அதிகாரபூர்வமான செய்தி: பி.கே.ஆர், தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா அன்வாருக்காக இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். இந்தத் தொகுதிற்கான இடைத் தேர்தல் மிக விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
அன்வார் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. பி.கே.ஆர். தலைவர் அன்வார் இங்குப் போட்டியிடுவது நல்ல செய்தி தான். ஆனாலும் மனதிலே ஒரு சிறிய நெருடல். காலங்காலமாக இது ம.இ.கா. தொகுதி. இந்தியர்களை அதிகமாகக் கொண்ட தொகுதி. எனக்குத் தெரிந்து முதன் முதலில் இங்கு போட்டியிட்டவர் மகிமா சிங் என்னும் சீக்கியர். இவரின் பெயரைச் சொன்னதும் ஒரு முக்கியமான செய்தி தொடர்ந்து வரும். "தமிழனுக்கு கள் வாங்கிக் கொடுத்தால் போதும் அவன் ஓட்டுப் போடுவான்!" என்னும் உண்மையை அன்றே சொன்னவர்! வருத்தப்பட ஒன்றுமில்லை. அப்போதும் இப்போதும் ஒரே நிலை தான்!
அதற்குப் பிறகு துணை அமைச்சர் கு.பத்மநாபன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் காலத்தில் அவர் மலாய்க்காரர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்தார். அதன் பின் வந்தவர்கள் அவரையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் சொன்ன காரணம்: மலாய்க்காரர்களுக்கு முதலிடம் கொடுங்கள். இந்த ஐந்தாண்டு காலத்தில் நான்கு ஐந்து கோயில்களுக்கு பணம் கொடுத்தால் போதும். தமிழர்கள் திருப்தி அடைந்து விடுவார்கள்! அதுவும் அவர்களுக்குப் பல ஆண்டுகள் வெற்றியைக் கொடுத்தன! அதாவது பள்ளிகள் வேண்டாம் கோயில்கள் போதும்!
போன தேர்தலில் தமிழன் விழித்துக் கொண்ட போது அந்தத் தொகுதி எதிர்கட்சிக்குப் போனது! டேனியல் பாலகோபால் அப்துல்லா வை நம் இனத்தவர்கள் ஒரு தமிழராகத்தான் பார்த்தார்கள். ஆனால் இப்போது அன்வார் போட்டியிடுவது வருங்காலங்களில் அது மலாய்க்காரர் தொகுதியாக ஆகிவிடுமோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது! இருந்தாலும் அன்வார் நல்ல சேவையாளர். அதனால் பயப்பட ஒன்றுமில்லை! அதுவே தொடர்ந்தால் வருங்கால பிரதமரின் தொகுதி என்னும் அந்தஸ்தைப் பெறும்!
இப்போது பாரிசான் சார்பில் யார் போட்டியிடுவார்? அது ம.இ.கா. வின் தொகுதி என்னும் வகையில் ம.இ.கா. வேட்பாளரே நிறுத்தப்படுவார் என நம்பலாம். அப்படி இல்லாவிட்டால் "இதுவும் போச்சிடா!" என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்!
அன்வாரை நாங்கள் வரவேற்கிறோம்!
No comments:
Post a Comment