Thursday 13 September 2018

நாடகத் தொடர்களை எப்படி ஒழிப்பது?

இப்போது தமிழ் நாட்டில் நடக்கின்ற பல குடும்பப் பிரச்சனைகளுக்கு தொலைக்காட்சி நாடகத் தொடர்களே காரணம் என்பதாக சொல்லப்படுகின்றது. அனைத்திலும் வன்மம்! வன்மம்! வன்மம்! ஒன்று: அடிதடி வன்மம்! இன்னொன்று பேச்சு வன்மம்!

பேசப்படுகின்ற சொல்லாடல்கள் மூலம் வருகின்ற வன்மம் என்பது மிகக் கடுமையானது.  நாடகங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் பார்க்கின்றவர்களை மிகவும் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்பது உண்மையிலும் உண்மை! நமது குடும்பங்களில் நாம் நினைத்துப் பார்க்காத பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தறுகின்றன. கெடுதல் செய்வதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றன! புதிய கோணத்தில் குடும்பங்களில் புகைச்சலை ஏற்படுத்துகின்றன.

நோக்கம் நல்லவைகளாக இருந்தால் பாராட்டலாம். ஆனால் இந்தத் தொடர்களில் மூலம் நல்லவைகள் சம்பந்தப்படவில்லை. அனைத்தும் கெடுதல்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. எல்லாம் பழிவாங்கள்!  கணவர்களை வாழ விடுவதில்லை! மனைவியர்களை வாழ விடுவதில்லை! அக்காள் தங்கையை வாழ விடுவதில்லை! தங்கை அக்காளை வாழ விடுவதில்லை!

தொலைகாட் சி முன்னால் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தரித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! குடும்ப அமைதியை இழந்து கொண்டிருக்கிறோம். மருமகள்களையும், மாமியார்களையும் எப்படி ஒழிப்பது என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவைகளைப் பார்த்து நாமும் எப்படிப் பின்பற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கள்ளக்காதலுக்காக பிள்ளைகளையே கழுத்தறுத்து கொல்லும் அளவுக்கு தாய்மார்களின் இதயம் கல்லாகிவிட்டது. பிள்ளைகளை  எப்படிக் கொல்லுவது என்பதற்கெல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு தூண்டுதல் இந்த நாடகங்கள் மூலமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

ஆமாம், நாம் என்ன செய்யப் போகின்றோம்? இப்படியே பார்த்துக் கொண்டு நமது வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? ஆர்ப்பாட்டம்  அது இது என்று எதுவும் தேவையில்லை. இந்தத் தொடர்களுக்கு எதிராக கண்டனங்கள் எழ வேண்டும். நமது முகநூலை எதற்கு எதற்கோ பயன்படுத்துகிறோம். தேர்தல் களத்தையே மாற்றி அமைத்திருக்கிறோம்.  இந்த நாடகத் தொடர்களுக்காக முகநூலைப் பயன்படுத்துவோம்.

மாற்றியமைப்போம்!

No comments:

Post a Comment