Tuesday 11 September 2018

புதிய கட்சி ஆரம்பித்தார் வேதா..!


இந்தியர்களுக்கென புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார் ஹின்ராஃ தோற்றுனரும், பிரதமர் துறையின் அமைச்சருமான மாண்புமிகு வேதமூர்த்தி பொன்னுசாமி அவர்கள். கட்சியின் பெயர் எம்.ஏ.பி. அதாவது  MALAYSIAN ADVANCEMENT PARTY. தமிழில்: மலேசிய முன்னேற்றக் கழகம். 

பொதுவாக நம்மிடம் உள்ள கேள்வி: இந்தியர்களுக்கென தனி  அரசியல் கட்சி தேவையா என்பது தான். காரணம் நாம் எந்த ஒரு தொகுதியில் நின்றாலும் மலாய்க்காரர்-சீனர்  ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் நமக்குத் தெரியும்!  ஒரு சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் நமக்குச் சாத்தியமே இல்லை! ஆனால் ஒன்று.  சுமார் 64 நாடாளுமன்ற தொகுதியில் நம்முடைய ஆதரவு இல்லாமல் வேற்று இனத்தவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை! அதனையும்  ஏற்றுக் கொள்ள வேண்டும்!

இப்போது பக்காத்தான் கூட்டணியில் உள்ள கட்சிகளில் மலாய் ஆதரவு கட்சிகள், சீன ஆதரவு கட்சிகள் எவை என நமக்குத் தெரியும். ஆனால் இந்தியர்களுக்கு ஆதரவான கட்சிகள்.....? எல்லாக் கட்சிகளுமே பல்லின கட்சிகள் என்பதாகவே கூறிக் கொள்ளுகின்றன. ஆனால் பிரச்சனைகள் வரும் போது மலாய் ஆதரவு கட்சிகள் எது, சீன ஆதரவு கட்சி எது என்பது வெளிப்படையாகவே தெரிகின்றன! ஆனால் இந்தியர்களுக்குக் குரல் கொடுக்க எந்தக் கட்சியும் இல்லை என்பது இப்போதைய பக்காத்தான் வரை நமக்குத் தெரிகிறது!

அதனால் ம.மு.க.அமைவதை நான் வரவேற்கிறேன்.  நம்முடைய பிரச்சனைகளைக் கொண்டு செல்ல நமக்கோர் அமைப்பு வேண்டும்.  நமக்கு  வலிமையான அரசியல் தேவை. இப்போது நம்முன் உள்ள பிரச்சனைகளை  யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அடையாள அட்டை,  குடியுரிமை, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த பிரச்சனைகள் - இவைகள் எல்லாம் இழுத்துக் கொண்டே போகும் எனும் அறிகுறிகளே தென்படுகின்றன! முடிவுக்குக் கொண்டு வருவார்கள் எனத் தோன்றவில்லை.  கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்கள் வாய்த் திறப்பார்களா? தெரியவில்லை! 

பிரச்சனைகளை அடையாளங்கண்டு அதனைத் தக்க இடத்திற்குக் கொண்டு செல்ல வேதமூர்த்தி போன்ற தலைவர்களே நமக்குத் தேவை. அவர் தனி ஆளாக, தனி கட்சியாக இருக்கிறார். யாருக்கும் பயப்பட ஒன்றுமில்லை! ஏற்கனவே பதவியைத் தூக்கி எறிந்தவர்.  இவரைப் போன்றவர்கள் தான் இந்த சமுதாயத்தை வழி நடத்த முடியும்.

ம.மு.க. வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment