Friday, 31 January 2025

கண்பார்வை பறி போகிறதா?

இதனை நாம் அதிர்ச்சியான செய்தியாகத்தான்  எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏனோ தானோ  என்று மேம்போக்காக படித்துவிட்டு  துடைத்துவிட்டுப் போகிற செய்தி அல்ல. 

நம் நாட்டில்  பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை கண்பார்வை பிரச்சனையால்  அவதியுறுகிறது  என்று  குழந்தைநல  கண் மருத்துவர் ஒருவர்  பெற்றோர்களை எச்சரித்திருக்கிறார்.

பெற்றோர்கள் இதனைக் கேட்டு சும்மா கடந்து போய்விட முடியாது.  ஒரு காலத்தில் இது போன்ற கண்பார்வை பிரச்சனையைப் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை. அதனால் ஏதோ வெவ்வேறு பெயரில் ஒரு கருத்தைச்  சொல்லி வந்தோம்.  மருத்துவர்கள்  பரம்பரை நோய்  என்றார்கள்  நாமும் ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் இன்றைய நிலை வேறு.  கைப்பேசிகள் மிக மிக ஆபத்தானவை. யாருமே நமக்குச் சொல்ல வேண்டியதில்லை.  நமக்கே தெரியும்.  ஆபத்து எனத் தெரிந்தும்  அதனைத்தான் குழந்தைகளின் கையில் கொடுக்கிறோம்.  ஒரு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள்.  அது தெரியும், இது தெரியும் என்கிற பெருமை. கடைசியில் கண்பார்வை தெரியுமா என்று யோசிப்பதில்லை. பார்வை பெற நீங்கள் செலவு செய்யத் தயார் ஆனால் கண்,  பார்வைத்தர தயாரா என்றெல்லாம் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை.

பெற்றோர்களே இன்றைய நவீன உலகில் மிகவும்  தரமான கண்டுபிடிப்பு கைப்பேசிகள் தான்.  நினைத்தால் உலகில் எந்தப்பகுதிகளுக்கும் பேசலாம். செய்திகளை உடனே  தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் அது வேறொரு வகையில் நஞ்சாகவும் மாறும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது அதில் ஒன்று கண் பறிபோவது.  அதுவும் இளசுகள் கண் பார்வையை இழந்தால்?  வருங்காலம் என்பது அவர்கள் தானே.

ஆனால்  என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும்,  நீங்கள் சரியான் முடிவை  எடுக்காவிட்டால்,  என்ன சொல்லியும் எந்தப் பயனும் இல்லை.  இப்போது மென்மையாகத்தான்  எச்சரிக்க விடுக்கப்பட்டிருக்கிறது.  பெற்றோர்கள் தான் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thursday, 30 January 2025

யார் வீட்டு பணம்?

சமீபத்தில் பிரதமரின் அறிவிப்பு என்பது ஒன்றும் அதிசயமானது அல்ல. அவர் ஏற்கனவே பாலஸ்தீன நாட்டிற்குப்  பல உதவிகள் செய்திருக்கிறார். அதனை மனிதாபிமான  உதவி என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காஸாவில் வாழும் மக்கள்  சாதாரண வாழ்க்கையை வாழும் மக்கள் அல்ல . பிறக்கும் போதே குண்டு சத்தம், துப்பாக்கி சத்தம்,  விமானங்கள் சத்தம் - இப்படித்தான் அவர்கள் வாழ்ந்து பழகியவர்கள். அமைதி என்பது அவர்கள் நாட்டில் என்றுமே இருந்தது இல்லை.  சமீபத்தில் மலேசியாவில் கூட அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்தோம். அதுதான் அவர்களின் இயல்பாக அமைந்துவிட்டது.

பிரதமர் அவர்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறார். அது மனிதாபிமானம் தான். 

பெரிகாத்தானைச் சேர்ந்த  தலைவர்களில் ஒருவரான சஞ்சீவன்  சரியாகத்தான் கேட்டிருக்கிறார்.  அது இந்தியர்களின் குரலாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.  நாட்டில் இந்தியர்களிடேயான  குறை பாடுகள்  ஏராளம்.  அவர் கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகளை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.  இங்கு உள்ளூரில்  அவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத சூழலில் அதற்குள் காஸாவிற்குத் தாவுவதா என்கிற  ஆதங்கம் தான் அவர் எழுப்பிய கேள்விகள்.

இங்குள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் எங்கோவுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதா என்பது சரிதான். அங்குப் போய் கோடிக்கணக்கில் செலவு செய்து பள்ளிக்கூடம், மருத்துவமனை, மசூதி இவைகளை எல்லாம்  கட்டுவதும்  பிழையில்ல.  ஆனால் நாளை இஸ்ரேல்காரனிடம்  கொஞ்சம் வம்பிழுத்தால்  அவன் குண்டைப்போட்டு அனைத்தையும் தவிடுபொடியாக்கிடுவான். இதை வளைகுடா நாடுகள் அறிந்திருக்கின்றனர்.

அதனால் தான் அந்தப் பணத்தை உள்ளூரில் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்தால் இங்கு நமக்குக் கொஞ்சம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது தான்  சஞ்சீவன்  பேச்சின் மூலம்  நாம் தெரிந்து கொள்வது.  இப்போது நாம் நினைப்பதெல்லாம்  காஸாவுக்குப் போகும் பணம் மலேசிய இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம்  என்று சொல்லப்படுவதை தவிர்க்க முடியாது.

இங்கு நாம் ஒதுக்கப்பட்டாலும்  நமது பணம் அங்கேயாவது பயன்படுத்தப்படுகிறதே  என்று நாம் மகிழ வேண்டியது தான்!

Wednesday, 29 January 2025

சும்மா தமாஷ் பண்ணாதீங்க!

புனிதன் சார்! நீங்கள் பாவம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது! இது அரசியல் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்!

ம.இ.கா. விலிருந்து விரட்டப்பட்டவர் என்பதைத்தவிர  வேறு எந்தவொரு தகுதியும் உங்களுக்கு இல்லை.  அரசியலில் நீங்கள் இன்னும் ஸிரோவாகத்தான் இருக்கிறீர்கள்.  உங்களை இன்னும் இந்திய  சமுதாயமே  நீங்கள் யார் என்று இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அப்படியிருக்க பினாங்கு உங்கள் தலைமையில் அமைய வேண்டுமென்றால் .....?  இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?

கெராக்கான் கட்சியோடு உங்களை ஒப்பிட முடியுமா? அதுவும் சீனர்களின் கட்சி தான்.  அவர்கள் இன்னும் பலம் வாய்ந்த கட்சி தான்.    டி.ஏ.பி. க்கு மாற்று கட்சி என்றால் அது கெராக்கான் தான். வேறு யாரும் இல்லை. சீனர்கள் இந்த இரண்டு கட்சிகளில்  ஏதோ ஒன்றைத் தான் ஆதரிப்பார்கள். பினாங்கு மாநிலம், அது சீனர்களின் மாநிலம். அது மாறுவதற்கான வாய்ப்பு இல்லை.

புனிதன் சார்! உங்கள்  MIPP  யின் நிலையை எண்ணிப்பருங்கள்.  உங்களையோ உங்கள் கட்சியையோ  உங்கள் வட்டத்தைத் தவிர  யாராவது அறிவார்களா?  இந்தியர்களே அறியமாட்டார்கள்.  அப்படியொரு கட்சியை வைத்துக் கொண்டு  நீங்கள் இப்படி தெனாவெட்டாகப் பேசுவது ஒன்றும் புரியவில்லை.  நீங்கள் ஏன் ம.இ.கா. விலிருந்து  விரட்டப்பட்டீர்கள்  என்பது இப்போது தான் புரிகிறது!  உங்களுடைய ஆசை நமக்குப் புரிகிறது.  ஆனால்  மக்களின் ஆசை உங்களுக்குப் புரியவில்லையே!  
 
சார்!  சும்மா தமாஷ்  பண்ணிக்கொண்டு, கோமாளித்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.  ம.இ.கா. உங்களுக்குச் செனட்டர் பதவி கொடுக்கிறது என்றால் உடனே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று  அங்கே ஓடிவிடுவீர்கள். இது தான் உங்களைப் பற்றியான இந்தியர்களின் கணிப்பு.

உங்கள் கட்சி எந்த வகையிலும் இந்தியரிடையே அறியப்படாத ஒரு கட்சி.  நீங்கள் தான் பெரிகாத்தானில் இணைந்த முதல் இந்திய கட்சி என்பதால்  உங்களுக்குத் தான் முதலிடம் என்று நீங்கள் நினைப்பது போல்  தோன்றுகிறது.  ஆனால் அரசியல் அப்படியல்ல.  யாரிடம் செல்வாக்கு உண்டு  என்று பார்ப்பது தான்  அரசியல்.  உங்களுக்கு யாரும் புத்தி சொல்ல முடியாது.  அப்படிச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

உங்களின் பெரிக்காத்தான் தலைமைத்துவம்  என்ன முடிவு எடுக்கிறதோ  அதுவரை நீங்கள் பொறுப்பது தான் நல்லது.  கோமாளித்தனத்தை நிறுத்தி வையுங்கள்!

Tuesday, 28 January 2025

கேஜே சொன்னது சரிதான்!


முன்னாள் சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுதீன் சரியானநேரத்தில் சரியான கருத்தைக் கூறியிருக்கிறார்.  மற்ற முன்னாள் அமைச்சர்களோ அல்லது இந்நாள் அமைச்சர்களோ இதனைக் கூறியதில்லை. அவர்கள் அறியவும் இல்லை. ஆனால் பிரதமர் அன்வார் அறிந்திருக்கிறார்.

கைரி கூறியது:"மலாய்க்காரர் அல்லாதோரின் வலிகளுக்கு  நிவாரணம் அளித்தால் NEP  கொள்கை மீதான  அவர்களின் அதிருப்தி தணியும்."

ஆமாம் அதைத்தான் காலங்காலமாக நாம் கூறி வருகிறோம்.  மலாய்க்காரர்களுக்கு எத்தனை சலுகைகள் வேண்டுமானாலும் கிடைக்கட்டும்.  ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை எங்களிடமிருந்து பறிப்பதைத்தான்  நாங்கள்  அதிருப்தி அடைகிறோம்.  எங்கள் மாணவர்கள் இரவும் பகலும் படித்து  அனைத்துப் பாடங்களிலும் "ஏ" வாங்கிய பின்னரும்  அவர்களின் உயர்கல்விக்குத் தடையாக இருந்தால்  அவர்கள் என்ன தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியர்களைப் பொறுத்தவரை கல்வியும், பொருளாதாரமும் எட்டாக்கனிகள் தாம்.  இரண்டுமே எட்டாத நிலை என்றால் அதற்கு  அரசாங்கமே தான் தடை போடுகிறது. அப்படியென்றால் நீங்கள் படிக்கவும் வேண்டாம் பொருளாதாரமும் பவேண்டாம் என்று தானே சொல்ல வருகிறீர்கள்? 

