போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லலாம். பி.கே.ஆர். தலைவரும் அடுத்த மலேசிய பிரதமரும் போராட்டவாதியுமான அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபாலன் தனது பதவியில் இருந்து விலகி அன்வார் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இப்படி ஒருவர் தனது நாடாளுமன்ற இருக்கையை விட்டுக் கொடுத்து அதில் ஒருவர் போட்டியிடுவது என்பது பற்றி வெட்டியும் ஒட்டியும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அன்வாருக்கு வேறு வழியில்லை என்பதால் இப்படி ஒரு வழியை அவர் தேர்ந்தக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தமே.
சரி, போர்ட்டிக்சன் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தத் இடைத் தேர்தலில் அன்வாரையும் சேர்த்து மொத்தம் எட்டு பேர் போட்டியிடுகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மூன்று வேட்பாளர்கள் மட்டும் தான். ஒருவர் பி.கே.ஆரின் அன்வார் இப்ராகிம், மற்றவர் பாஸ் வேட்பாளர் முக்மது நஸ்ரி மொக்தார், இன்னொருவர் சுயேச்சை வேட்பாளர் இசா அப்துல் சமாட். மற்றவர்கள் சுயேச்சைகள் அனைவரும் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்கள் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்!
பொதுவாக பாஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் அக்கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்களுக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். ஆனால் அதிலும் அன்வாரின் விசுவாசிகள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னொரு கவனிக்கப்பட வேண்டியவர் இசா அப்துல் சமாட்.. முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தவர். இசாவைப் பொறுத்தவரை மலாய்க்காரர்கள் ஒரு பிரிவினர் அவரை ஆதரிக்கன்றனர். அவர்கள் அம்னோ விசுவாசிகள். இந்தியர்களின் ஆதரவும் ஓரளவு கிடைக்கலாம். பொதுவாக இசா பதவியில் இருந்த போது இந்தியரிடம் நல்ல பெயர் வாங்கியவர். இப்போது அவர்களுடைய ஆதரவெல்லாம் அவருக்குக் கிடைக்குமா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். காரணம் அவர் மேல் ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் உள்ளன! அதனால் அம்னோ தரப்பும் அவருக்குச் சாதகமாக இல்லை என்பது தான் உண்மை.
இப்படி எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அன்வார் வெற்றி பெறுவதற்கான் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. வெற்றி பெறுவார்!
No comments:
Post a Comment