Friday 14 September 2018

ஏன் இந்த எதிர்ப்பு...?


பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதை பல தலைவர்கள் விரும்பவில்லை!

அவர்கள் சொல்லுகின்ற காரணங்களில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவருடைய மனைவி தனது தொகுதியை அவருக்கு  விட்டுக் கொடுக்கலாம்.  ஏன் அவரின் மகள் கூட அவரது தொகுதியை விட்டுக் கொடுக்கலாம். இப்படி தனது சொந்த உறவுகளை புறந்தள்ளிவிட்டு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டேனியல் பாலகோபால் அப்துல்லாவை  ராஜினாமா செய்ய வைத்தது சரியான முடிவா என பலரும் கேள்வி கேட்பது சரி தான்.

அன்வாரின் மனைவி, வான் அஸிஸா அவரது பாண்டான் நாடாளுமன்ற தொகுதியை தனது கணவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை. வான் அஸிஸா நாட்டின் துணைப் பிரதமராக இருப்பவர்.  அவர் தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால் தனது துணைப் பிரதமர் பதவியை இழக்க நேரும். அப்படியே அவர் விட்டுக் கொடுத்து அன்வார் வெற்றி பெற்றால் அவர் துணைப் பிரதமராக வர விரும்பமாட்டார்! காரணம் உண்டு.  டாக்டர் மகாதிரிடம் துணப்பிரதமராக இருந்தவர்கள் யாரும் பிரதமராக வந்ததில்லை என்கிற பொதுவான ஒரு கருத்து மக்களிடையே உண்டு! அந்த அச்ச உணர்வு அவரின் குடும்பத்தினரிடையேயும் இருக்கலாம்! அதுவும் ஒரு காரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

அன்வாரின் மகள், நூருல் இஸ்ஸா அவரது பெர்மாத்தாங் பாவ் தொகுதியை தனது தந்தைக்கு விட்டுக் கொடுக்கலாம். நூருல் இஸ்ஸா தொடர்ந்து அரசியலில் இருக்கப் போகிறவர். ஒரு வேளை வருங்காலங்களில் பிரதமராக வரக் கூடிய வாய்ப்பும் உண்டு.  தாயார் வான் அஸிஸா அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என நம்பலாம். ஆனால் மகள் அரசியலின் தொடர்கதை!

இப்படிப் பல கோணங்களில் யோசித்துத் தான் அன்வார் போர்ட்டிக்சனில் போட்டி இடுகிறார்.  வருங்காலப் பிரதமர் என்னும் முறையில்  போர்ட்டிக்சன் தொகுதி மட்டும் அல்ல நெகிரி செம்பிலான் மாநிலமும் நல்ல முன்னேற்றத்தைக் காணும் என நம்பலாம்.   மேலும் பிரதமர்கள் அனைவரும் வடப் பகுதியில் இருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது தெற்குப் பகுதிக்கும் ஒரு வாய்ப்பு. நல்லது தானே!

இந்த எதிர்ப்புக்களையெல்லாம் தாண்டி அன்வார் வெற்றி பெறுவார்! வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment