Tuesday 4 September 2018

ஏன் அந்த பண்பு நம்மிடமில்லை?

தோபுவான் உமா சம்பந்தன் அவர்கள் ஓரு நேர்காணலின் போது தனது கணவரும், முன்னாள் ம.இ.க.தலைவரும், அமைச்சருமான  துன் சம்பந்தனைப் பற்றி சொல்லும் போது அவர் சொன்ன ஒரு வார்த்தை:  ஒழுகும் வீட்டுக் கூரையைக் கூட பழுது பார்க்க அவர் அனுமதிக்கவில்லை! 

ஒரே காரணம். மக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்னும் கருத்து மக்களிடையே எழலாம் என்பதால் அவர் அதனை அனுமதிக்கவில்லை. 

இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் நமது முன்னாள் தலைவர்கள். தமிழ் நாட்டில் பெருந்தலைவர் காமராசர் அவர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் கக்கன், அமைச்சர் லூர்தம்மாள் - இவர்கள் அனைவருமே இறக்கும் போது  ஏறக்குறைய சராசரி மனிதர்களைவிட கீழ் நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். ஓர் உண்மை. அவர்கள் மக்களுக்குத்  தொண்டு செய்ய வந்தவர்கள். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் அவர்களிடம் எழவில்லை!

துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி பேசும் போது அவர் ஒரு சில தவறுகள் செய்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில்  அது தவறுகளாக  அவருக்கும் தோன்றவில்லை, நமக்கும் தோன்றவில்லை.  இந்த நேரத்தில்  ஒன்றை நினைவு கொள்வது அவசியம். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் டான் சியு சின். அப்போது சீனர்களுக்கு அவர் பல வகைகளில் உதவியாக இருந்தார். தொழில் செய்வதற்குப் பலவகைகளில் உதவினார் என்பதாகச் சொல்லப்படுவதுண்டு.  சீனர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு அவரே முக்கிய காரணம் என்பார்கள்.

ஆனால் அந்த காலக் கட்டத்தில் இந்தியர்களின் நிலை வேறு. பெரும்பாலும் தோட்டப்பாட்டாளிகள். இவர்களுக்குள்ள பிரச்சனைகள் வேறு.  அவைகளைக் களைவது தான் அவர் அப்போது எதிர்நோக்கிய பிரச்சனைகள்.

சான்றுக்கு ஒன்று இரண்டு சொல்லலாம். குடியுரிமை அப்போது நேரடியாகவே தோட்டங்களுக்கு வந்து கொடுக்கப்பட்டது. இது நெகிரி செம்பிலானில் நடந்தது. என் தந்தையார் எடுத்துக் கொண்டார். என் தாயார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இரண்டாவது அடயாள அட்டை.. தோட்டத்திலேயே வந்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதிலே நானும் ஒருவன். மூன்றாவதாகச் சொல்ல வேண்டும் என்றால் தோட்டத்துண்டாடல்.  கூட்டுறவு சங்க, மூலம் தோட்டங்கள் வாங்கப்பட்டது.

இவைகள் எல்லாம் துன் அவர்கள் செய்த சாதனைப் பட்டியல்கள். இன்னும் இருக்கலாம். நினைவில் இல்லை. அவர் காலத்தில் எது தேவையோ அதனை அவர் செய்தார். 

அரசியலை வைத்து இந்திய சமுதாயத்திற்கு அந்தக் காலக்கட்டத்தில் அவரால்  செய்ய முடிந்ததை செய்தார். அதனால் அவருடைய சொத்துக்களையும் இழந்தார். அவர் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார் என்பதாக யாரும் அப்போதும் சொல்லவில்லை; இப்போதும் சொல்லவில்லை.

துன் சம்பந்தன் அவர்கள் படித்தவர். பண்பான குடும்பத்தில் வளர்ந்தவர். அதன் பின்னர் இந்தச் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் இரண்டுமே இல்லாதவர்கள்!

ஏன் அந்தப் பண்புகள் இப்போது நம்மிடம் இல்லை என்றால்..? அது நமது பரம்பரையில் இருந்தால் தான் அது தொடரும்!

No comments:

Post a Comment