Tuesday 18 September 2018

ஏன் பதவி விலகல்..?

சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் எந்த வித காரணமுமின்றி பதவி விலகுகிறார் என்பதாக செய்திகள் வருகின்றன! அவர் சட்டத்துறைத் தலைவர் பதவி வகிப்பது  கடந்த நான்கு மாதங்களாகத்தான். அதற்குள் அவர் ஏன் பதவி விலக வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை! அவரது சட்டத்துறைத் தலைவர் பதவி என்பது வெறும் அரசியல் நியமனம் அல்ல. ஏதோ ஒரு கட்சியில் இருந்தார் என்பதற்காக  அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது அல்ல. அது பாரிசான் ஆட்சியில் நடந்தது! இப்போது அது நடக்க வாய்ப்பில்லை. டோமி தாமஸின் திறமையின் அடிப்படையில் அவருக்கு சட்டத்துறைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இது போன்ற "விலகல்"  வதந்திகளுக்கு யார் காரணமாக இருக்கக் கூடும்?  கொஞ்சம் ஆழமாகப் போனால் அம்னோ மட்டும் தான் நமது கண்ணுக்குத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை எந்தப் பதவிக்கும் தகுதி என்பதாக ஒன்றுமில்லை என்று சொல்லி சொல்லி, ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள்! அதே போல சட்டத்துறைத் தலைவர் பதவிக்கும் வெறும் சட்டப்படிப்பு இருந்தால் போதும், பெரிதாக ஒன்றும் தேவை இல்லை என்று நினைப்பவர்கள்! இந்த நிலையில் முழுத் தகுதியோடு ஒருவர் பதவி வகிக்கிறார் என்றால் அது நிச்சயமாக அவர்களின் கண்களை உறுத்தும்!

அப்படி முழுத்தகுதியைக் கொண்டு ஒருவர் பதவி வகிக்கிறார் என்றால், அதுவும் ஓர் இந்தியர் என்றால் - அவர்களுக்கு அது நல்ல செய்தியாக இருக்க முடியாது! அதிலும் அவர் கிறிஸ்துவர் என்றால் அதனை அவர்களால் மன்னிக்கவே முடியாது! காரணம் அப்படித்தான் கடந்த அறுபது ஆண்டுகளாக அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

இன்னும் ஒரு சிலருக்கு வேறு மாதிரியான கருத்துக்களும் உண்டு. மலாய்க்காரரை விட மற்ற இனத்தவர்கள் அப்படி என்ன தகுதிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக!  காரணம் நாட்டிலுள்ள அத்தனை பல்கலைக்கழகங்களிலும், அத்தனை கல்லுரிகளிலும் தொண்ணூறு அல்லது நூறு விழுக்காடு மலாய்க்கார மாணவர்கள் தான் படிக்கிறார்கள்.  அப்படியிருக்க மற்ற இனததவரை எப்படி தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியும்? வாய்ப்பே இல்லை என்பதாக நினைக்கிறார்கள்!

இவர்களைப் போன்றவர்கள் தான் சட்டத்துறை தலைவரை அடிக்கடி  சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள்! பதவி விலகல் என்று சொல்லிக் கொண்டு தங்களது காழ்ப்புணர்ச்சிகளை வெளியே கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்!

ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்.  டோமி தாமஸ் எந்தக் காலத்திலும் தன் விருப்பப்படி பதவி விலகப் போவதில்லை. அரசாங்கம் ஏப்போது அவருக்கு ஓய்வு கொடுக்கிறதோ அப்போது தான் அவர் பதவி விலகுவார்.

அது வரை இது போன்ற பேச்சுக்களுக்கு காது கொடுக்க வேண்டாம்!

No comments:

Post a Comment