!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வழக்கில் தண்டனைக் கொடுக்கப்பட்டு விட்டது. அதனை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் எத்தனை ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அவர் குற்றவாளி என்பது அவருக்கே தெரியும். ஆனால் தன்னை யாரும் ஒன்று செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பு அவரிடம் இருந்தது! அவருடைய கட்சி  மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் நீதியையே புறந்தள்ளியிருப்பார்கள்! அவருக்குச் சாதகமாக அனைத்தும் நடந்திருக்கும்!

நஜிப்புக்கு அரச மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்பது சிலாங்கூர் சுல்தானின் அறிவிப்பு கொஞ்சம்   தெளிவுபடுத்துகிறது. ஏன் அம்னோவின் தலைவருக்கும் நஜிப்பின் நிலைமை தான் என்பதும் இன்னும் சில தினங்களில், வாரங்களில் தெரியவரும். அவர் குற்றவாளி என்றால் அவருக்கும் அரச மன்னிப்பு தேவைப்படுமோ? 

இப்படி குற்றவாளிகளுக்கெல்லாம் அரச மன்னிப்பு என்றால் நீதிமன்றங்களே தேவை இல்லையே! சிலாங்கூர் சுலதான் அவர்களின் அறிவிப்பு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

குற்றம் செய்தவர்கள் குற்றவாளிகள் தான்!  வேறு பேச்சுக்கு இடமெ இல்லை!

No comments:

Post a Comment