Sunday 2 September 2018

"கானா" மொழி...!

நான் தொலைக்காட்சியைத் திறந்த போது ஏதோ ஒரு புதிய  தமிழ்த் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன  படம்  என்று தெரியவில்லை. அதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது?

ஆனால் அதில் பேசப்பட்ட  சில வசனங்கள் மனதிலே பொறித்தட்டியது! ஆமாம்!  அவர்கள் பேசியது "கானா"  என்கிற  கானா மொழி! அல்லது பரிபாஷை எனலாம்.

ஒரு காலக் கட்டத்தில் இந்த கானா மொழி என்பது எங்கைளிடையே மிகவும் பிரபலம். இது ஒர் எழுபது ஆண்டு காலக் கதை! அப்போது இந்த மொழி வழக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அப்போதும் கூட ஏதோ ஒரு சினிமா தாக்கமாக இருக்கலாம்.

கானா மொழி பேசுவதில் எங்களது பக்கத்து வீட்டு அக்காள்கள் கமலமும் அவரது தங்கை சரஸ்வதியும் மகா மகா நிபுணர்கள்! இவர்கள் பேசுவதே இந்த கானா மொழி தான் அதிகம். மற்றவர்கள் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதறகாக இந்தக் கானாவைப் பயன்படுத்துவார்கள்!  என்னால் அவர்களைப் போல வேகமாகப் பேச வராது;  யோசித்து யோசித்துத் தான் பேச வேண்டி வரும்.

ஆமாம், அது  என்ன கானா மொழி? அது ஒன்றும் கம்பச்சித்திரம் இல்லை. ஒவ்வொரு சொற்களுக்கும் முன்னால் ஒரு "க" வைப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான். சான்றுக்கு: அரசியல் திருடன்  என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை இப்படிச் சொல்ல வேண்டும்:  கஅ கர கசி கய கல்  கதி கரு கட கன்.  இதனை வேகமாகச் சொல்லும் போது புரிந்து கொள்ளுவது கடினம். பயிற்சி இல்லையென்றால் வேகமாகவும் சொல்ல இயலாது!

இந்தக் கானா மொழியின் மூலம் என்ன?  ஒரு வேளை இது சித்தர்கள் பயன்படுத்திய பரிபாஷையாக இருக்கலாம். அல்லது வேறு யாராவது  இருக்கலாம். தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பிறர் அறியக் கூடாது என்பதற்காக இத்தகைய இரகசியப் பேச்சுக்களை அந்தக் காலத்தில் உபயோகத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது அது தேவைப்படவில்லை. நமக்கு இரண்டு மூன்று மொழிகள் தெரிந்திருப்பதால் மாற்று மொழிகளில் பேசி பிறர் அறிந்து கொள்ளாதபடி செய்துவிடலாம்.  ஆனாலும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் தமிழே இன்னும்  அதிகப் பயன்பாட்டில் இருப்பதால் இந்தக் "க" னா இன்னும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.  இல்லையென்றால் சமீபகால திரைப்பட மொன்றில்  இந்த கனா மொழி வர வாய்ப்பில்லை!

சரி! உங்கள அனைவருக்கும் இந்தக் கட்டுரையை படித்ததற்காக கந,கன் கறி!

No comments:

Post a Comment