Saturday 22 September 2018

14 வயதா...?

நம் மலேசியா நாட்டில் எதனைச்  சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக பேசுவதற்கென்றே ஒரு சிலர் இருக்கின்றனர்! சமயங்களில் அதற்கு மதச்சாயம்  பூசுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பதில் சொல்ல முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமயம்.  யார் எதிர்க்க முடியும்?

சிறார் திருமணங்கள் வேண்டாம் என்று ஒயாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள், அதிலும் குறிப்பாக மாதர் இயக்கங்கள், இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் சகோதரிகள் - இப்படிப் பல பேர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் - இதோ இன்னொரு குரல் அதனை எதிர்த்து  ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!

வேறு என்ன சொல்ல? சபா மாநில முப்தி டத்தோ பொங்சு என்கிற அஜிஸ் ஜபார் திருமண வயதைக் குறைக்க வேண்டுமென கூக்குரலிடுகிறார்!  பெண்களுக்கான திருமண வயதை 14 ஆகவும், ஆண்களுக்கு 16 வயது ஆகவும் குறைக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் கூறுகிறார்! விதிமுறைகளின் படி செயல்பட்டால்  இந்தக் குறைந்த வயதுடையோரின் திருமணங்கள் ஷாரியா சட்டப்படி  செல்லுபடி ஆகும் என்கிறார் அவர்.

இந்தத் திருமணங்கள் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என்பதல்ல பிரச்சனை.  சமயங்கள் இதனை ஏற்றுக் கொள்ளுகிறதா என்பதல்ல பிரச்சனை. இது உடற்கூறு சம்பந்தமானது. அவர்கள் பள்ளி செல்ல வேண்டியவர்கள். படிக்க வேண்டியவர்கள். புத்தகப் பைகளைச் சுமக்க வேண்டியவர்கள்; குழந்தைகளை அல்ல. இதனைச் சொல்லுவதற்குச் சமய அறிவு தேவை இல்லை. சராசரி அறிவே போதும். ஒரு தவறான செயலுக்குத் தங்களது  சமய நிபுணத்துவத்தைக்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை!

இவ்வளவு பேசுகின்ற இந்த முப்தி போன்றவர்கள் அவர்களில் குடும்பங்களில் இது போன்ற திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்களா? அல்லது தங்களது சக முப்திகள் நடத்தி வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் சான்றுக்கு ஒன்று கூட பார்க்க முடியாது. காரணம் அவர்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும். பதவிகள் பெற வேண்டும்.  ஆனால் ஏழை வீட்டுப் பிள்ளைகள் 14 - 16 வயதில் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ வேண்டும்.  அவர்களை இவர்கள் சமய ரீதியில் அதிகாரம் செலுத்த வேண்டும்.

முப்தியின் கருத்து மிகவும் வெறுக்கத்தக்கது. எதிர்க்க வேண்டிய கருத்து! வருந்துகிறோம்!

No comments:

Post a Comment