Thursday 27 September 2018

நல்ல முடிவு..!

நெகிரி செம்பிலான் "பெர்சாத்து"  கட்சி கலைக்கப்பட்டதாக  கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் கூறியிருக்கும் செய்தி யாரும்  எதிர்பார்க்காத  ஒரு செய்தி என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவகத்தின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

வரவேற்கக் கூடிய ஒரு முடிவாகவே நான் இதனைக் கணிக்கிறேன்.  கட்சிகள் கடந்த பல வருடங்களாக தான் தோன்றித் தனமாகவும், தறுதலைத்தனமாகவும், அடாவடித்தனமாகவும், அடங்காத்தனமாகவும் தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் பார்த்து ஓரளவு சலித்தும் போய்விட்டோம்! இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்கள் நமது தானைத்தலைவரும் அவரது சகாக்களும் தான்! அதனை அம்னோவும் பின்பற்ற ஆரம்பித்தது அவர்களது கஷ்டகாலம்!

ஆனாலும் இனி வருங்காலங்களில் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.  முகைதீன் யாசின் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் ஆர்.ஓ.எஸ். ஸின் ஆலோசனையை ஏற்றிருக்கிறார்!  எது சரி, எது தவறு என்பதை ஆர்.ஓ.எஸ். கண்காணிக்க வேண்டும்.

பி.கே.ஆர்.கட்சியின் கூட்டங்களிலும் அடிதடியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தியர்கள் அதிகமாக ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்கள். அடிதடி என்பதும், சங்கப்பதிவு இலாக்காவின் இரத்தங்களின் இரத்தங்கள் என்பதும் ஒன்றும் அதிசயமான ஒன்றல்ல! ஆனால் இவைகளையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அது பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். கலகம், ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் நாம் நினைவூட்டுகிறோம். ஒன்று கட்சியிலிருந்து அவர்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். கலகம் செய்கிறவர்கள் களையெடுக்கப்பட  வேண்டும். அது தான் முக்கியம்.

அதுவும் குறிப்பாக இந்திய சமூகம் மிகவும் பின் தங்கிய சமூகம். இனியும் சண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. நமக்குக் காரியங்கள் ஆக வேண்டும். செயல்படும் தலைவர்கள் நமக்குத் தேவை. 

பெர்சாத்து நெகிரி செம்பிலான் கிளை கலைக்கப்பட்டதில் நமக்கு மகிழ்ச்சியே! அதே போல கட்சி கூட்டங்களில் குழப்பங்கள் செய்யும் இந்திய உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதும் தேவையே! கடுமையான நடவடிக்கை இல்லையென்றால்  கண்டவன் எல்லாம் சட்டாம்பிள்ளையாகி விடுவான்!

No comments:

Post a Comment