Monday 3 September 2018

அவமதிப்பது குற்றமே...!


எந்த மதத்தினாராக இருந்தாலும் சரி,  பிற  மதத்தை அவமதிக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

சமீபத்தில்  24 வயது இளைஞன் ஒருவன் இஸ்லாமிய சமயத்தை அவமதிக்கும் வகையில் பேசி, காணொளி ஒன்றை வேளியிட்டதின் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இது போன்ற சமய அவமதிப்புக்களை நாம் வரவேற்கவில்லை. பல சமயத்தினர்,  பல இனத்தினர், பல மொழியினர் வாழ்கின்ற நாடு நமது நாடு.  எந்த ஒரு துவேஷ கருத்துக்களும் இனங்களுக்கிடையே  பகைமையை உருவாக்கும்.

ஆனால் இது நாள் வரை என்ன நடந்தது?  முந்தைய அரசாங்கம் பாரபட்சமான,  ஒரு தலைசார்பான கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததே  இது போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதற்கான காரணிகள்.

இதற்கு முன் நடந்தது என்ன?  இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசலாம். இழிவாகப் பேசலாம். இடித்துரைத்துப் பேசலாம். அதனை தட்டிக் கேட்க யாராலும் முடியாது.  அது தவறு என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தட்டிக் கொடுக்கப்பட்டார்கள். தவறு இல்லை என்பதாக ஊக்கமூட்டப்பட்டார்கள்!

அதனையே பிற மதத்தினர் இஸ்லாமைப் பற்றி பேசும் போது  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்கள் மீது அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டாங்களும்,  நாட்டில் குழப்பங்களும் ஏற்படுத்த ஒரு தரப்பு ஆள் அம்பு சேனைகளோடு தயாராகக் காத்துக் கொண்டு இருந்தனர்!  அதற்கு அரசாங்கமும் உடந்தை!

பொதுவாக அரசாங்கம் உடந்தை என்பதால் தான் அவர்களால் மற்ற மதத்தினரைப் பேச விடாமல் செய்ய முடிந்தது. அதற்கு உதாரணம் ஜாகிர் நாயக்!

ஆனால் அது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.  யாரும் மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது தான் நாம் சொல்லவந்த செய்தி. இந்து மதத்தையோ, கிறிஸ்துவ மதத்தையோ அவமதித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் எல்லாம் ஒன்று தான். அது செயல்படுத்துப்பட வேண்டும்.

குற்றம் குற்றமே!

No comments:

Post a Comment