Tuesday 13 September 2022

வேலை இல்லா இலங்கையர்கள்!

 

இன்று ஸ்ரீலங்காவில் நிலவும் நிலையை உலகமே அறிந்திருக்கிறது. நாமும் அறிந்திருக்கிறோம். நம் தமிழ் உறவுகளும் அங்கு வாழ்வதால் நமக்கும் அவர்கள் மேல் அக்கறையும் அனுதாபங்களும் உண்டு.

இன்று பல உலக நாடுகள் அவர்களுக்கு உதவுகின்றன. முக்கியமான அவர்களின் தேவை உணவுப் பொருள்கள். அவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, போக்குவருத்துகள் சுமுகமாக நடந்தேற பெட் ரோல், டீசல் தேவைகள் போன்றவைகள்  ஓரளவு சீரடைந்து வருகின்றன.

அரசாங்கமே தனது நாட்டுக் குடிகளை வெளிநாடுகள் போய் வேலை செய்து குடும்பங்களுக்குப் பணம் அனுப்புங்கள் என்கிறது. இப்போது வெளிநாடுகளில் உள்ளவர்களையும் நாட்டுக்குள் பணம் அனுப்பி உதவுங்கள் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாடு பேரழிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.  மக்களின் பசி, பட்டினி போராட்டம் இன்னும் தொடர்கிறத

இந்த நிலையில் தான் தென் கொரியா தனது நாட்டில் இலங்கை பிரஜைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. சுமார் 2500  இலங்கையர்களுக்கு தனது நாட்டில் வேலை செய்ய அனுமதி அளித்திருக்கிறது. நிச்சயமாக இது ஒரு மனிதாபிமான செயல் என்பதை ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும். இலங்கைக்குப் பணத்தேவை என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.  வெளிநாடுகளில் வாழும் தனது குடிமக்கள் பணம் அனுப்புவதன் மூலம் நாட்டுக்கும் அதனால் நன்மை உண்டு. 

தென் கொரியா தனது பங்குக்கு இதனை அறிவித்திருக்கிறது. வரவேற்கிறோம். மற்ற நாடுகளும் வேறு வழிகளில் உதவலாம்.   பல வழிகளில் உதவலாம். பொருள்கள் கொடுத்து உதவலாம். ஒரு நாட்டின் மக்கள் பட்டினியால் வாடும்போது அதனை உலகிலுள்ள மக்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

இன்று உலகில் பல நாடுகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெள்ளம், புயல் இன்று பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.  எந்த நாடும் எந்த நேரத்திலும் பாதிக்கப்படலாம். 'இன்று நான் நாளை நீ' என்கிற நிலை தான் இப்போது.

தென் கொரியாவின் இந்த வேலை வாய்ப்பு என்பது இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கொடையாகவே நாம் கருதுகிறோம். மற்ற நாடுகளும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் விரும்புகிறோம்.

No comments:

Post a Comment