Wednesday 5 September 2018

கொஞ்சம் மிகையாக போகத் தயங்காதீர்கள்..!

மக்களிசைக் கலைஞர்,  உலகப்புகழ் பெற்ற செந்தில் கணேஷ்,  ஓர் நேர்காணலின் போது சொன்ன வார்த்தை என்னால் மறக்க முடியவில்லை.

தமிழ் நாட்டில் அவர் செய்கின்ற மேடைக் கச்சேரிகள் சுமார் மூன்று மணி நேரம் நீடிக்கும். அவரோடு மற்ற  கலைஞர்களும்  பங்குப் பெறுவர். அதில் ஒரு சில கலைஞர்கள் எப்போது மணி ஆகும் என்று கடிகாரத்தைப்  பார்த்துக் கொண்டே இருப்பார்கள்!சரியாக மூன்று மணி நேரம் ஆனதும் மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள்! மக்கள் நிறையப் பேர் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பாடுங்கள் என்கிறார்கள். நாம் பாடித்தான் ஆக வேண்டும். மக்கள் ரசிக்கும் போது நாம் பிகு பண்ணுவது சரியான அணுகுமுறையல்ல. மக்களை மகிழ்ச்சி படுத்துவது தான் ஒரு கலைஞனின் கடமை.  நேரம் ஆனாலும் பரவாயில்லை. நாம் அவர்களை மகிழ்ச்சி படுத்துவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

செந்தில் சொல்லுவது சரியான அணுகுமுறை.  கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை. கொஞ்சம் அதிகமான மெனக்கெடுதலால் எதுவும் கெட்டு விடப்போவதில்லை! அதனைத் தான் "ஒரு மைல் தூரம் வா என்றால் இரண்டு மைல் தூரம் நடக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்!" என்பர்.   ஓர் அளவை வைத்துக் கொண்டு அதற்கு மேல் அசைக்க முடியாது என்று சொல்லுவது தோல்வியாளர்களின் மனநிலை. வெற்றி எப்போது வரும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால் எந்த நேரத்திலும் வரலாம்.  நாம், நமது முயற்சிகளை மட்டும் கைவிட்டு விட முடியாது. வெற்றி என்பதே தொடர் முயற்சி தான்.

அந்த மிகையான நேரம். மறந்து விடாதீர்கள்.  நமது நேரத்தைத் தாண்டி அந்த மிகையான நேரத்தில் நாம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது அந்த வெற்றி நம்மைத் தேடி வரலாம். இப்படித்தான் பல பேருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது,

ஒரு தொழிலதிபர். அனைத்தையும் இழந்துவிட்டார். எவ்வளவோ முட்டி மோதி ...ஊகூம்...ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த நாள்...விடியாமல் இருந்தால் பரவாயில்லை.ஆனால் விடிந்துவிட்டது. வங்கிகள் தன்னை திவாலாக்கி விடும்.  மஞ்சள் கடுதாசி கொடுத்துவிடும். இன்றோடு அனைத்தும் முடிந்து விட்டது. வாழ்க்கை இருண்டு விட்டது. காலையில் பத்திரிக்கையைப் பார்க்கிறார். பளிச்சென்று ஒரு மின்னல். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! அது போதும், தான் வெற்றி பெறுவதற்கு! கடைசி நிமிட பேச்சுவார்த்தை வெற்றி பெறுகிறது! 

கடைசி நிமிடத்தில் எதுவும் நடக்கலாம். நமது வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். சோர்ந்து போகாதீர்கள்.  கொஞ்சம் பொறுங்கள். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் மிகையாகப் போகத் தயங்காதீர்கள். 

வாழ்க்கையே வெற்றியை நோக்கியப் பயணம்! வெற்றி! வெற்றி வெற்றி!

No comments:

Post a Comment