பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆலய நிர்வாகங்களுக்கு நல்லதொரு கருத்தைச் சொன்னார். நாம் எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தை நம்பியிருக்கும் ஒரு சமூகமாக மாறிவிட்டோம். நமது தலைவர்கள் அப்படி ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஏறைக்குறைய ஒரு பிச்சைக்கார சமுதாயம் எனப் பெயர் எடுத்து விட்டோம்.
ஆலயப்பணி, சமுதாயப்பணி என்பதையெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. மக்கள் பணியே மகேசன் பணி. தனியாகப் பார்க்க முடியாது. ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலயங்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் நல்லது கெட்டதுகளில் ஆலயம் பங்கேற்க வேண்டும்.
குறிப்பாக ஒரு சில குடும்பங்களில் வறுமை அவர்களை வாட்டியெடுக்கும். பல காரணங்கள். கணவன் வியாதியாகிப் படுத்த படுக்கையாகிவிட்டால் அந்தக் குடும்பம் வறுமையால் வாடும். கணவனைக் கவனிக்க வேண்டும் என்றால் மனைவி வேலைக்குப் போக முடியாது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது. வீடு இல்லை, காப்புறுதி இல்லை. அரசாங்க உதவி என்பது குதிரைக்கொம்பு. இப்படிப் பல துன்பங்களை இந்தக் குடும்பங்கள் அனுபவிக்கின்றன. ஒரு சில குடும்பங்களில் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப பண வசதி இல்லாத குடும்பங்கள் உள்ளன.
இவர்கள் தாங்கள் படும் துன்பங்களை யாரிடம் கொண்டு செல்லுவது என்பதை அறியாமல் இருக்கின்றனர். பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்தால் தான் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். நூறு விழுக்காடு தீர்வு இல்லையென்றாலும் ஐம்பது விழுக்காடு தீர்வாவது கிடைக்கும். ஆலயங்களும் இவர்களுக்கு உதவலாம். உதவிகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு உதவலாம். ஆலயங்களும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்யலாம்.
ஆன்மிகத் துறையில் எந்த அளவுக்கு நமது ஆலயங்கள் நாட்டம் கொள்ளுகின்றதோ அதே அளவு மக்களின் இன்ப துன்பங்களிலும் நாட்டம் கொள்ள வேண்டும் என்பதே அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் செய்தி. நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆலயங்கள் பாடுபட வேண்டும்.
நமது மக்களின் முன்னேற்றம் என்பது ஆலயங்களின் கையில்! அனைவரும் இணைந்து பொறுப்பேற்போம்!
No comments:
Post a Comment