ஒரு  சாதாரண ஏழை இந்தியன்  சாலை ஓரங்களில் சிறு சிறு கடைகள் கூட போட முடிவதில்லை. நன்றாகக் கடை நடக்கும் நாள்களில்  நகராண்மைக் கழகம்  அனைத்தையும் உடைத்துவிட்டுப் போய்விடுகிறது. ஒரு சில மாதங்கள் கழித்துப் பார்த்தால்  அங்கு மலாய் நண்பர்களின் கடைகள் நடக்கின்றன.  இதனை என்னவேன்று சொல்லுவது?

இந்தியர்களின் கல்விக்கும் தடை,  அவர்கள் செய்யும் சிறு சிறு தொழிலுக்கும் தடை  அவர்கள் வேலைகளையும் வெளிநாட்டவர்கள் பறித்துக் கொண்டனர் அங்கும் தடை - அப்படியென்றால் இந்தியர்களின் வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்?  அரசாங்கம் பல வழிகளில் இந்தியர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

கைரி சொல்லுவது போல் நமது இனத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை, கொடுக்க வேண்டியவைகளைக்  கொடுத்தால்  பிரச்சனைகள் குறையும். இல்லாவிட்டால் இந்தியர்கள் பொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அதுவே ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும். 

Monday, 27 January 2025

சீன புத்தாண்டு


சீனர்களின் புத்தாண்டு வந்துவிட்டது.

ஏதோ இரண்டு நாள் விடுமுறை என்று மட்டும் நினைத்துவிட்டு  "அவ்வளவு தான் சீனர் புத்தாண்டு' என்று  முடித்துக்கொண்டு விடாதீர்கள்.  சீனர்களும்  மற்ற இனத்தவர்களைப் போல  குடியேறிவர்கள் தான்.  ஏறக்குறைய எல்லாருமே ஒரே காலகட்டம்.

ஆனாலும் அவர்களின் வளர்ச்சி  என்பது பூதாகாரகரமான  வளர்ச்சி.  ஆனால் நாம் வளரவேயில்லை. நாட்டின் அடிமட்ட வளர்ச்சியில் இருக்கிறோம்.  நாம் வளரக்கூடாது  என்று  யாரும் சொல்லவில்லை.  யாரும் தடையாக இல்லை.  

பொருளாதாரத்தில் முன்னேற அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.  முன்னேற வேண்டும் என்னும் துடிப்பு அவர்களிடம் இருந்தது.  நம்மிடம் அது இல்லை.  மிக மிக அண்மையில் தான்  நாம் வளர வேண்டும் என்கிற எண்ணமே  நமக்கு வந்திருக்கிறது.

சீனர்களில் பெரும்பாலானவர்கள்  வியாபாரத்துறையைச் சார்ந்தவர்களாக  இருக்கிறார்கள். போட்டி பொறாமை என்பதை  அவர்களிடம் பார்க்க முடியவில்லை.  புதிதாக ஒரு சீனன் வியாபாரத்திற்கு வந்தால்  அவன் அந்தப் புதியவனை  ஏற்றுக்கொள்கிறான். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீண்ட நாள்களாக அவர்கள் வியாபாரத்தில் இருப்பதால்  அப்படியொரு பக்குவத்திற்கு அவர்கள்  வந்துவிட்டார்கள்.  நம்மால் முடியவில்லை.  நாளடைவில் நமக்கும் வந்துவிடும்.

துறைக்கு நாம் புதியவர்களாக இருப்பதால்  சில பல குறைகள் நம்மிடம் உண்டு. ஆரம்பம் அப்படித்தான் இருக்கும்.  காலப்போக்கில் சரியாகிவிடும்.  நம்மிடம் இருக்கும் இந்த கசப்புகளை  ஒதுக்கிவிட்டு  நாம் சீனர்களின் வியாபார உத்திகள், திறமைகள், கொடுக்கல் வாங்கல்  போன்றவைகளை அறிந்து புரிந்து கொள்வது  நமது முன்னேற்றத்திற்கு நலம் பயக்கும்.

தொழில் செய்வது எப்படி? என்று உலகத்தைச் சுற்ற வேண்டாம். நம் பக்கத்தில் இருக்கும் சீனர்களைப் பார்த்தாலே போதும். வந்து விடும்! நமக்கு அவர்கள் ஒரு படிப்பினை!

Sunday, 26 January 2025

உயர்கல்வி மறுக்கப்படுவதா?
















iஇந்திய மணவர்களைப் பற்றி அரசாங்கத்தின் கருத்து என்னவாக இருக்கும்?  அவர்கள் சோம்பேறிகள், கல்வி கற்க  முடியாத  மூடர்கள் என்றா கருத்துக் கொண்டிருக்கிறார்கள்?  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. 

நமது திறமை என்னவென்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.  ஒரு காலகட்டத்தில்  எல்லாத் துறைகளிலும் நமது கல்விமான்கள் தான் நிறைந்திருந்தனர்.  அப்படியிருக்க இப்போது மட்டும்  நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்?

திறமைமிக்க ஓர் இனத்தை அவர்கள் கல்வி கற்கத்  தடையாக இருப்பது யார்? அதுவும் கல்வி என்பது ஒரு சமுதாயத்திற்கு எந்த அளவு முக்கியம்  என்பதை அறியாதவர்களா அரசாங்கத்தினர்?   நம்மிடம் உள்ள பலவீனம் என்பதே பொருளாதாரம் தான். பொருளாதாரம் இருந்தால் தனியார் கல்வி நிலையங்கள் கை கொடுக்கும்.  பொருளாதாரத்தில்  பலவீனமாக இருக்கிறோம் என்பதால்  தான்  நமக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது.

கல்வியின் முக்கியத்துவத்தை  நாம் அறிந்திருக்கிறோம்.  ஆனால் மேற்கல்வி பயில நமது பொருளாதார நிலை   நம்மைத் தடுக்கிறது. இன்றைய நிலையில்  பல பெற்றோர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டு நிற்கின்றனர்.  அப்படியே வேலை இருந்தாலும் குறைந்த சம்பளம்  வாங்கும் அவர்களால் பிள்ளைகளின் கல்வியில் சரியான கவனத்தைச் செக்லுத்த முடிவதில்லை.

இந்திய மாணவர்கள் மற்ற  இன மாணவர்களோடு கல்வியில் சம அளவில்  இருக்க வேண்டுமென்றால்   அதனைச் சரிசெய்ய அரசாங்கத்தால் மட்டுமே முடியும். இன்றைய நிலையில் அரசாங்கம். உயர்க்கல்வி என்று வரும்போது, இந்திய மாணவர்களைப்  புறக்கணிக்கிறது என்று அப்பட்டமாகத் தெரிகிறது.  எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது புரிகிறது.

எல்லா சமுதாயமும்  முன்னேற்றம் அடையும் போது  ஒரு சமுதாயத்தினர் மட்டும் விடுபட்டால்   அதனால் வரும் விபரீத விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அரசாங்கம் அறியும்.  நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தொடர்ந்து  அரசாங்கம் புறந்தள்ளுகிறது.  பாலஸ்தீனர்களுக்குப் பள்ளிகள் கட்டுவதும், மருத்துவமனைகள் கட்டுவதும்  தவறு என்று மனிதாபிமானம்  உள்ளவர்கள் சொல்லமாட்டார்கள்.  ஆனால் உள்நாட்டைப்  புறக்கணித்துவிட்டு  அங்குப் போய் கட்டுவது  மனிதாபிமானம் அல்ல.  இங்குள்ள ஏழ்மையைப் போக்க வேண்டும். வறுமையை ஒழிக்க வேண்டும். தனக்குப்பின் தான் தான தர்மம். 

இங்குள்ள மக்களுக்குச் சரியான பாதயைக்  காட்டுங்கள்.  நாங்களும் முன்னேற வேண்டும். அதுவும் குறிப்பாகக் கல்வியில்.


Saturday, 25 January 2025

குடியைத் தவிர்ப்போமே!


 குடித்துவிட்டு கார்களை ஓட்டாதீர்கள் என்று சொல்லுவதற்குக் கூட இப்போது பயப்பட வேண்டியுள்ளது.

காரணம் குடிக்கவே வேண்டாம் என்று சொல்லுகின்ற நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது அது என்ன "குடித்து விட்டு" " இப்போது நமது இளைஞர்கள் லாரி ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். லாரி, பேருந்துகள், வாடகைக் கார்கள் - இதெல்லாம்  ஓட்டுவதை நாம் குறைசொல்லவில்லை.

ஆனால்  இங்கிருந்து தான் அதிக குடிகாரர்கள் உருவாகிறார்களோ என்கிற ஆதங்கம் நமக்கு உண்டு. அதுவும் குறிப்பாக லாரி ஓட்டுகிறார்களே  இவர்கள் குடியின் பிடியில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ  என்று நினைக்கத் தோன்றுகிறது.  

அவர்களை மட்டும் சொல்லவில்லை இப்போதைய இளைஞர் பட்டாளமே  அப்படித்தான்  இருக்கின்றது என நம்ப வேண்டியிருக்கிறது. இதோ எனக்குக் கிடைத்த ஒரு செய்தி. சமீபத்தில் முன்னாள் பள்ளி மாணவர்  கூட்டம்  ஒன்று நடந்தது.   கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் வங்கியில் வேலை செய்கின்றனர். ஒரு சிலர் லாரி ஓட்டுநர்கள். பெண்கள் அனைவருமே ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர்.  இந்த ஆண்கள் மட்டும்  கூட்டத்திற்குக் கலந்து கொள்ள எப்போது காரில் கால் வைத்தார்களோ அப்போதே குடி, குடி என்று  கும்மாளம் போட  ஆரம்பித்து விட்டனர்!.  கூட்டத்திலும் அதே பல்லவி. கடைசியில்  பெண்களே அவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நிலைமை.  நல்ல வேளை எல்லாமே கட்டுப்பாட்டுக்கள்  இருந்தன.

இது தான் நமது இளைஞர்கலின் இன்றைய நிலைமை.  படித்தவன், படிக்காதவன் என்கிற பாகுபாடு இல்லை.  குடிப்பதில் தான் அவர்களுக்குச்  சுகம் கிடைக்கிறது என்றால்  என்ன சொல்ல?  அனைவரும் குடும்பஸ்தர்கள் தான்.  ஆனால் அறிவில்லையே! பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம், குடும்பம்  இது பற்றியெல்லாம் அவர்கள் நினைப்பதில்லையே.

