ஹரகிரி என்றால் என்ன? இது ஒருவகையான தற்கொலை. ஜப்பானியர்களால் - அதாவது வீர மறவர்களால் - கடைப்பிடிக்கப்படும் ஒரு வீரத் தற்கொலை! இந்தத் தற்கொலைக்கு என்று சில சட்டத் திட்டங்கள் உள்ளன. அதை எப்படி செய்வது என்பன போன்ற விளக்கங்கள் நமக்குத் தேவை இல்லை.
ஒரு வீரன் இன்னொரு வீரனிடம் தோற்றுப் போனால் இந்த ஹரகிரியைப் பயன் படுத்துவான். அதனைச் செய்வதற்கு நெஞ்சுரம் வேண்டும். அவன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் தண்டனை அது.
ஆனால் இப்போது அந்த வீரம் என்பதெல்லாம் இல்லை. தன்னால் தனது குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவது, தனது நாட்டிற்கு அவமானத்தைக் கொண்டு வருவது, தான் பணி செய்யும் நிறுவனத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவது - இப்படி ஒரு நிலை வந்தாலும் அவர்கள் ஹரகிரியைப் பயன்படுத்த தயங்குவதில்லை. அதுதான் ஜப்பானியர்கள்!
அந்த ஹரகிரி நம்மிடையே இல்லை ஆனாலும் மான அவமானத்திற்கு அஞ்சி ஒரு சிலர் தற்கொலை செய்வதும், நான்று கொண்டு சாவதும், நஞ்சு கலந்த பானங்களை அருந்துவதும், தூக்குப்போட்டுக் கொள்வதும் எல்லாம் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சமீபத்தில் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொன்னார். நாட்டையே திவாலாக்கியவன், மக்கள் பணத்தைக் கோடி கோடியாய் கொள்ளையடித்தவன் - இவர்கள் எல்லாம் கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டே நாட்டில் வலம் வருகின்றனரே அது எப்படி இவர்களால் முடிகிறது, என்பதாக! மான அவமானம் இல்லாதவர்களிடம் யார் என்ன செய்ய முடியும்? ஒன்று அவர்கள் குடும்பத்தில் மான அவமானம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். இதெல்லாம் பாரம்பரியமாக வழி வழியாக குடும்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள். சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களைக் கொஞ்சம் உற்று நோக்கினாலும் போதும், என்ன நடக்கின்றன? பெண்டாட்டிகளை மாற்றிக் கொள்ளுகிறார்கள்! தங்களது பிள்ளைகளுக்கு எப்படி திருடுவது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்! முதலில் ஒழுக்கம் என்பதே இல்லை! ஒழுக்கம் இல்லாதவனிடம் மான அவமானத்தை எதிர்ப்பார்க்க முடியுமா?
அதனால் நாம் சொல்ல வருவது என்ன? இவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதுமில்லை! ஹரகிரி செய்து கொள்ளப் போவதுமில்லை! ஒன்று மட்டும் நடக்கும். அவர்கள் சந்ததிகள் அதனைச் செய்வார்கள்! அப்போது நாம் இருக்க மாட்டோம்! காரணமும் தெரியாது!
No comments:
Post a Comment