Sunday 23 September 2018

கைமாறுகிறதா இந்தியரின் சொத்து..?


ம.இ.கா.வின் சொத்து அதாவது இந்தியரின் சொத்து என்று கருதப்பட்ட ஏம்ஸ்ட் பல்கலைகழகம் கைமாறுகிறது என்கிற பத்திரிக்கைச் செய்தியைப் படித்த போது சும்மா ஒரு புன்னகையைத் தவிர கோபப்பட முடியவில்லை!~ இதெல்லாம் நமக்கு மரத்துப் போன செய்தியாகப் போய்விட்டது! மைக்கா ஹோல்டிங்ஸ் என்று நமது கைவிட்டுப் போனதோ அன்றே நமக்கும் ம.இ.கா.வுக்கும் உள்ள உறவுகள் அறுந்து போய் விட்டன!

நமது சமுதாயம் எல்லாக் காலங்களிலும்  யரோ ஒருவனை நம்பி வாழ்ந்த சமுதாயம். அவன் நல்லவனா கெட்டவனா என்று தீர ஆலோசிக்காமல் "தலைவனே தெய்வம்!"  என்று அவனை நம்பியே வாழ்ந்த சமுதாயம்! அதனாலேயே கெட்டுக் குட்டிச்சுவரான சமுதாயம்!

ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்பது ஒரு காலத்தில் நாம் மிகவும் எதிர்பார்த்த ஒரு பல்கலைக்கழகம். குறைந்த செலவில் அதிகமான இந்திய டாக்டர்களை உருவாக்கும் என எதிர்ப்பார்த்தோம். அதில் தவறில்லை. காரணம் இந்தியர்கள் - ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல் தங்களது பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து உருவாக்கப்பட்ட கல்லூரி அது. எதிர்ப்பார்ப்புகள் அதிகம். 

ஆனால் இதில் எதுவும் நிறைவேற வில்லை. இப்போதும் குறைவான இந்திய மாணவர்கள் தான் கல்வி கற்கின்றனர். மற்ற கல்லூரிகளை விட இங்குக்  கட்டணம் அதிகம்  என்றும் சொல்லப்படுகிறது. இப்போது இந்தக் கல்லூரி என்பது இந்தியர்களின் சொத்தும் அல்ல என்கிற பேச்சும் அடிபடுகிறது!

ஒன்றை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். அது ம.இ.கா. சொத்து அல்ல  என்று தான் துன் சாமிவேலு சொல்லுகிறார். இந்தியர்களின் சொத்தும் அல்ல அது. சாமிவேலுவின் குடும்பச்  சொத்து என்பதிலும் எந்த ரகசியமும் இல்லை!  ஆமாம், சாமிவேலு இந்தியர் தானே! ஆக, அந்தச் சொத்து வேறு எங்கும் போய்விடவில்லை! அது இன்னும் இந்தியர்களின் கையில் தான் இருக்கிறது! அதை நினைத்துப் பார்த்துத தான் நாம் நிம்மதி நாட வேண்டும்!

ஒரு வேளை அந்தக் கல்லூரி ஒரு சிங்கப்பூரியரிடம் விற்கப்பட்டு அது சீனர் கையில் மாறினால் அப்போது தான் அது இந்தியர்களின் கையை விட்டுப் போனதாக எடுத்துக் கொள்ளலாம். சீனர்கள் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். காரணம் அதிகப் பணம் போட்டு வாங்குபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்!

ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் ம.இ.கா. சொத்தும் அல்ல. இந்தியர்களின் சொத்தும் அல்ல என்னும் நிலைமைக்கு ஆளான பின்னர் அது பற்றிப் பேச என்ன இருக்கிறது?

அப்படியே கைமாறினால் அதுவே துன் சாமிவேலு இந்த இந்திய சமுதாயத்திற்குச் செய்த கைம்மாறாக இருக்கட்டும்!

No comments:

Post a Comment