நாம் குடிகாரச் சமூகம் என்கிற அடையாளத்தை விட்டுவிட யாரும் தயாராக இல்லையே. அந்தக்காலம் எப்படியோ. ஆனால் இந்தக் காலத்தில் அப்படி இருக்க முடியுமா?  அப்படியென்றால் வருங்காலம் எப்படி இருக்கும்?  என்ன செய்ய?  தலையைச் சுற்றுகிறது!

நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கையுண்டு. நல்லதே நடக்கட்டும்!

Friday, 24 January 2025

எது உண்மை?

உணவகங்களில் ஆள் பற்றாக்குறை  என்பது இன்று நேற்றல்ல நீண்ட காலமாக  உள்ள ஒரு பிரச்சனை. அதாவது தீர்க்க முடியாத  பிரச்சனை.

இவர்களுக்குத் தேவை எனச்  சொல்லப்படுபவர்கள் எல்லாம்  இந்தியத் தொழிலாளர்கள் தாம். அதிலும் குறிப்பாகத் தமிழகத் தொழிலாளர்கள் தாம்/ அது ஏன் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது  இவர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றலாம்  என்பது மிக முக்கியம் வாய்ந்தது.  ஆமாம் தமிழகத் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் ஏமாளிகள் என்று  முத்திரைக் குத்தியவர்கள்   மலேசிய உணவக உரிமையாளர்கள்!  எத்தனையோ தொழிலாளர்களுக்குப் பல துன்பங்களை விளைவித்தும்   எந்த ஒரு உணவக முதலாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?  அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை!  கொஞ்சம் விழித்தவர்கள்  எப்படியோ பிழைத்துக் கொண்டனர்.  பலர் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாய் ஊர் திரும்பினர்.

அரசாங்கம் அனுமதி கொடுத்த போது  உணவக உரிமையாளர்கள் ஆடாத ஆட்டம் காட்டினர்.  நாம் எல்லா உரிமையாளர்களையும்  குற்றம் சாட்டவில்லை.  ஒரு சிலர் பிறந்ததிலிருந்தே  மற்றவர்களைத் துன்புறுத்துவதில்  இன்பம் காண்பவர்கள்.  அவர்கள் இருக்க வேண்டிய இடம் வேறு.  உணவகத் தொழிலில் உள்ளவர்கள் ஆட்டம் காட்டினால் வேலை செய்யும் தொழிலாளர்களும் தங்களது ஆட்டத்தைக் காண்பிப்பர்! அத்தோடு நீங்கள் கோவிந்தா! போட வேண்டியது தான்/   தலை தூக்க முடியாதபடி  உங்களைக் கவிழ்த்து விடுவார்கள்!

நமக்குத் தெரிந்தவரை இப்போது தமிழகத்  தொழிலாளர்கள் மலேசியா பக்கம் வருவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள் எனச் சொல்லப்படுகின்றது.  அவர்கள்  வளைகுடா நாடுகளுக்குச் செல்வதையே விரும்புகிறார்களாம்.  அது அவர்களின் விருப்பம்.

இன்று   புலம்புவர்கள்  அன்று கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாம். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் தான் ஞாபகத்திற்கு வருகிறது!

Thursday, 23 January 2025

பாஸ் கட்சியுடன் கூட்டா?


 மலேசிய அரசியலில் என்னன்ன மாற்றங்கள் வரும் என்பதை  நம்மால் யூகிக்க முடியவில்லை.

இதற்கெல்லாம் ஒரே காரணம் தான். சென்ற தேர்தலில் பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பயங்கர பல்டி அடித்தது தான்!  அவர் செய்த தில்லுமல்லுகளை நம்மால்  இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பது உண்மை தான்.  கல்வி, பொருளாதாரம்  என்று வரும்போது அவர்  நம்மை புறந்தள்ளி விட்டார். சுருக்கமாகச் சொன்னால் இந்தியர்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பவில்லை. பழங்குடியினரோடு நம்மையும் சேர்ப்பதில் தான் அவர் மும்முரம் காட்டுகிறார்.

ஆனால் அதற்காக பெரிகாத்தான்   கூட்டணியில்  கைக்கோர்ப்பது  சரியான முடிவுதானா?  முகைதீன் இந்தியர்கலுக்குச் சார்பாக இருக்கப்போவதில்லை என்பது தெரியும். பாஸ் கட்சியோ மதத்திற்கு அதிக முக்கியத்துவம்  கொடுக்கும் கட்சி  அவர்கள் ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் சார்பு  உள்ளவர்கள். இதை வைத்துப் பார்க்கும் போது  அவர்களோடு எப்படிக் கூட்டணி வைக்க முடியும்?

உரிமை கட்சிக்கு நாம் சொல்ல வருவதெல்லாம்  இன்னும் கொஞ்சம்  நாள் பேச்சுவார்த்தைகளைத் தள்ளி வையுங்கள் என்பது தான்.  பிரதமர் அன்வாருக்கு  இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்கள்.  அவரும் மாற வேண்டிய  நிலை வரலாம்.  இப்படியே அவர் போய்க் கொண்டிருப்பார்  என்று சொல்வதற்கில்லை.

நம்முடைய எண்ணமெல்லாம்  யார் பதவிக்கு வந்தாலும் இப்போது அன்வார் என்ன செய்கிறாரோ அதைத்தான் அவர்களும் செய்யப்போகிறார்கள் என்பது தான். நம்முடைய அரசியல்வாதிகளிடம் இனப்பற்றோ, மொழிபற்றோ  என்பது இல்லை. அவர்கள் சமுகத்தைத் தான் பார்க்கிறார்கள்.  தமிழர்களை அலட்சியம் செய்கிறார்கள்.

அன்வார் சரியான ஆள் இல்லைதான் ஆனால் அந்தப் பக்கமும அப்படி ஒன்றும் சரியான ஆள்  இல்லையே!

Wednesday, 22 January 2025

இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள்

தமிழ் திரையுலகில்  முதன் முதலாக இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் யார்  என்கிற பேச்சு அவ்வப்போது நம்மிடையே எழுவது வழக்கம்.  அவர் நடிகர் அல்ல நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் நடித்த "பக்த நந்தனார்"  என்கிற படத்துக்கு ஒரு இலட்சம்  ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.   ஒரு சுவாராஸ்யமான செய்தி. அப்போதெல்லாம் திரைப்படங்கள்  எடுக்க கையில் 30,000 ரூபாய் இருந்தால் போதுமாம். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் அவர்  ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.  படமும் செம ஓட்டமாம்..  


நடிகவேள் எம்.ஆர். ராதா பற்றி  தெரியாதவர் யார்?  எந்த  வேடத்திலும் நடிக்கக் கூடியவர்.  எந்த வேடத்தில் நடித்தாலும்  அவருடைய  சொந்த சரக்குகளையும்  "திணிக்கக்"   கூடியவர்   அவர் நடித்த எல்லாப் படங்களிலும் சீர்திருத்த கருத்துகளுக்குப் பஞ்சமில்லை. அவர் நடித்த முதல் படமான ரத்தக்கண்ணீர்  படத்திற்கு வாங்கிய சம்பளம் 1,25,000 ரூபாய்.  அவருக்கு எவ்வளவு சம்பளம்  கொடுக்க வேண்டும்  என்று தயாரிப்பாளர் அறியாத நிலையில்  நடிகவேள் அவர்களே கேட்டு வாங்கிய சம்பளமாம்!  அவருடைய பேச்சுக்கு யார் எதிர்பேச்சு  பேசுவார்? ஒரு சுவாராஸ்யமான  செய்தி என்னவென்றால் அவருக்கு எழுத, படிக்கத் தெரியாதாம்>  ஆனால் அவர் ஒரு படிக்காத மேதை என்பதில் ஐயமில்லை

அடுத்து நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு . தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரையுலைகை  ஒரு கலக்குக் கலக்கியவர்.  அவர் நடித்த "சகோதரி" என்கிற திரைப்படத்திற்கு  ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியவர். அதற்கான காரணம்  படம் ஆரம்பத்தில் தயாரான போது  தயாரிப்பாளருக்குப் படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அப்போது நகைச்சுவையில் பிரபலமாக இருந்த சந்திரபாபுவை அணுகி அவருக்கென்று தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைத்து  படத்தை வெற்றிபெறச் செய்தாராம் தயாரிப்பாளர். அந்த நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவரே சந்திரபாபு தானாம்!  அதற்கான சம்பளம்  அவருக்கு ஒரு இலட்சம்  ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.


  குறிப்பு:           இந்த விவரங்களைச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்  இப்படி பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். நீண்டகாலமாக  தமிழ்  திரையுலகில்  இருப்பவர்.  சினிமா உலகைப்பற்றி முற்றும் அறிந்தவர். எண்பது ஆண்டுகள் தமிழ் சினிமா என்பது பற்றி புத்தகம் போட்டவர்.  ஆக, அவர் கொடுத்த ஆதாரங்களின் படி  இந்தச் செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Tuesday, 21 January 2025

பேராசிரியர் வி.என்.பார்த்திபன்

கல்வி கற்பதற்கு என்ன தான் எல்லை?  எல்லாவற்றுக்கும் எல்லைகள் உண்டு. ஆனால் கல்விக்கு ஏது எல்லை என்று நிருபித்தவர் மேலே காணப்படும் பேராசிரியர் பார்த்திபன்.

எல்லையே இல்லை என்பதைத்தான் அவரின் கல்வியின் மீதான தாகத்தைப்  பார்க்கிறோம்.   அவரின் வயது 56. கடந்த 30 ஆண்டுகளாக அவர்  படித்துப் பெற்ற பட்டங்களின் எண்ணிக்கை 145.  உலகளவின் வேறு யாரும் இத்தனை பட்டங்களைப்  பெற்றிருப்பார்களா? தெரியவில்லை!

அவரின் குடும்பப் பின்னணியைப் பார்த்தால்  அப்படி ஒன்றும்  பெரிதாகச் சொல்வதற்கில்லை. சாதாரண குடும்பப் பின்னணி தான். தெருவிளக்கில்  படித்தவர் தான். நம்மைப் போலவே கணிதம் என்றால் பிடிக்காத பாடம் தான்.  ஆனால் அதனையெல்லாம் புறந்ததள்ளிவிட்டு  கருமமே கண்ணயிருந்து அவர் சாதனைகளைப்  புரிந்திருக்கிறார்.  

