அம்னோ தலைவர், ஸாஹிட் ஹமிடி
அம்னோ தலைவர், ஸாஹிட் ஹமிடி என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்குப் புரியவில்லை!
இந்த ஆண்டு 15-வது பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என்பது பலரின் கருத்து. அதற்குக் காரணங்கள் உள்ளன. ஒன்று: தேர்தல் என்பது அடுத்த ஆண்டு தான் நடத்தப்பட வேண்டும். இன்னொரு சொல்லப்படுகின்ற காரணம்: மழைக்காலம்.
நம்மைச் சுற்றி பார்த்தாலே தெரியும். மழையினால் வருகின்ற சேதங்களைக் கண்ணாரப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்குப் பார்த்தாலும் வெள்ளம். கார்கள் மிதக்கின்றன. பெருத்த சேதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கோலாலம்பூர் நகரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஐந்து, ஆறு தடவை யோசிக்க வேண்டியுள்ளது! மழை வருமா, வெள்ளம் ஏறுமா - இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது!
வீடுகளுக்கும் அதே பிரச்சனை தான். பல இலட்சங்கள் பணம் போட்டு வாங்கிய வீடுகள் நிலைமை என்னவாயிற்று? வெள்ளம் ஏறினால் பொருட்கள் அனைத்தும் நாசமாகப் போகும். நாறிப்போகும். வீடு வாங்கினோம் என்கிற பெருமையெல்லாம் ஒன்னும் இல்லாமல் போகும். மழை பெய்தாலே வீடு என்னவாகும் என்கிற பயம் தான் முதலில் வரும். சொந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாத ஒரு நிலை.
நாடு, வெள்ள ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இப்போது தேர்தலுக்கு என்ன அவசரம் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் மழைக்காலமாகத் தான் இருக்கும் என்பதாக ஏற்கனவே நமக்கு வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஸாஹிட் கூறும் இன்னொரு காரணம் "ஏன் டாக்டர் மகாதிர் மழைக் காலத்தில் தேர்தல் நடத்தவில்லையா?" என்கிற கேள்வி நியாயமானதாக இல்லை. தேர்தல் நடத்த வேண்டிய காலத்தில் மழை வந்தது. அதை யார் என்ன செய்ய முடியும்? இந்த 15-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில் நடக்கும் போது அப்போது அது மழைக்காலமாக இருந்தால் அதனை யாரும் குறை சொல்ல முடியாது. குறை சொல்ல ஒன்றுமில்லை.
ஸாஹிட் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார். அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இவர் பயப்படுகிறார். அவர் மீது உள்ள வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிருபணமானால் இவர் அம்னோ தலைவர் என்கிற பேச்செல்லாம் தவிடுபொடியாகிவிடும்! அவருடைய பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். அதுவே பெரிய அவமானம். மக்கள் முன் அவர் நின்று பேசக்கூட தகுதியில்லாதவராகி விடுவார்!
நாம் சொல்லுவதெல்லாம் மழைக்காலம் மட்டும் அல்ல தேர்தல் நடத்த இன்னும் சில மாதங்கள் உள்ளன. அப்போது நடத்துங்கள் என்பது தான். நமது பிரதமரோ தேர்தல் நடத்த "அம்னோ முடிவு செய்யும்!" என்பதை மக்களுக்கும் அடிக்கடி நினைவூட்டுவது எரிச்சலைத் தருகிறது. அம்னோவின் ஆறு பேர் முடிவு செய்வார்களாம்! அப்போ தேர்தல் ஆணையம் என்று ஒன்று தேவையில்லையே! அந்த ஆணையத்தை முடக்கிவிட்டு அம்னோவே அனைத்து தேர்தலையும் முடிவு செய்யலாமே!
இந்த ஆண்டு தேர்தல் வேண்டாம்! அதுவே நமது முடிவு!
No comments:
Post a Comment