Friday 21 September 2018

ஊழல் ராணி..!


நம் நாட்டில் இதுவரை நாம் கேள்விப்படாத அளவுக்கு, நாட்டை வழி நடத்திய பிரதமராக இருந்த ஒருவர், செய்த ஊழல் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது!

துன் சாமிவேலு ஊழல் செய்தார் என்றால் அது இந்திய சமுதாயத்தை மட்டுமே  பாதித்தது. ஆனால் நஜிப் செய்த ஊழல் இந்த நாட்டையே பாதித்தது. அனைத்து மலேசியர்களையும் பாதித்தது. மலேசிய சரித்திரத்தில் இவர் அளவுக்கு ஊழல் செய்த பிரதமர் வேறு யாரும் இல்லை. இனிமேலும் வரப்போவதும் இல்லை. 

ஒரு வேளை கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று நஜிப் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  இந்த நாடு மலேசியர்கள் கையில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். சீனா இந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும்!  மலேசிய நாட்டில், குவாந்தான் நகரத்தில், சீனப் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்பியது போல மற்ற நகரங்களிலும் தனது கைவரிசையக் காட்டியிருக்கும்!

இதற்கெல்லாம் காரணம் நஜிப் சீனாவுடன் செய்து கொண்ட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும்  சீனாவுக்குச் சாதகமாக அமைந்தது தான். ஏன் அப்படி செய்ய நேர்ந்தது? நஜிப் தான் செய்த பல ஊழல்களை மறைக்க வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு பக்கம் நாட்டை சீனாவிடம் அடகு வைத்தார். இன்னொரு பக்கம் நாட்டின் வளர்ச்சியில் சீனா நமக்கு உதவி வருவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்.! 

சீனா தான் செய்கின்ற  வர்த்தகத்தில்  உள்ளூர் மக்களுக்கு வேலைகள் கொடுக்காமல் தனது சொந்த நாட்டிலிருந்தே வேலையாட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது! வேலை வாய்ப்புக்களில் அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தது!

எப்படி நஜிப்பால்  இப்படி செய்ய முடிந்தது? தனது மக்கள், தனது நாடு என்கிற உணர்வு இல்லாமல் எப்படி அவரால் இப்படி நாட்டுக்குத் துரோகம் செய்ய முடிந்தது? அதிகாரத்தில் உள்ளவர்கள் மனைவியரை நம்பி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதை  நஜிப்பின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. நஜிப் தான் ஊழலுக்குக் காரணம் என்று சட்டம் சொன்னாலும் அவர் மனைவி தான் காரணம் என்று மக்கள் சொல்லுகிறார்கள்!

ஊழல்! ஊழல்! ஊழல்!  ஊழல் ராணியா? ஊழல் ராஜாவா?

No comments:

Post a Comment