இத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் இப்போது அவர் அடுத்த பட்டம் பெறுவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.  அவர் மனைவியும் ஒன்பது பட்டங்களைப் பெற்றவர்  என்கிறார்கள்.  நல்லவேளை அத்தோடு நிறுத்திக் கொண்டார். குடும்பப் பொறுப்பு என்று ஒன்று  இருக்கிறது அல்லவா?

நமது மாணவர்களை நினைத்துப் பாருங்கள்.  அல்லது எந்த மாணவராக இருந்தால் என்ன? நினைத்துப் பாருங்கள்.  ஒரு பட்டம் பெறுவதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது என்கிறார்கள்!  மிக மிக ஆர்வமுள்ளவர்கள் இரண்டோ, மூன்றோ இருக்கலாமே தவிர அதற்கு மேல் வாய்ப்பில்லை.

கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்குத் தான்.  பேராசிரியர் தனது அறிவாற்றல்  பல துறைகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனைச் செயல்படுத்துகிறார். இன்னும் எத்தனை துறைகளில் அவர் பட்டம் பெறப்போகிறார்  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேராசிரியர் பார்த்திபன் அவர்களின் கனவுகள் அனைத்தும்  நிறைவேற  இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Monday, 20 January 2025

MIED Care

                                                                        
 ம.இ.கா.வின் கல்வி நிறுவனமான  MIED, ஏம்ஸ்ட்  பல்கலைக்கழகத்தில் கல்வி பயில  பல்வேறு உயர்கல்விக்கு  வழிவகுத்திருக்கிறது.

பாராட்டத்தான் வேண்டும்.  காரணம் நமது அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்கள் விரும்பும் துறைகளில் வாய்ப்புகளைக் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. தகுதி இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கவில்லை என்றால்  அது மாணவர்களை மட்டும் அல்ல  சமுதாயத்தையும் பாதிக்கும்.

அந்த சூழ்நிலையைச் சமப்படுத்த  ஏம்ஸ்ட் பலகலைக்கழகம்  உதவும் என்கிற நம்பிக்கை இப்போது தான் பிறந்திருக்கிறது. மருத்துவக் கல்வி என்றால் அரசாங்கம் வாய்ப்புக் கொடுப்பதில்லை. அதனால் நமது சமுதாயத்திற்குத்தானே  பாதிப்பு?  இன்றைய நிலையில் தனியார்  பல்கலைக்கழகங்கள் தான் உதவுகின்ற நிலை. இப்போது பல நிறுவனங்கள் குறைந்தபட்சம் கல்விக்கடனுதவி  கொடுத்து உதவுவது  ஆறுதலாக இருக்கிறது.

அவர்களோடு MIED  யும் சேர்ந்து கொண்டு இருப்பது வரவேற்கக் கூடியதே. வாய்ப்புகள் கொடுக்கின்றன, உபகாரச் சம்பளமும் கொடுக்கப்படுகின்றது, பல்வேறு துறைகளில் பயிலவும்  வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன - பாராட்டலாம்.  முன்பெல்லாம் ஏம்ஸ்ட் சீனர்களுக்குத்தான்  என்கிற குற்றச்சாட்டு  ஒருவேளை இப்போது குறைகிறதோ, தெரியவில்லை!

எது எப்படி இருந்தாலும்  குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போவதில் யாருக்கும் பயனில்லை.  இப்போது, இன்றைய நிலையில், வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்  என்பது தான் நமது ஆலோசனை. இந்திய மாணவர்கள் அனைவருக்குமே அரசாங்கப் பல்கலைக்கழகங்களில்  இடம் கிடைக்கப் போவதில்லை.  அவர்களுடைய கொள்கையே வேறு. மெரிட் என்பார்கள், கோட்டா என்பார்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வார்கள்! அப்படித்தான் அவ  ர்களது கொள்கை இருக்கும்.  அரசாங்கத்தை எதிர்பார்த்தால்  எதுவும் நடக்கப்போவதில்லை.

நமது மாணவர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்  வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான். தனியார் நிறுவனங்கள் என்றால்  கல்விக்கடன் பெறுங்கள். உபகாரச் சம்பளத்திற்குத் த்குதியானவர்  என்றால் அதற்கும்  மனு செய்யுங்கள். இன்னும் என்னன்ன இருக்கின்றனவோ அத்தனைக்கும்  மனு செய்யுங்கள். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும்  பின்வாங்கி விடாதீர்கள்.  ஒரு வாசல் மூடினால் ஒன்பது வாசல்கள் திறந்திருக்கும் மறந்து விடாதீர்கள்.

ஏம்ஸ்ட் பலகலைக்கழகம் இன்னும் இது போன்ற பிற பல்கலைக்கழகங்கள்  அனைத்தும் நமது மாணவர்களுக்காக  காத்திருக்கின்றன.

நல்லதொரு எதிர்காலம் நமக்குண்டு/ வாழ்த்துகள்!

Sunday, 19 January 2025

நிரந்தர தீர்வு தேவை!

தைப்புச திருவழாவிற்குப் பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறை என்பது  நமக்குத் தெரியும்

ஆனால் கெடா மாநிலம் அதற்கு விதிவிலக்கு. அந்த மாநிலம் மட்டும் ஒரு  நிரந்தர தீர்வைக் கொடுக்கவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது.  ஏதோ ஒரு வகையில் அன்று ம.இ. கா. செய்த தவறு. இன்றுவரை  அதற்கு ஒரு நிரந்தர தீர்வைக்காண முடியவில்லை.

கெடா மாநிலம் பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலம்.  பாஸ் கட்சியைப் பற்றி நமக்குத் தெரியும். அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் இன்று பாஸ் கட்சியில்  இந்தியர் பிரிவு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  அவர்கள் சார்பில் ஓரு செனட்டர் கூட இருந்ததார். இப்போது தெரியவில்லை. ஆனால் இந்தியர் பிரிவு இருப்பது நமக்குத் தெரியும். 

ஒரு காலகட்டத்தில் மாநிலம் தேசிய முன்னணியின் கீழ் தான் இருந்தது. அப்போதும் அதற்கு விடிவு பிறக்கவில்லை.   இப்போது பாஸ் கட்சியினர். நிச்சயமாக அவர்கள் ம.இ.கா.வின் குரலுக்குச் செவிசாய்க்கப் போவதில்லை.  அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர்  இதனை ஏன் கையில் எடுத்துப் பேசக்கூடாது என்பது தான்.  அவர்கள் குரல் ஒருவேளை  எடுபட வாய்ப்புண்டு.  அவர்களுக்கும் நேரம் வரும். வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.  

அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம்  பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர்  இந்தப் பிரச்சனையை மேலிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்  என்பது தான். அந்தப் புண்ணியத்தை நீங்கள் தேடிக் கொள்ளுங்களேன்.  நீங்களும் இந்திய சமுதாயத்தின்  ஓர் அங்கம் தானே? அதனை ஏன் ம.இ.கா. தான் செய்ய வேண்டும்  என்று நீங்களும் நினைக்கிறீர்கள்?  யார் செய்தாலும்  அது இந்திய சமுதாயத்திற்குத் தானே?

பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவினருக்காக  இந்த வேண்டுகோள். பார்ப்போம!


Saturday, 18 January 2025

மித்ராவின் லாரி ஓட்டுனர் பயிற்சி

மித்ரா சமூக உருமாற்றுத் திட்டத்தின்  கீழ் லாரி  ஓட்டுனர் பயிற்சிக்கான  வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

லாரி ஓட்டுனர் என்பது சமூக உருமாற்றமா  என்று கேட்டால்  'பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளலாம்'  என்று  தான் சொல்லத்  தோன்றுகிறது.

இப்போதும் கூட எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்   இந்த வேலையில் சேர்வதற்குத் தான் முனைப்புக் காட்டுகின்றனர். ஆனால்  வேறு வகையான தொழிற்கல்வி பயில   வாய்ப்புகள் நிறையவே காத்துக் கிடக்கின்றன.  அரசாங்கம் பல தொழிற்கல்வி நிறுவனங்களை  அமைத்து நமது இளைஞர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்கல்வியில் மாணவர்கள் இன்னும் அதிக அளவில் பங்குப் பெறுவதே  அவர்களின் எதிர்காலத்திற்குச் சிறப்பாக அமையும்.

லாரி ஓட்டுவது என்பதை நாம் தாழ்வாக  நினைக்கவில்லை. எதிர்காலத்தில் நமது இளைஞர்கள்  அதிகம் லாரி  ஓட்டுனர்களாக மாறுவது  சரியானது தானா என்று நினைக்கும் போது  நெருடல் ஏற்படத்தான் செய்கிறது.  வேறு பல தொழில்களை அரசாங்கமே உருவாக்கிக் கொடுக்கும் போது  அதனைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதானே புத்திசாலித்தனம்  என்று நமக்குத் தோன்றுவதில் வியப்பு ஏதுமில்லை.  

'இது தான் எனக்குப் பிடித்த தொழில்' என்றால்  அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் வெளியே இன்னும் நூற்றுக்கான  பல கைத்தொழில்கள்  இருக்கின்ற என்பதை மறக்க வேண்டாம்.  மித்ரா வேறு தொழில்களிலும் கவனம் செலுத்த வேண்டும்  என்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்.

ஒரு வகையில் நாம் திருப்தியுறுகிறோம். காரணம் இந்தப் பயிற்சியின் மூலம் வருங்காலங்கலில் நமது இளைஞர்கள் லாரிகளின் மூலம் சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களும் அமையும்  என்கிற ஒரு திருப்தி உண்டு. அதனாலேயே இந்தத் பயிற்சியைப்  பாராட்டுகிறோம்.

வாழ்த்துகள்!

Friday, 17 January 2025

டயர்கள் கழன்று கொள்வதா?

                                      
சமீபகாலமாக தொடர்ச்சியாக இந்தச் செய்திகளைப் படிக்கிறோம். லாரிகளின் டயர்கள் கழன்று  போகின்றன, அதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

அத்தோடு இன்னொரு செய்தியும்  கூடவே வருகின்றது:  இது தான் மடானி அரசாங்கம்! என்கிற அடைமொழி. நாட்டில் எந்தத் தவறுகள் நடந்தாலும்  அதற்குக் காரணமானவர் பிரதமர் என்கிற குற்றச்சாட்டு. அது ஏன்? இதற்கு முன்னர் எப்போதோ ஒரு முறை நடப்பது  இப்போது  அடிக்கடி நடப்பதும் ஒரு காரணமாகும். 

