Sunday 9 September 2018

ஏன் இந்தப் புறக்கணிப்பு..?

நமது தமிழ்ச் சமூகம்  தொடர்ந்தாற் போல  அறுபது ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். முன்னாள் அரசாங்கம் நம்மை முட்டாளாகவே வைத்திருந்த ஒர் சமூகம். அந்த முட்டாள் தனத்துக்கு,  பாரிசான் அரசாங்கத்தோடு  நல்ல முறையில் ஒத்துழைப்புக் கொடுத்து உதவியவர் துன் சாமிவேலு என்னும் பெருமகனார்!

ஆனால் நாம் அதனை மறக்க நினைக்கிறோம். மறந்தும் விட்டோம். அதனால் தான் முன்னாள் அரசாங்கத்தை 'துன்னு'னு தூக்கி அறிந்து விட்டோம்! புதிய பக்காத்தான் அரசாங்கத்தை அரியணை ஏற வைத்ததில் நமது பங்கு அளப்பறியது. இதனை நாம் மீண்டும் மீண்டும்  பக்காத்தான் அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. பக்கத்தான் அரசாங்க இந்திய தலைவர்களுக்கும் அவ்வப்போது தலையில் தட்ட வேண்டியுள்ளது!

மலேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது தான் இப்போதைய அதிர்ச்சியான செய்தி. இது எப்படி நடந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மன்றத்தில் இடம் பெற இந்தியர் ஒருவர் கூட தகுதி பெறவில்லையா எனும் கேள்வி எழுகிறது. கல்வி மன்றம் என்னும் போது இந்தியர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது முக்கியமான துறை.  கல்வித் துறையில் நமக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  யார் அவைகளைத் தீர்த்து வைப்பார் என்பதில் இப்போது பல சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.

இது வரை கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் யாரிடமும் எடுத்துச் செல்லப்படவில்லை.  கல்வி பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றன. யாரிடம் செல்வோம்? கல்வி அமைச்சர் அம்னோ அமைச்சரைப் போலவே நடந்து கொள்ளுகிறார்.

சீனர்கள் இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தலைவர் என்று தனியாக இல்லை. அனைத்துச் சீன அமைச்சர்களும் தலைவர்கள் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். அவர்களின் தேவைகளை அவர்களே கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். நமது அமைச்சர்கள் அப்படி செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். நாம் நான்கு அமைச்சர்கள் என்கிற மிதப்பில் இருக்கிறோம்! அதிலிருந்து விடுபட வேண்டும்.  நான்கு அமைச்சர் என்ன, நானுறு அமைச்சர்கள் இருந்தாலும் நமது சமுதாயத்திற்குப் பயன்படவில்லை என்றால் அவர்கள் வெறும் குப்பை தான்.  

நாம் தலைவர்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறோம். கல்விப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதை நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள். கல்வி ஆலோசனை மன்றத்திற்கு நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்பதை நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். புதிய செனட்டர்கள் வரும் போது நமக்கும் செனட்டர் பதவிகள் தேவை என்பதும் உங்கள் வேலை தான். எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துக் கொண்டு போனால் அப்புறம் உங்களுக்கும் சாமிவேலுவுக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்னும் ஆசை எல்லாம் எங்களுக்குக் கிடையாது. இந்த சமுதாயத்திற்கு  உங்களால் என்ன பயன் என்பது மட்டும் தான் எங்களது ஆசை. 

இந்தப் புறக்கணிப்பு தொடரக் கூடாது என்பதே எங்களது எதிர்பார்ப்பு!

No comments:

Post a Comment