Sunday 11 September 2022

மோட்டார் சைக்கிளா? வேண்டாமே!

 





பள்ளி மாணவர்களிடம் மோட்டார் சைக்கிளைக் கொடுத்து ஓட்ட அனுமதியளிக்கும்  பெற்றோர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

பெற்றோர்களுக்குக் காவல்துறையும் இதுபற்றி சொல்லி  அலுத்துவிட்டது. ஆனாலும் பெற்றோர்கள் இதனைக் காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.  அலட்சியம் இன்னும் தலைவிரித்தாடுகிறது.

பெற்றோர்களும், ஒரு வகையில், சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் அருகில் உள்ள கடைகண்ணிகளுக்குப் போக வேண்டுமென்றால்  பிள்ளைகளை அனுப்புவதைத்தான் விரும்புகிறார்கள்! அல்லது பிள்ளைகளே 'நான் போய் வாங்கிவருகிறேன்!' என்று மோட்டார் சைக்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்! அவ்வளவு எளிதில் அவர்களின் கைகளுக்கு மோட்டார் சைக்கள் கிடைத்துவிடுகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மோட்டார் சைக்கிள் உரிமம் எடுக்கும் வயதுவரை பொறுத்திருக்க வேண்டும். பொறுத்திருக்கும்படி பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். பத்து, பதினோரு வயதிலேயே 'என் பையன் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறான்!' என்று பெருமைப்படுவதை நிறுத்த வேண்டும். இதில் பெருமைபட ஒன்றுமில்லை. பட்டால் முடிந்தது கதை. உயிர் திரும்ப வருமா?

பதினொரு வயது பையனும் அவனது தங்கையும் மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்து போனார்கள் என அறியும் போது மனம் வலிக்கிறது. பதினோரு வயது பையன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறான். இவன் சிறுவன். அவன் கூடவே தங்கையும் போயிருக்கிறாள்.

சிறு குழந்தைகள் தீடீரென சமாளிக்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். எதிரே கார் வரும், தீடீரென லோரி வரும் அல்லது மோட்டார் சைக்கிள் கூட வரலாம். பெரியவர்கள் கூட சமாளிக்க முடியாத சூழல் இருக்கின்ற  போது இந்தக் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்?

சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் வீடமைப்புப் பகுதிகளான தாமான்களில் எப்போதும் பார்க்கலாம்.   அவர்கள் என்ன வேகத்தில் பறக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்! ஆனால் என்ன செய்ய? பெற்றோர்கள் உணராதவரை மற்றவர்களால் என்ன செய்ய முடியும்?

பெற்றோர்களே! தயவு செய்து உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள். நாட்டில்  மோட்டார் சைக்கிள் விபத்துகள்  அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  அவர்களில்  சிறுவர்களும் அடங்குவர்.

எதுவும் நடக்கவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி! ஆனால் விபத்துகள் சொல்லிவிட்டு வருவதில்லை. வந்தவிட்ட பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை.  அவர்களுக்கான வயது வரட்டும். அவர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கான வயது வந்த பிறகு, உரிமம் பெற்ற பிறகு, அவர்களுக்குத் தேவை என்றால் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுங்கள். அல்லது உங்களது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த அனுமதியளியுங்கள்.

அதுவரை வேண்டாமே!

No comments:

Post a Comment