நடக்கும் விபத்துகளும் அப்படி ஒன்றும் அலட்சியப்படுத்தக் கூடியதாக இல்லை.  மரணத்தை ஏற்படுத்துகின்றது.  அல்லது மேலே பாருங்கள்.  லாரி டயர் ஒன்று கழன்று வந்து ஒரு மனிதரை இடித்துத் தள்ளியிருக்கிறது. அவருக்கு முதுகிலும் கால்களிலும் நல்ல அடி. அது அவருக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

இது போன்ற சம்பவங்கள் முன்பெல்லாம் அங்கொன்று, இங்கொன்றாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது.  எங்கோ அதிகாரத்தில் உள்ளவர்கள் முற்றிலுமாக பொறுப்பு துறப்பு செய்துவிட்டார்களோ!  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

பொதுவாக சாலை விபத்துகள் எப்போதும்  நடப்புது தான்.  ஆனால் லாரி விபத்துகள்?  அதுவும் டயர்கள் கழன்று வந்து விபத்துகளை ஏற்படுத்துவது  நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  அது இப்போது சாலைகளில்  சர்வ சாதாரணமாக  நடந்து கொண்டிருக்கிறது!

இன்றைய நிலையில் நாம் பார்க்கும் போது  இது தொடரும் என்றே தோன்றுகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோன்றவில்லை. இதுவரை எடுக்காதவர்கள் இனி மேலா எடுக்கப் போகிறார்கள்?

கார் பயனீட்டாளர்கள் என்கிற முறையில் நாம் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம். லாரிகளின் பின்னால்  லாரியை ஒட்டிக்கொண்டு  போகாதீர்கள் என்பது தான். நம்முடைய பாதுகாப்பு நமக்கு முக்கியம். லாரிகளின் பின்னால் போய் நாம் ஏன் அடிபட வேண்டும்? பாதுகாப்பாகவே இருப்போம்.

Thursday, 16 January 2025

நாட்டுக்குப் பெருமையா?


                
சமீபத்தில் காத்தாரில் நடைப்பெற்ற  சிலம்பம் போட்டியில் மலேசிய அணியினர் சிறப்பாக விளையாடி 12 தங்கப்பதக்கங்களக் குவித்திருக்கின்றனர். ஆறு பேர்  - ஓர் ஆண் வீரரும் ஐந்து பெண்  வீராங்கனைகளும்  -  கலந்து கொண்ட இந்தப் போட்டியில் ஒவ்வொருவரும் தலா இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்று  நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர். 

அவர்களின் சாதனை நமது சமுதாயத்திற்குப் பெருமையே..   அவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார்கள்  என்பது உண்மையானாலும்  அவர்களது திறமையை  நாடு அங்கீகரிக்கிறதா என்பது ஐயத்திற்குரியதாகத்தான்  தோன்றுகிறது.  பன்னிரண்டு பதக்கங்களைப் பெற்றிருக்கும் நமது வீரர்களுக்கு  விளையாட்டுத்துறை அமைச்சு என்ன செய்திருக்கிறது  என்கிற கேள்வி எழுந்தாலும் வழக்கம் போல  தலையாட்டி விட்டுப் போக வேண்டிய  நிலை தான்!

இந்த நேரத்தில் பினாங்கு  இந்து அறப்பணி வாரியம் இந்த வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்திருப்பது  பாராட்டப்பட வேண்டிய  செய்தியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு ரொக்கமும் சான்றிதழும்  வழங்கியிருப்பது  ஆறுதலான செய்தி.  நமது வீரர்கள் - வீராங்கனைகள் மதிக்கப்பட வேண்டும்; போற்றப்பட வேண்டும்.   நமக்குள் பாராட்டப்படுவது போன்று  விளையாட்டுத்துறை அமைச்சும் அவர்களுக்குத் தக்க சன்மானங்கள் வழங்கி  கௌரவிக்க வேண்டும்.  விருதுகளும் வழங்க வேண்டும்.  வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். என். ராயர் இது போன்ற பிரச்சனைகளை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும்.

எல்லா காலங்களிலும் நம்மைப் புறக்கணிக்கப்பட்ட  சமுதாயமாகத்தான் அரசாங்கம் பார்க்கிறது. இந்த வீரர்களின் வெற்றி நாட்டிற்குத்தான் பெருமை. அந்தப் பெருமை தொடர்வதற்கு  அரசாங்கத்தின் பங்கு என்ன? 

Wednesday, 15 January 2025

பாதுகாப்பு இல்லையா?

குப்பை லாரிகள் குப்பைகள் தான் ஏற்றுகின்றன. அதை யாரும் குறையாக நினைக்கவில்லை. ஆனால் இந்த லாரி போன்று குப்பைகளை ஏற்றினால்  யார் வேண்டுமானாலும்  கேள்விகளை எழுப்பலாம்.

இப்படி பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை ஏற்றினால் அதனால்  விளையும் விபரீதங்களுக்கு யார் பொறுப்புகளை ஏற்பது?  யாருடைய பொறுப்பு என்பது கூட நமக்குப் புரியவில்லை.

இன்றைய நிலையில் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன.. அதுவும் லாரி விபத்துகள் நிறையவே ஏற்படுகின்றன.  என்னன்னவோ குறைபாடுகள் சொல்லப்படுகின்றன.  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  புஷ்பகோம் நிறுவனத்தில் ஊழல் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பொதுமக்களா  பொறுப்பு?  பொறுப்பில உள்ளவர்கள் பொறப்பற்று நடந்து கொண்டால் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வி எழுகிறது. 

இதோ மேலே  படத்தில் உள்ள லாரிக்கு எண்பட்டை இல்லை. அப்படியென்றால் இவர்கள் பொது சாலைகளைப் பயன்படுத்த முடியாது. ஆனால் லாரியால்   சாலைகளைப் பாயன்படுத்த முடிகிறது.  அது எப்படி?  நாம் கேள்வி கேட்பதால் எந்தப் பதிலும் கிடைக்கப் போவதில்லை. நாம் என்னதான் கேள்விகள் கேட்டாலும் நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும்.

இது போன்ற லாரிகள் அதுவும் போக்குவரத்துக்குப் பயமுறுத்தலாக  இருக்கும் லாரிகள் சாலைகளைப் பயன்படுத்துகின்றன.  மக்கள் நடமாடுகின்றனர்.  மற்ற போக்குவரத்துகளும் நடந்துகொண்டு தான்  இருக்கின்றன. ஆனால் இப்படி மிகவும்அபாயகரமான முறையில் லாரிகள் ஓடும்போது  மற்ற வாகனங்கள் ஓட்டுநர்களும் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு தான் சாலைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தினால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிகாரிகளுக்கு எப்போது நல்லகாலம் பிறக்குமோ அப்போது தான் பொதுமக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்! அதுவரை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே!

Tuesday, 14 January 2025

பொங்கலோ பொங்கல்!


                                                                 தமிழர் திருநாளாம்


                                                               பொங்கல் திருநாளில்


                                                           தமிழ் மக்கள் அனைவருக்கும் 


                                                           இனிய பொங்கல் வாழ்த்துகள்.


Monday, 13 January 2025

தோல்வியிலும் வெற்றியுண்டு!

எஸ்.பி.எம். பரிட்சையில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை.  அரசாங்கம் அவர்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு  பயிற்சிகளை வழங்குகிறது.

தொழில் பயிற்சிக்கென பல அரசாங்க  கல்லூரிகள் இயங்குகின்றன. அங்கும் சான்றிதழ், டிப்ளோமா  என்று வழங்கப்படுகின்றன.  அங்கு உங்களது  திறமைகளைக் காட்டினால் அங்கிருந்தும் மேற்கல்விக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  வாய்ப்பே இல்லை என்று சொல்வதற்கில்லை.  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத்தான்  தவறி விடுகிறோம். குற்றம் நம்முடையது தான்.

நம் மாணவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. அரசாங்கம் பல்வேறு பயிற்சிகள் கொடுத்தும் நமது மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. நம் மாணவர்கள் பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்கிற தேடல்  அவர்களிடம் இல்லை. நமது பெற்றோகளிடமும் இல்லை.  பெற்றோர்கள் "வேலைக்குப் போ!" என்று சொல்லுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.  ஆமாம், தோல்வி அடைந்தால் அடுத்த கட்டம் அது தானே?  அது தான் அவர்களின் புரிதல்!

பெற்றோர்களும் சரி, மாணவர்களும் சரி ஒன்றை உணர வேண்டும். அது சம்பள இடைவெளி தான்.  குறைந்தபட்சம் நீங்கள் நாற்பது ஆண்டுகள் வேலை செய்யப் போகின்றீர்கள். நீங்கள் தேர்ச்சி பெற்ற வேலையாள் என்றால் உங்கள் சம்பளம்  என்பது  உயர்ந்த நிலையில் இருக்கும். நீங்கள் B40 என்னும் பட்டியலில் வரமாட்டீர்கள்.  M40,  T20 பட்டியல் வரை உங்கள் வளர்ச்சி இருக்கும்.  நீங்கள் எந்தவொரு தேர்ச்சி பெறாதவராக  இருந்தால்  நீங்கள் என்றென்றும்  B40 அல்லது அதற்கும் கீழே தான் இருப்பீர்கள். நீங்கள் அனைவராலும் அலட்சியப்படுத்தப்படூவீர்கள்.  நீங்கள் காலாகாலமும்  உங்களை அடிமையாக்கி விடுவார்கள்.

நாம் சொல்ல வருவதெல்லாம் வாய்ப்புக்கள் இருக்கும் போது அதனை ஏன் தவறவிட வேண்டும் என்பது தான். பெரும்பாலான தொழிற்பயிற்சிகள் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், முன்று ஆண்டுகள் வரை போகலாம்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சிகள் உங்களை வெளிநாடுகளுக்கும்  கொண்டு செல்லும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

தோல்வி அடைந்தாலும் வெற்றி தான் உங்கள் இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்.

Sunday, 12 January 2025

சட்டவிரோத வியாபாரிகள்!


 வெளிநாட்டினர் நம் நாட்டில் நிரந்தரமாகக் தங்கிவிடுவதும் இங்கு வியாபாரம் செய்வதும் பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரியவில்லை. அது எப்படி என்பது தான் நமது  கேள்வி.  மக்கள் தாங்களாகவே சில முடிவுகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று  வெளிநாட்டவர் இந்நாட்டில் எந்தத் தொழிலையைம் செய்யலாம். அதற்கு அரசாங்கம் எந்த மறுப்பையும் சொல்லப் போவதில்லை.

