தைப்பூசத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு அவர்களின் பசி தீர்க்க, தாகம் தீர்க்க பல அமைப்புக்கள் உதவி கரம் நீட்டுகின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.
நம் நாட்டில் இந்த அளவுக்கு வேறு ஏதேனும் சமய இயக்கங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்கின்றனவா என்றால் 'இல்லை' என்று தாராளமாக சொல்லலாம்.
காரணம் தைப்பூசம் என்றாலே பல இலட்சம் மக்கள் கூடுகின்ற இடமாக இப்போது மாறிவிட்டது. அதனால் உணவு விற்பனை என்பது இயலாத காரியம்! தொண்டு நிறுவனங்கள் தான் பக்தர்களின் பசியைப் போக்க வேண்டும்.
பக்தர்கள் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். இந்த உணவுகளுக்கு பின்னால் பலருடைய உழைப்பு இருக்கிறது. பலருடைய பணம் இருக்கிறது. சும்மா எதுவும் கிடைப்பதில்லை ஆனால் உங்கள் கைகளுக்கு வரும் போது அது உங்களுக்குச் சும்மா கிடைக்கிறது! சும்மா கிடைக்கிறது என்பதற்காக அதனை அலட்சியப் படுத்த வேண்டும் என்னும் அவசியம் இல்லை!
உணவு என்னும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அது உணவு. உண்ண உணவு இல்லாமல் பல கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செத்து மடிகின்றனர். ஏன் நம் நாட்டில் கூட சாப்பிட ஒன்றுமில்லாத ஏழைகள் எத்தனையோ பேர்! மறவாதீர்கள்!
தமிழ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட காஜா புயலினால் என்ன ஆயிற்று? உணவிலே புரண்டவர்கள் எல்லாம் உண்ண உணவில்லாமல் கதறி அழுத காட்சிகளை நாம் பார்த்தோம். இன்னும் அவர்களின் பாடு தீரவில்லை. தீர்க்க ஆளில்லை!
அதனால் பக்தகோடிகளே! உணவுகளைத் தூக்கி எறியாதீர்கள். குப்பைத்தொட்டிகளை வழிய விடாதீர்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். உங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். வயிறாரச் சாப்பிடுங்கள். ஆனால் வீணாக்காதீர்கள். உங்களுக்குத் தேவையான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான உணவு என்று பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் அளவு என்ன என்று உங்களுக்குத் தெரியும். யானைகளுக்குப் போட வேண்டியவைகளைப் பூனைகளுக்குப் போடாதீர்கள்!
உணவு வயிற்றுப் பசியைக் போக்கத்தான். அதனைஅழகாக உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள். இறைவனை வழிபடுங்கள். உணவை வீணடிப்பது மூலம் இறைவனை இம்சிக்காதீர்கள். இறைவன் கொடுத்த உணவு என்று நினையுங்கள். இறைவன் கொடுத்த உணவு என்று நினைத்தால் தான் உங்களுக்கு இறை ஆசி கிடைக்கும்.
உணவை வீணடிக்காதீர்கள்!
No comments:
Post a Comment