தமிழ்க்கல்வியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தரும் நல்லதொரு ஆரம்பம்!
பிரதமர் துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி கல்வித்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளையும் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனை நாம் நல்ல சகுனமாகவே எடுத்துக் கொள்ளலாம். காரணம் இது நாள் வரை இப்படி ஒரு சந்திப்பு நடந்ததாக நாம் அறியவில்லை. இப்போது நடந்திருக்கிறது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் கல்வித் துறையின் தேர்வு வாரியம் . தமிழ்ப்பாடப்பிரிவின் அதிகாரிகள் ஆசிரியர் பிரதிநிதிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.
கல்வி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டன; விவாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவித்தல், தமிழ் இலக்கியம், மாணவர்களின் சரிவு, பெற்றோர்களின் அலட்சியம், தமிழ் வழிக் கல்வியின் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பிற மொழி பள்ளிகளுக்கு மாற்றுவதனால் வருகின்ற சிக்கல்கள் - இப்படிப் பல பிரச்சனைகள் அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
அனைத்துப் பிரச்சனைகளையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் குறைபாடுகள் அனைத்தும், அமைச்சரவை ஆதரவுடன், கட்டம் கட்டமாகத் தீர்க்கப்படும் என்பதாக உறுதி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த பதினான்காவது தேர்தலுக்குப் பின்னர் நமது தமிழ்ப்பள்ளிகளின் குறைபாடுகளை யாரிடம் கொண்டு செல்லுவது என்கிற நிலை மாறி அமைச்சரே தனது அலுவலகத்தில் இந்தச் சந்திப்பை நடத்தியிருக்கிறார் என்பது வரவேற்கத்தக்கது.
இனி தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு அமைச்சரே பொறுப்பேற்றுக் கொள்வார் என நாம் நம்புகிறோம். பொதுவாக இந்தியர்களின் பிரச்சனைகள், குறைபாடுகள் அனைத்தும் துணை அமைச்சர் வேதமூர்த்தியிடமே டாக்டர் மகாதிர் ஒப்படைத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவரது பணியை அவ்ர் செவ்வனே செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.
வேதமூர்த்தியை நாம் சாதாரண மனிதராக எடைபோட முடியாது. பத்தோடு பதினொன்று அல்ல அவர். அவர் போர்க்குணம் படைத்தவர். அவர் காலத்தில் நாம் எதிர்பார்ப்பவை நடக்கும் என நம்புகிறோம்.
நல்ல ஆரம்பம்! வரவேற்கிறோம்!
No comments:
Post a Comment