அது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தால்  அதனை நம்மால் மறுக்கவும் முடியவில்லை.  காரணம் எங்குப் போனாலும்  அவர்கள் தான் எல்லா இடங்களிலும்  வியாபித்திருக்கின்றனர். பல இடங்களிலும் வியாபாரம் செய்கின்றனர்.  எல்லாத் தாமான்களிலும் அவர்களின் கடைகள் இருக்கின்றன.  இதில் என்ன  ஏற்றுக்கொள்ள முடியவில்லை  என்றால்  இவர்கள் எல்லாம் பூமிபுத்ராக்கள் பட்டியலில் வந்து விடுகின்றனர்!  என்றும் சொல்லப்படுகின்றது!  அது எந்த அளவுக்கு உண்மை என்பதை  நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.  ஒரு வேளை பொது மக்களே தாங்களாகவே அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களோ என்பதும் புரியவில்லை!

அவர்கள் எல்லாம் முறையான உரிமம்  வைத்துக் கொண்டு தான்  வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமானவர்கள் என்றும் நம்மால்  சொல்ல முடியவில்லை. ஏனோ இந்தக் குளறுபடிகள் என்பதும் நமக்கும் எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

திடீரென அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவர்களுடைய பொருள்களை அபகரிப்பதும் எல்லாமே  ஏதோ ஒப்புக்கு சப்பாணி  என்பதாகவே தோன்றுகிறது. முதலில் அவர்களுக்கு உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற்கான  தெளிவில்லை. அப்படியே அவர்கள் ஏதேனும் வியாபாரங்களில்  ஈடுபடும் போது அப்போதே ஆரம்பகாலத்திலேயே ஏன் எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது பாய்வதில்லை?  இவர்களை வளர்த்து விடுபவர்கள் யார்?  அரசாங்கம் தான்! வளர்ந்த பிறகு அவர்களுடைய கடைகளுக்குச் சீல் வைப்பதும், சிறு வியாபாரங்களை இழுத்து மூடுவதும் ஏதோ தமாஷ் என்பதாகத்தான் தோன்றுகிறது! மக்களை முட்டாளாக்குகிறார்கள்  என்பதைத் தவிர வேறென்ன?

நம்மை முட்டாளாக்குகிறார்கள், அவ்வளவு தான்!

Saturday, 11 January 2025

மதுபானத்திற்கு இடமில்லை!


 சமீபத்தில் கல்வி அமைச்சு  சீனப்பள்ளிகளுக்கு ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

சீனப்பள்ளிகள், பள்ளிகளில் உள்ள மண்டபங்களை வாடகைக்கு விடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.  அவை பெரும்பாலும்  திருமண விருந்துகளோ அல்லது வேறேனும்  விருந்து நிகழ்ச்சிகளுக்கோ  பொது மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கல்வி அமைச்சு அது போன்ற விருந்துகளுக்குத் தடையைப் போட்டிருக்கிறது. அவர்கள் சொல்லுகின்ற காரணம் அந்த விருந்துகளில்  மதுபானங்கள் பரிமாறப்படுகின்றது  என்கிற  காரணம் தான். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே மதுபானங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. பள்ளி நேரத்தில் எந்தவொரும் விருந்தும் நடைபெறுவதில்லை.  பெரும்பாலும் இரவு நேர நிகழ்ச்சிகள் தான். அதிலும் குறிப்பாக சனி, ஞாயிறு இரவுகளில் தான். விதிவிலக்குகளும் உண்டு.  பள்ளிப்பிள்ளைகள் எந்த வகையிலும்  சம்பந்தப்படவில்லை. இந்த நிலையில் ஏன் தடை செய்ய வேண்டும்?

பள்ளிகள் தங்களது மண்டபங்களை வாடகைக்கு விடுவதே  பொருளாதார ரீதியில் தான்.  பண நெருக்கடி  பள்ளிகளுக்கு உண்டு. அவர்கள் கேட்கின்ற தொகையைக் கலவி அமைச்சால் கொடுக்க இயலாது. அல்லது தாமதமாகும்.  தேவைப்படும் போதெல்லாம் பள்ளிகள் கையேந்த முடியாது.  அதனால் அவர்கள் பல்வேறு வழிகளில் நிதி திரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தங்களது பள்ளி மண்டபம் என்னும் போது  அது அவர்களுக்கு வசதியாகவே இருக்கும். 

கல்வி அமைச்சு தேசிய பள்ளிகளுக்கு ஒதுக்கும்    தொகை மற்ற தாய் மொழி பள்ளிகளுக்கு  ஒதுக்குவதில்லை.  பல்வேறு காரணங்கள்.  பள்ளிகளையும்  இது போன்று விருந்து நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் செய்தால் அவர்கள் எப்படி செலவுகளைச் சமாளிக்க முடியும்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கல்வி அமைச்சு விரைவில் நல்லதொரு அறிவிப்பை  வெளியிடும் என நம்புகிறோம்.

Friday, 10 January 2025

ஒரு நடிகனின் முதல் வெற்றி!

 

                                                                 தல, தல தான்!
தமிழ் சினிமா உலகம் எத்தனையோ நடிகர்களைக் கண்டிருக்கிறது.  அவர்களில் ஒருவர் கூட  கார் பந்தயத்தின் பக்கம் தலைகூட வைத்துப் படுத்ததில்லை!

அது எல்லாராலும் முடியாத காரியம்.  அதற்கு முக்கிய காரணம் பயம் தான். பயம் மட்டுமே தான்.   அதனால் தான் அந்தப் பக்கம் யாரும் போவதில்லை. ஒரு சிலரே அந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகிறார்கள்.

அப்படிப்பட்ட பந்தயத்தில் நடிகர் அஜித் குமார்  பங்குப்பெற்று பரிசும் பெற்றிருக்கிறார் என்றால்  நிச்சயமாக அது ஒரு மாபெரும் வெற்றியாகத்தான்  நாம் கொண்டாட வேண்டியுள்ளது. துபாய் நகரில் நடைப்பெற்ற 24 மணி நேர ஓட்ட கார் பந்தயத்தில், போர்ஷே 992 பிரிவில்,   அவருடைய அணியினர் மூன்றாவது பரிசைப் பெற்றிருக்கின்றனர்.

பொதுவாகவே அஜித்  மோட்டார் சைக்கிள், கார் பந்தயங்களில்  இளமைக்கால முதலே  ஈடுபாடு உள்ளவர்.  சில பந்தயங்களில் கலந்து கொண்டாலும்  சொல்லும்படியாக எந்த ஒரு வெற்றியும் அமையவில்லை.  ஆனாலும் வெற்றியோ  தோல்வியோ  தனது பயிற்சிகளை மட்டும் அவர் விடவில்லை.    அது எப்போதும் போல தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அவருடைய ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை. 

பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்த அந்தப் பயிற்சி  இப்போது பலனைக் கொடுத்திருக்கிறது.  அதைத்தான் சொல்லுவார்கள் நீங்கள் எதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்களோ அதனைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு நாள் வெற்றி உங்களைத் தேடி வரும் என்பதாக,  அந்தத் தொடர்பயிற்சி தான் இன்று அஜித்தின்  53-வது வயதில் பரிசு பெற வைத்திருக்கிறது.  நமது பயிற்சிகள் என்றுமே நம்மைக் கைவிட்டதில்லை; கை விடுவதுமில்லை.

இந்திய சினிமா உலகம் இது போன்ற வீரனை கண்டிருக்கிறதோ, இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது ஒரு அஜித் குமாரைக் கண்டிருப்பது நமக்குப் பெருமையே! அது தமிழ் சினிமா உலகம்  கண்டிருக்கிறது.

Thursday, 9 January 2025

உங்கள் பொழைப்ப பாருங்கப்பா!


நடிகர் அஜீத் குமார் நடிகர்களிலேயே  வித்தியாசமானவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்.   அவருடைய இரசிகர்களுக்கும் அவர் அப்படித்தான் சொல்லி வருகிறார். 

"உங்கள் பிழப்பை பாருங்கள்"  என்பது தான் அவருடைய இரசிகர்களுக்கு அவர் கொடுக்கும்  செய்தி.  மற்ற எந்த நடிகனுக்கும் இப்படி ஒரு மனசு வராது. பெரும்பாலான நடிகர்கள் இரசிகன் என்றால் அவன் தனது காலடியிலேயே கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தனக்கு இரசிகர் மன்றம் வைக்க வேண்டும், தனது படங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும், தனக்காக உயிரைக் கொடுத்தாவது  போராட வேண்டும், தனது படங்கள் தியேட்டர்களில் ஒடுவதற்கு தனது இரசிகன்  தினசரி தியேட்டர்களில் தனது படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற 'உயரிய' கொள்கைக் கொண்டவர்களாக இருப்பவர்கள்! தனது வருமானத்தைப் பெருக்குவது தான் இரசிகனின் வேலை    முடிந்தால் தமிழ் நாட்டின் அடுத்த முதலைமைச்சராக்க வேண்டியது தனது  இரசிகனின் கடமை என்கிற  நோக்கம் கொண்டவர்களாக  இருப்பார்கள்

ஆனால் நடிகர் அஜித் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனது இரசிகன் அவனது வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று மனதார நினைப்பவர். அதனால் தான் அவர் அடிக்கடி "உனது வேலையைப்பார், உனது குடும்பத்தைப்பார், உனது முன்னேற்றத்தைக்கவனி" என்று  இரசிகனுக்கு  அறிவுரைக் கூறுபவராக இருக்கிறார்.

இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால்   நம் மத்தியில்  இப்படியெல்லாம் நினைப்பவர்கள்  குறைவு.  போட்டி, பொறாமை நிறைந்த உலகில் இப்படியும் மனிதர்கள் உண்டு என்று நினைக்கும் போது அவர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

மீண்டும் அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்  "உங்க  பொழப்ப பாருங்கப்பா!"

Wednesday, 8 January 2025

SPM எழுதும் மாணவர்களுக்கு



 

எஸ்.பி.எம். எழுதும் மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள். உங்களிடமிருந்து தான் நாளைய மருத்துவர்கள்,  மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,  பொறியாளர்கள்,  பெரும் பணக்காரர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள்  - அனைத்துத் தரப்பினரும்  உங்களிடமிருந்து தான் உருவாக வேண்டும்.

உங்களின் வளர்ச்சி எந்த அளவு முக்கியம்  என்பது இந்த சமுதாயம் அறியும். எஸ்.பி.எம். பரிட்சையில் உங்களது தேர்ச்சி உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல  எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியான தருணம் தான்.

