Friday 14 September 2018

பகுதி மானியம் பெறும் பள்ளிகள்..!

ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் ராமகிருஷ்ணன் நல்லதொரு செய்தியைச் சொன்னார். கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில்  பேசுகின்ற போது அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியில் 90 மாணவர்களே கல்வி பயில இயலும். ஆனால் கல்வி பயிலுபவர்களோ 170 மாணவர்கள்!  குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் இப்படி அதிகமான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்குக் கூடுதலான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்னும் எண்ணம் ஏன் எழவில்லை?   

மாணவர்கள் ஓடி ஆடி விளையாட விளையாட்டுத் திடல் இல்லை. கல்வி கற்க போதிய வகுப்பறைகள் இல்லை. அறிவியல் கூடம் இல்லை. இப்படிப் பல இல்லைகள்!  இந்த இல்லைகளுக்கிடையே  ஆசிரியர்கள் தங்களது பணிகளைச் செய்கிறார்களே,  அவர்களைப் பாராட்ட வேண்டும்!

தோட்டப்புறங்களிலிருந்து தமிழ்ப்பள்ளிகள் நகர்ப்புறங்களுக்கு மாற்றம் கண்டாலும் கல்வி அமைச்சு அவைகளை  தொடர்ந்து  தோட்டப்புறப் பள்ளிகளாகவே,  தங்கள் ஆவணங்களில்  எந்த மாற்றமும் செய்யாமல்,  தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் அதன் மூலம் அந்தப் பள்ளிகளைப் பகுதி நேரப் பள்ளிகளாக தொடர்ந்து வைத்திருக்க கல்வி அமைச்சுக்கு வசதியாக இருக்கிறது! அதனால் குறைவான மானியத்தைக் கொடுத்து அதிகமான மானியத்தை இவர்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ!பாரிசான் ஆட்சியே ஊழல் ஆட்சி தானே! கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியே அதற்குச் சான்று. அது இன்னும் தனது பழைய பெயரிலேயே - ஹொக் லாம் தோட்டத் தமிழ்பள்ளி - என்னும் பெயரிலேயே தொடர்கிறது!

எது எப்படியோ இராமகிருஷ்ணன் நல்லதொரு முயற்சியில் இறங்கி இருக்கிறார். வாழ்த்துகிறோம்! 

இந்த நேரத்தில் கல்வி அமைச்சர் சமீபத்தில் சொன்ன ஒரு செய்தியையும் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நினைவுறுத்துகிறோம். பகுதி உதவி பெறும் பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற வேண்டுமானால்  முதல் தகுதி அவைகள் அரசாங்க நிலத்தில் இருக்க வேண்டும் என்பது தான்.  அதனால் பகுதி உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் அரசாங்கப்பள்ளிகளாக மாற்ற வேண்டும். இது முடியுமா என்பதல்ல கேள்வி.  இது முடியும். அரசாங்கம் நினைத்தால் இது முடியும். முன்பு இருந்த அரசாங்கம்,  ம.இ.கா. வுக்கு இது தேவை இல்லை.  நமது தேவைகளை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது முடியும்.

இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கடமையைச் செய்வார் என நம்புவோம்!

No comments:

Post a Comment