Wednesday 5 September 2018

செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி

சமீப காலத்தில் பாடல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என்றால் அது செந்தில் கணேஷ் - ராஜலேட்சுமி தம்பதியினரைச் சாரும்.  தமிழ்ப் பாடல் துறையில் ஒரு சுனாமியையே ஏற்படுத்திவிட்டார்கள்!

தமது தமிழ்த் திரைப்படங்கள்  நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படும் மக்களிசைப் பாடல்களை எத்தனையோ ஆண்டுகளாகப் பயன்படுத்தித் தான் வந்திருக்கிறார்கள். அதில் பல பாடல்கள் மிகவும் புகழ் பெற்றப் பாடல்கள்/ அதன்  பின்னர் கானா பாடல்களும் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் பல பாடல்கள் புகழ் பெற்றிருக்கின்றன. கானா பாடல்கள் என்பது சென்னையைப் பின்னணியாகக் கொண்ட பாடல்கள். மக்களிசைப் பாடல்கள் என்பது தமிழகக் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்டவை.

நான் முதன் முதலாக த்மிழகம் சென்ற போது எங்களது கிராமத்திலேயே வயல்களில் வேலை செய்பவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர். அதன் பின்னர்  நான் கேட்கவில்லை. ஆனால் சமீபத்தில் தஞ்சையைச் சேர்ந்த விவசாயப் பெண்கள் கேரளாவுக்கு வயல்களுக்குச் சென்ற பெண்கள்  பாடிக்கொண்டே வேலை செய்வதைக்  காணொளியில் காண  நேர்ந்தது.  ஆக,  இந்த இசை  இன்னும் கிராமப்புறங்களில்  ஒலித்துக்  கொண்டு தான் இருக்கிறது என நம்பலாம்.

ஆனால் இதனைத் தொழிலாகச் செய்யும் இந்த மக்களிசை கலைஞர்கள் நிலை தான் எதிர்பார்த்தபடி இல்லை. ஒரு பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும்  கலையில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களின் வரவேற்பு தான் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. எவ்வளவு தான் கஷ்டமாக இருந்தாலும் அதனை விடாது தொடர்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். "பசியோ பட்டினியோ அது எங்கள் பாரம்பரியம், எங்கள் கலை  நாங்கள்   விடமாட்டோம்"  என்று விடாது தொடர்பவர்களை மதிக்கிறோம்.

இந்த நிலையில் தான் புயலென புறப்பட்டு வந்தார்கள் செந்தில்-ராஜலெட்சுமி  தம்பதியர். அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்கள் விஜய் தொலைக்காட்சி நிலையத்தினர். அவர்கள்  பாடிய பாடல்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன.  பாடியவர்களும் உலகத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டனர்.  இது சாதாரண விஷயம் அல்ல. மிகக் குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பேர் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை.

மக்களிசைக் கலைஞர்களை வாழ வைப்பது நமது கடைமை. நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். நமது கலை வளர அவர்களுக்குக் கை கொடுப்போம். 

வாழ்க மக்களிசை!


No comments:

Post a Comment