உங்களது வெற்றி இந்த சமுதாயத்தின்  வெற்றி. முன்பெல்லாம் உயர்கல்வி என்பது  எட்டாக்கனி.  இன்றைய நிலை வேறு. அரசாங்கம் இல்லையென்றால்  தனியார் கல்வி நிலையங்கள் வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.  முன்பெல்லாம்  உயர்கல்வி என்றால் பொருளாதாரச் சிக்கல்.  இன்று கல்வி கடன்கள்  தாராளமாகக் கொடுக்கப்படுகின்றன. சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் கிடைக்கின்றது.

மாணவர்களே!  இப்போது உங்களுக்குப்  பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. ஏதோ ஒரு வகையில்  சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன.  வாய்ப்புகள்  வழங்கப்படுகின்றன.  இது ஒரு பொற்காலம். அந்தப் பொற்காலத்தை, கற்காலமாக மாற்றிவிடாதீர்கள்.  உங்களின் வெற்றி இந்த சமுதாயத்தின் பொற்காலம்.

காலங்காலமாக  கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கின்ற சமுதாயம் இது. அதனை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் குடும்பம் மாறினால் இந்த சமுதாயம் மாறும். அதனை உங்களால் தான் மாற்றியமைக்க முடியும். உங்கள் குடும்பங்கள் உயர்ந்தால் இந்த சமுதாயமே உயரும்.

உங்கள் குடும்பங்கள் பல இன்னல்களுக்கிடையே  உங்களைப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அது உங்களின் எதிர்காலம் சிறந்து விளங்க.  அவர்கள் பெருமைப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. இந்த சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் பெருமைப்பட அத்தோடு இந்த சமுதாயம் பெருமைப்பட  நீங்கள் வெற்றிபெறுவது  முக்கியம்.

Tuesday, 7 January 2025

நமது இலக்கு கல்விதான்!


இன்றைய நமது தமிழ்ச்சமூகம் ஓரளாவது முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றால்  அதற்கு முக்கிய காரணம் கல்வி மட்டும் தான்.

ஆனால் நமது ஆதங்கம் எல்லாம் ஒரு சிலர் தான் கல்வி கற்றவர்களாக இருக்கிறோம்  பலருக்கு அது இன்னும் போய்ச் சேரவில்லையே  என்கிற  மனவலி தான் நமக்கு.   நம்முடைய குற்றச்சாட்டு எல்லாம் பெற்றோர்கள்  தங்களின் பிள்ளைகளின் கல்வியில் அக்கறையற்று இருக்கிறார்களே அது தான்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பெற்றோர்கள் அக்கறை காட்டவில்லையென்றால் பிற்காலத்தில்  பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது அக்கறை காட்டுவதில் எந்தப் புண்ணியமுமில்லை. சமுதாயம் மற்ற இனத்தவர்களின் கண்களில்  கேவலப்பட்டுத் தான் நிற்க வேண்டும்.  சீனப்பெற்றோர்கள், மலாய்ப்பெற்றோர்கள் போன்று தமிழ்ப்பெற்றோர்கள்  கல்வியின் முக்கியத்துவத்தை  இன்னும் உணரவில்லையே, என்ன செய்ய?

நாம் சொல்ல வருவதெல்லாம் பெற்றோர்கள்  எந்த நிலையிலும் தங்களின் பிள்ளைகளின் கல்வியில்  இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பது மட்டும் தான். படிக்காத பெற்றோராக இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக அக்கறை இல்லாதவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் விபரம் தெரிந்த பக்கத்து வீட்டார்  அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.  அதற்கு நாம்  அனைவரும் சேர்ந்துதான் தேர் இழுக்க வேண்டும். நமது சமுதாயத்தின் உயர்வு தான் நமக்கும் பெருமை.

நமது சமுதாயம் உயர வேண்டும் என நாம் நினைத்தாலும்  நம்மிடையே உள்ள குடிகார கூட்டத்தை  அசைப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.  இனி அதனையும் சாக்காக வைத்துக் கொண்டு நாம் காலாட்டிக்கொண்டிருக்க  முடியாது.  இந்த ஆண்டு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

நமது  குழந்தைகள் படிக்க வேண்டும். நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும்.  பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்க  வேண்டும்.  படிக்கும் சூழலையும் உருவாக்க வேண்டும்.

அன்றும் இன்றும் என்றும் கல்வி தான் நமது இலக்கு. அதுவே நமது உயர்வு.

Monday, 6 January 2025

கல்விதான் நமது ஆயுதம்!

கல்வி தான் நமது ஆயுதம்.  வறுமையைப் போக்க, வாழ்க்கை தரத்தை உயர்த்த,  பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி கல்வி மட்டும் தான்.

ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று  நம்மை யாரும் முத்திரைக் குத்தவில்லை. நமக்கு நாமே முத்திரைக்குத்திக் கொண்டோம். நம்மை உயர்த்திக் கொள்ள அப்போதும் வழிகள் இருந்தன இப்போதும் இருக்கின்றன.

அன்று தோட்டப்புறங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகள்  நாம் உயர்வதற்கான வழிவகைகளைக் காட்டின.  அன்றே நாம் பயன்படுத்தியிருந்தால் நமது சமுதாயம் ஒரு  நடுநிலையான  வாழ்க்கைத்தரத்தை  அடைந்திருக்கும். அப்போது கல்வியையே உதாசீனம் செய்தோம்.  அன்று செய்த அதே தவற்றை இன்றும் செய்கிறோம்.    இன்னும் நம்மிடம் கல்வியின் மூக்கியத்துவம்  உணரப்படவில்லை. 

மலாய் சமுகத்தைப் பார்த்தாவது நாம் திருந்திருக்க வேண்டும்.  நமக்கும் அந்த விழிப்புணர்வு இல்லை நமது தலைவர்களுக்கும்  அந்த  கல்வி அவசியம் என்கிற புரிதலும் இல்லை.  ஏன் நமது தலைவர்களும் அரைகுறை  படிப்பாளிகளாகத்தான்  இருந்திருக்கின்றனர். அவர்கள் நம்மை வழிநடத்துவதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்பதைத்தான்  அவர்கள் காட்டியிருக்கின்றனர்.

ஆனாலும் குற்றங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை விடுத்து  நம்முடைய குற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்.  நாம் முன்னேற  நமது முயற்சி தான் தேவையே தவிர உலகில் உள்ள ஜீவராசிகள்  அனைத்தும் ஓடிவந்து நமக்கு உதவும் என்கிற எதிர்பாப்ர்ப்புகளை விட்டு ஒழிக்க வேண்டும்.  நமக்கு அக்கறை என்றால் நாம் தான் அக்கறை காட்ட வேண்டும்.

கல்வி என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம். அது முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.  கல்வி கற்ற சமுதாயம் தலைநிமிர்ந்து  நிற்கும். கற்றவனுக்கு சேல்லுகின்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி கற்றவன்  மரியாதைக்குரியவன் ஆகிறான்.

கல்வியே நமது முன்னேற்றத்திற்கான ஆயுதம். . 

Sunday, 5 January 2025

நமது பங்கு என்ன?

 

ஒற்றுமைக்குக் காக்கைகளைச் சொல்வார்கள்.  பறவைகளில் அறிவுள்ள பறவை  காக்கைகள் தான் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த இரண்டு குணங்களும்   நமக்குத் தேவை  என்பதுதான் காக்கைகளின் கதை சொல்லுகிறது. 

அறிவு என்றால் இன்றைய நிலையில் நம்மைப் பொறுத்தவரை கல்வி தான்  அந்த அறிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.  மற்றவைகள் எல்லாம் பின் தள்ளப்படும். அதனால் தான் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம்.

தனிமனிதனாக, கல்வி என்று வரும்போது, நமது பங்கு என்ன என்பது தான் நமது கேள்வி. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தாலே போதும்.  நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக  மாறிவிடும்.  ஏழை சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட  அடுத்தகட்ட  நகர்வுக்கு நமது பங்கு என்ன என்று சிந்திக்க வேண்டும்.  அதற்குக் கல்வி ஒன்று தான் வழி. வேறு எதுவும் எடுபடாது.

இந்த செய்தியே நமது மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரியது.  ஒரு காலகட்டத்தில் தோட்டப்புற பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள்.  அத்தோடு கொஞ்சம் ஆங்கிலத்தைச் சேர்த்துப் படித்தவர்கள்  இன்னும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார்கள்.   ஏன் கல்வி என்பதற்கு இந்த மாற்றங்களே போதும்.  கல்வியைக் கொடுத்துவிட்டால் அப்புறம் ஏழை என்கிற அடைமொழி தேவை இல்லை.

இதில் நமது பங்கு என்னவெனில் நாம் ஒவ்வொருமே பிள்ளைகளுக்கு வழிகாட்டிகளாக  இருக்க வேண்டும்.  பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம்.  பிள்ளைகள் பள்ளி போக ஆரம்பித்ததுமே அவர்களை நன்கு ஊக்குவிக்கவேண்டும்.  டாக்டராக வேண்டும், வழக்கறிஞராக வேண்டும் என்று என்ன தெரியுமோ அதனைச் சொல்லி  அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். இளமையில் சொல்லப்படுவது அப்படியே மனதில்  பதிந்துவிடும்.  அதன் பொருள் என்னவென்று புரியாவிட்டாலும்  அவர்களாகவே புரிந்து கொள்ளும் நேரம்வரும்.

கல்வி என்று வரும்போது பெற்றோர்கள் தான்  முதல் வழிகாட்டி. அதற்கு அவர்கள் படித்தவர்களாக  இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் மட்டும் அல்ல.  நமது சமுதாயத்தில்  உள்ள அனைவரின் பொறுப்புமாகும்.  மாணவர்கள் நன்கு படிக்கும்படி ஊக்குவிப்புத் தரவேண்டும்.   மேற்படிப்புப்பெற வழிகாட்ட வேண்டும்.  நமது சமுதாயத்தில் கீழ்மட்ட அளவில் தலைவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். தக்கவர்களிடம் கொண்டுபோய் ஆலோசனைக் கேட்கலாம்.  வழிகள் நிறையவே இருக்கின்றன.  தேவையெல்லாம் நாம் மனம் வைக்க வேண்டும்.  நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற பற்று இருக்க வேண்டும்.

சமுதாய முன்னேற்றம் என்பது நமது அனைவரின் கூட்டு முயற்சி.  அதில் நமது பங்கும் உண்டு.  கல்வி கற்ற சமுதாயம் என்றால் நமக்கும் அதில் பெருமை தான்.   

Saturday, 4 January 2025

கோவில்களின் பங்கு போற்றத்தக்கது!

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்  என்பது நமது மரபு அதனை இன்றுவரை நமது சமுகம் கடைப்பிடித்து வருகிறது  என்பதறிய  நமக்கும் மகிழ்ச்சியே.

நமது மாணவர்களின் உயர்கல்விக்குக் கோவில்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கோவில்கள்  இன்று பலவகைகளில் மாணவர்களின் கல்விக்கு உதவுகின்றன. 

சிறிய கோவில்கள் தான் நாட்டில் அதிகம்.  அவர்களின் சமூக ஈடுபாடு என்பது குறைவு தான்.  ஆனாலும் அள்ளிக்கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கிள்ளிக்கொடுக்காவாவது செய்யலாம். அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று  சொல்ல முடியாது. சிறிய அளவிலாவது உதவ முடியும்.  உயர்கல்விக்குச் செலவிடமுடியாவிட்டாலும்  சிறிய அளவில் அதாவது பள்ளி செல்ல பேரூந்து கட்டணம் போன்றவைகளைக் கவனித்துக் கொள்ளலாம். செய்யத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. அதே போல கோவில்களும் இருக்கின்றன. பேரூந்து கட்டணத்தைக் கூட கட்ட முடியாத பெற்றோர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். அதுவும் கொரொனா பெருந்தொற்றுக்குப் பின்னர்  பலர் வேலையில்லாமல் சிரமத்தில் உள்ளனர்.

பெருங்கோவில்களோ சிறு கோவில்களோ ஒவ்வொரு கோவிலும் தங்களால் முடிந்த அளவு  இந்த சமூகத்திற்கு உதவத்தான் வேண்டும். கோவில்கள் மட்டும் அல்ல இயக்கங்கள், மன்றங்கள்  சங்கங்கள் - இப்படி அனைவருக்குமே அந்தப் பொறுப்பு உண்டு  தனி மனிதர்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. எங்கு உதவிகள் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர் அடுத்த கட்டம் என்ன என்கிற பொது அறிவு நமது மாணவர்களுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனாலேயே அவர்களது வாழ்க்கை  திசை  திருப்பப்படுகிறது.  நாட்டில் மிகக்குறைந்த  சம்பளத்தில் வேலை செய்பவர்கள் நமது சமுதாயம் தான். ஏன்,  வங்காளதேசிகளை விட நாம் குறைவான சம்பளம் வாங்குகிறோம். இத்தனைக்கும் நம்மை உயர்த்திக்கொள்ள ஏகப்பட்ட வழிகள் உண்டு. அதை நாம் தான் தேட வேண்டும்.

நமது கோவில்களின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Friday, 3 January 2025

இயக்கங்கள் முன்வர வேண்டும்!

மலேசியாவில் தமிழர் அல்லது இந்திய இயக்கங்கள் எத்தனை இருக்கும்  என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை.

சும்மா தோராயமாகக் கேட்டால் சுமார் ஆயிரம் இயக்கங்கள் இருக்கலாம்.  இவர்கள் நினைத்தால் நமது மக்களிடையே மாபெரும்  மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.  நாம் கல்வியைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.  கல்வியின் முக்கியத்துவத்தை நமது தமிழர் சமுதாயம்  இன்னும் உணரவில்லை  என்பதைப் புரிந்து வைத்து வைத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் நமது இயக்கங்களின் பங்கு மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம்.   நம் மக்களிடையே உள்ள பிரச்சனை என்னவென்றால் பொருளாதார சிக்கல்தான்.  அதனால் தான் நமது  குழந்தைகள்  எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர்  வேலைக்குப் போய் விடுகின்றனர்.  இன்றைய நிலையில் எஸ்.பி.எம். தேர்வில் பெரிய வெற்றி பெற்றால் கூட  அதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுமில்லை.

இன்றைய தேவை எல்லாம் உயர்கல்வி இல்லாமல்  எந்த வேலை வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை.   நமது இயக்கங்கள் நம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  இயக்கங்களில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் தேவை.  வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான் இன்று பலரால் உயர்கல்வி கற்க முடியவில்லை.

மாணவர்களுக்குப் பெற்றோர்களின் வழிகாட்டுதலும் இல்லை. வழிகாட்ட ஆளுமில்லை.  பலர் வெளி உலகம்  தெரியாதவர்களாக  இருக்கிறார்கள்.  யாரோ சொன்னார் என்று சொல்வதைக் கேட்டு கடைசியில் கல்விக்கடன் என்கிற பெயரில்  கடன்காரர்களாக வெளியே வருகிறார்கள்.  கல்விக்கடன் இல்லாமலேயே உயர்கல்வி படிக்க வழிகள் பல உண்டு.  அதனைத் தெரிந்து கொள்ள அரசாங்க இணையதளங்களை வலம் வந்தாலே போதும்.

அதற்குத்தான்  நமது இயக்கங்கள்  மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து  அவர்களுக்குச் சரியான பாதையைக்காட்ட வேண்டும்.  இணையதளங்களில் பலர் வழிகாட்டுகிறார்கள்.  மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஒரே ஒரு ஆலோசனை.  எக்காரணத்தைக் கொண்டும்  முதலில் பணத்தைக் கொண்டு கொட்டாதீர்கள்.  ஒரு முறைக்கு நூறு முறை படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதைவிட சரியான வழிகாட்டுதல்களை நாடுங்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நம்பத்தக்கவர்கள். அரசாங்க இணையதளங்கள். அதுவே போதும்.

இயக்கங்கள் சில பொறுப்புக்களையாவது  எடுத்துகொள்வது மாணவர்களுக்கு வழிகாட்டுவது  சிறப்பான சேவை. நல்லதே நடக்கட்டும்.

Thursday, 2 January 2025

இது நமக்குக் கல்வியாண்டு.

                                 கல்வி ஒன்றே சமுதாயத்தை மாற்றி அமைக்கும் 

அரசாங்கம் நமக்காக - நம் மக்களுக்காக - எந்தத் திட்டங்களையும் போடுவதில்லை என்பது  எப்போதோ நமக்குத் தெரிந்தது தான்.  அதுவும் கல்வி என்று வரும் போது  நாம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை நாம் தெரிந்துதான் வைத்திருக்கிறோம்.

அதற்காக நாம் கல்வியை ஒதுக்கி விடவில்லை. சொத்துகளை விற்றாவது பிள்ளைகளுக்குக் கல்வி கொடுப்பது  தான்  நாம்  வழமையாகக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நமது நோக்கம்.

இடைநிலைக் கல்வியை முடித்துவிடலாம். அது தானாக நடக்கும்.  நமது தேவையெல்லாம் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.  நமது கவனம் அதில் தான் இருக்க வேண்டும்.  பெற்றோர்களின் பங்கு இன்னும் அதிகம். பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த வழியில்லை.

ஆனால் நம்மிடையே இன்னும் பலர் கல்வி பற்றிய அறியாமையில்  தான் இருக்கின்றனர். கல்வி தான் நம்மை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும்  என்கிற அறிவு இல்லாமல் இருக்கின்றனர். நாம் தோட்டப்புறங்களில் பார்த்திருக்கிறோம். மூன்று நான்கு தலைமுறை  அங்கேயே வேலை செய்து எந்தவிதமான  முன்னேற்றமும் இல்லாமல்  தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறோம்.

அந்த நிலைமை மாற வேண்டும்.  கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர்களாக பெற்றோர்கள் இருந்தால் தான்   நமது வருஙாலத் தலைமுறை  மாறும். அதுமட்டுமல்ல வாழ்க்கைத்தரமும் மாறும்.  நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

இந்த ஆண்டை இந்தியர்களின் கல்வி ஆண்டாக நாமே கையில் எடுத்துக் கொண்டு  இந்திய மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  நம்மிடையே ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன அல்லது தனிப்பட்ட முறையில் கூட  நமது மாணவர்களுக்கு உதவ வேண்டும். இப்போது வழிகாட்டுதல் தான் முக்கியம். வழிகாட்டுதல் இல்லாததால் தான்  பல மாணவர்கள் உயர்கல்வியைப் பெற முடியவில்லை.

நம்மால் முடிந்தவரை வழிகாட்டியாய்  இருக்க முல்வோம்.

Wednesday, 1 January 2025

2025 புத்தாண்டு வாழ்த்துகள்!

                                        புதிய 2025 ஆண்டினை வரவேற்போம்!வை
 புதிய ஆண்டு  மலர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு கடந்து போனது. போனது மட்டும் அல்ல  நமக்குத் தேவையற்றவைகளையும்  அடித்துக் கொண்டுப்  போய்விட்டது! போனது  நல்லது தான்.

இதோ மற்றோரு புதிய ஆண்டு!  இதற்கு முன் நம்முடைய எண்ணங்கள் எப்படி இருந்ததோ, தெரியவில்லை. ஆனால் இந்த  ஆண்டு  நமது எண்ணங்களைக் கொஞ்சம் உயர்த்திக் கொள்வோம். 

'இப்போதெல்லாம் வீடு வாங்கவே முடியாது' என்கிற எண்ணம் உடையவரா நீங்கள்?   'இல்லை இந்த ஆண்டு வீடு வாங்கியே தீருவேன்' என்கிற எண்ணம்  உங்களுக்கு ஏற்பட வேண்டும்.  அது எப்படி இது எப்படி என்கிற எண்ணத்தை விட்டு ஒழியுங்கள்.  அது நடக்கும் என நம்புங்கள். உளவியல் என்ன சொல்கிறது?  நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ  அது உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது  என்பதை நம்புங்கள்.  அது ஏதோ கற்பனை என்று நினைக்காதீர்கள்.  நீங்கள் என்ன விலையில் தேடுகிறீர்களோ அந்த விலையில் வீடு உங்களைத் தேடிவரும்..  இது ஒரு சிறு உதாரணம்  ஆனால்  அதுதான் உளவியல் என்பது.  முதலில் உங்கள் எண்ணத்தில் அது வரவேண்டும் பின்னர் அது செயல்வடிவம் பெறும்.

எல்லாமே அப்படித்தான். முதலில் நீங்கள் நினைக்க வேண்டும். பிறகு அது நடக்கவே செய்யும். உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானது  என்பதைத்தான் மீண்டும் மீண்டும் உளவியல் கூறுகின்றது.  நாம் தோல்விகளையே தழுவுகிறோம் என்றால் நாம் தோல்வியைத்தான் உள்ளுர விரும்புகிறோம் என்பது பொருள்!

வாழ்க்கையில் எதனையும் சாதிக்க முடியும். அதற்கு உங்கள்  எண்ணங்கள் வலிமையாக இருக்க வேண்டும். சென்ற ஆண்டு இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சில பொருளாதார முயற்சிகளைச்  சிலர் எடுத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் அது தொடரும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஆண்டு பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என நாம் நம்புவோம்.

வாழ்வோம்! வளர்வோம்!