Monday 5 September 2022

இணையும் சாத்தியமுண்டா?


 வருகின்ற பொதுத் தேர்தலில் கட்சிகளுக்கிடையே ஒன்று சேர்வது, தேர்தல் ஒப்பந்தங்கள் எல்லாம் இயல்பானது தான்.

இப்போதுள்ள சிறு கட்சிகள் ஒன்று பாரிசான் கட்சியோடு இணைய வேண்டும் அல்லது பக்காத்தான் ஹராப்பானுடன் இணைய வேண்டும். பாஸ் போன்ற பெரிய கட்சிகள் கூட இந்த இரண்டு கூட்டணிகளோடு தான் இணைய வேண்டும். அவர்களுடைய பலம் என்பது  கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்கு வெளிய எதிர்பார்க்கின்ற அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. அதனால் தான் பாஸ் கட்சியின் தலைவர் பேசுவது  என்னவென்று தெரியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்! அவருக்கும் தெரியும் இந்த இரண்டு கூட்டணிகளையும் விட்டால் தனக்கு வேறுவழியில்லை என்பது! அதனால் தான் அவர் மலாய்க்காரர், இஸ்லாமியர், சீனர், இந்தியர் என்று பிரித்துப் பேசுகின்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்!

இப்போது மூடா கட்சியின் தேசியத் தலைவர், சைட் சாடிக் பக்காத்தான் கூட்டணியோடு தங்கள் கட்சி இணைந்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருக்கிறார். அது ஒரு சரியான முடிவு தான் என்பதில் சந்தேகமில்லை. வரவேற்கக் கூடிய முடிவு தான்.

என்ன தான் நாம் வரவேற்றாலும் முடிவு என்னவோ பக்காத்தான் கையில் தான் உள்ளது. தொகுதி பங்கீடு என்று வரும்போது இவர்களால் எந்த அளவுக்கு ஒத்துப்போக முடியும் என்பது சந்தேகத்திற்குரியதே..

மூடா கட்சி இளைஞர்கள் சார்ந்த ஒரு கட்சி. அதன் பலம் எத்தகையது என்பது இன்னும்  புரியவில்லை. வருகின்ற பொதுத் தேர்தலில் நிறைய இளைஞர் கூட்டம் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் மூடா கட்சியை எந்த அளவு வரவேற்கின்றனர் என்பது புரியாத புதிர். அது ஒரு புதிய அரசியல் கட்சி என்பதை மறந்துவிடக் கூடாது. அதன் பலம் இன்னும் தெரியவில்லை.

அவர்களின் பலம் தெரியாத நிலையில் அவர்களுக்கு 15 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது சிக்கல் தான்.  மூடா கட்சி 15 நாடாளுமன்றத் தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். இங்கு தான் சிக்கல் இருக்கும். இளைஞர்களின் ஆதரவு தெரியாத நிலையில் அவர்களுக்கு 15 இடங்களை எப்படி ஒதுக்குவது என்பது கொஞ்சம் சிக்கல் தான்.

ஆனால் மூடா கட்சி பக்காத்தானோடு இணைவது என்பது சரியான முடிவு. அவர்கள் அதிகமான தொகுதிகளைக் கேட்கும் அளவுக்கு  இன்னும் வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மற்ற கட்சிகளோடு இவர்கள் இணைவதும் சாத்தியம் இல்லை. டாக்டர் மகாதிரின் கட்சியுடனோ முகைதீன் யாசின் கட்சியுடனோ எந்த ஒரு நிலையிலும் ஒத்துவராதவர்கள் இளைஞர்கள்.

நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் மூடா கட்சி பக்காத்தான் ஹரப்பானோடு இணைவது அந்த கட்சியின் வருங்காலத்திற்கு நல்லது. இணைப்பு சாத்தியமுண்டு என்பதில் சாந்தேகமில்லை.  ஆனால் தொகுதி உடன்பாடு என்பதில் தான் எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment