Saturday 29 September 2018

மைஸ்கில் அறவாரியம் வளர வேண்டும்1

சமீபத்தில் மைஸ்கில் அறவாரியம் பற்றியான ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.

மைஸ்கில் அறவாரியம் பற்றி இதற்கு முன்னரே நான் படித்திருக்கிறேன். அதன் தலைவர் பசுபதி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அங்கு மாணவர்கள் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஆரம்பகாலத்தில்  நானும் என்னாலான மாதாமாதம் ஒரு சிறு தொகையை அனுப்பி உதவிய நாள்களும் உண்டு.

அதே போல ஸ்ரீமுருகன் நிலையத்திற்கும் மாணவர்கள் தங்கிப் படிக்க கட்டடத் தேவைகளுக்காக அப்போதும் பணம் அனுப்பியிருக்கிறேன். 

இவைகளைச் சொல்லுவதற்குக் காரணம் நமது சமூகத்தின் வளர்ச்சி என்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உண்டு. நம்மால் பல காரியங்களைச் செய்ய முடிவதில்லை. அதனால் யார் தங்களின் நேரங்காலத்தை ஒதுக்கிவிட்டு, இந்த சமூகத்திற்க்காகச் சேவை செய்ய முன் வருகிறார்களோ அவர்களை நாம் தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும்; உதவ வேண்டும். அதனை நான் எப்போதும் செய்கிறேன்.

மைஸ்கில் இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என அறியும் போது ,மனம் மகிழ்கிறது. 38 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட மைஸ்கில் இப்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சி அளிப்பது மன நிறைவை அளிக்கிற்து.   பல விதமான தொழிற்பயிற்சிகள். குறிப்பாக மின்சாரம், நீர்க்குழாய், குளிர்சாதனம் போன்ற தொழிற்திறன் பயிற்சிகள் அளிப்பதாகக் கூறப்படுகிறது.

2020-க்குள் தொழிற்திறன் சார்ந்த வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நாம் நம்பும் வேளையில் அதன் திறன் சார்ந்த வேலை வாய்ப்புக்களைச் செய்வதற்குத் தொழிற்பயிற்சி பெற்ற இளைய சமுதாயம் தயாராக இல்லை என்றால் நாம் மீண்டும் வெளிநாட்டுத் திறன்களை நம்பித்தான் தொழில் செய்ய வேண்டிவரும்.

இந்தத்  தொழிற்பயிற்சிகளின் மூலம் நாம் கல்வி கற்ற சமுதாயமாக மாறுகிறோம். நமது வேலை வாய்ப்புக்களும் பிரகாசமாக இருக்கும். நமது வாழ்க்கைத்தரமும் உயரும்.

நமக்குத் தேவையெல்லாம்  கல்வி, கைநிறைய சம்பளம். இதற்குத் தானே நாம் ஆசைப்படுகிறோம்.. அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது திறனுக்கு   ஏற்ப ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதனையே நமது வாழ்க்கையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

நமது சமுதாயத்திற்கு வாழ்வளிக்கும் மைஸ்கில் வளர வேண்டும். வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்! வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment