Tuesday 25 September 2018

ஏன் இந்தப் புறக்கணிப்பு..?

 மொழி என்று வரும்போது அங்குத் தமிழ்ப் புறக்கணிப்பும் சேர்ந்து வருகிறது. அது ஏனோ என்று நமக்குப் புரியவில்லை.

வெ.செல்லமுத்து என்கிற நண்பர் ஒருவர் மலாக்காவில்  உள்ள சில சாலைகளின் பெயர்கள் இந்தியிலும், வங்காள மொழியிலும் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இது நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் தேசிய மொழியை அடுத்து  அதிகாரப்பூர்வ மொழிகள் என்னும் போது அது சீன மொழியும் தமிழ் மொழியும் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வேளை இது  பாரிசான் ஆட்சியில் நடந்ததாக இருக்கலாம். ம.இ.கா.வினரைப் பொறுத்தவரை மொழி என்று வரும்போது அவர்கள் அக்கறை காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்க முடியாது. 

ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லா மாநிலங்களிலும் இந்தியர்களின் அதிகாரம் உண்டு. பக்காத்தான் ஆட்சியில் பலர் ஆட்சி மன்றத்தில் இருக்கிறார்கள். இனி மேலும் யாரையும் குற்றம் சொல்ல வழியில்லை. இப்படி ஒரு தவறு நேர்ந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.  இது போன்ற பிரச்சனைகள் தங்கள் கவனத்திற்கு வரும் போதே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். மக்களிடமிருந்து புகார் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மலாக்கா, காடேக்,  ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமினாதன்  இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். இதற்கு வீதி ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவை இல்லை.

இன்னொரு பிரச்சனையும் இங்கு நாம் பார்க்கிறோம்.  அதுவும் ஜனநாயக செயல் கட்சியினர் எல்லாக் காலங்களிலும்  தமிழ் மொழிக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அவர்கள் அரசாங்க அறிக்கைகளை வெளியிடும் போது சீன மொழியை மட்டும் பயன் படுத்துகின்றனர். கூடவே தமிழும் உண்டு என்பதை மறந்து விடுகின்றனர் அல்லது அலட்சியம் காட்டுகின்றனர். இதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பக்காத்தானிடமிருந்து மொழியைப் பொறுத்தவரை எந்த புறக்கணிப்பையும்  நாம் விரும்பவில்லை. அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டுமென்றால் அது மொழியையும் சேர்த்துத் தான்.

No comments:

Post a Comment