Sunday 20 January 2019

குறைத்துக் கொள்ளுங்கள்...!


தைப்பூசத்  திருவிழாவின் போது தேங்காய் உடைப்பதை   குறைத்துக் கொள்ளுங்கள் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்துகிறது.

தைப்பூசம் சமயத் திருவிழா.  தேங்காய் உடைப்பது நமது பாரம்பரியம். ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படுவதை  ஒவ்வோர் ஆண்டும் பார்த்து வருகிறோம்.

தமிழ் நாட்டில் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகின்ற ஒரு திருவிழா.  பழனியில்  அதிவிமரிசையாக கொண்டாப்படுகிறது.

தமிழ் நாட்டுக்கு வெளியே மலேசியாவில் தான் மிக விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது. பத்துமலை, தண்ணிர்மலை,  கல்லுமலை இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குறிப்பிட்ட மலைகளில் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

மலேசியாவில் மட்டும் தான் நீண்ட இரத ஊர்வலங்கள் அதனூடே தேங்காய் உடைப்பது என்பது நம்மிடையே ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி விட்டது. தவறில்லை.  

இங்குச் சொல்ல வருவதெல்லாம் தேங்காய்களை வீணடிக்காதீர்கள் என்பது தான். தேங்காய் உடைப்பதில் போட்டி வேண்டாம்.  நமது மனத் திருப்திக்காக ஒன்று உடைத்தாலே போதுமானது.  போட்டிக்காக உடைப்பது போக வேண்டிய இடம் போய் சேராது!

மேலும் தேங்காய் ஓர் உணவுப் பொருள். உடைந்த தேங்காய்களைச் சேகரித்து அதனையே தங்களது பசிக்காக உண்ணும் பலர் இருக்கின்றனர். தேங்காயை உடைக்காமல் அவர்களிடமே உண்ணக்  கொடுக்கலாம். உடைப்பதை விட அது இன்னும் மேல்.

பக்தி என்னும் பெயரில் தேங்காய்களை உடைத்து அந்தத் தேங்காய்கள் பலரின் கால்களில் மிதிப்பட்டு, உதைப்பட்டு, அடிப்பட்டு பார்ப்பதற்கே நமது பக்தி கேவலப்படுத்தப் படுகிறதே என்னும் உணர்வும் நமக்கு வேண்டும். பொது மக்கள் ந்டக்கின்ற பாதையில் இப்படி ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் சிதறிடக்கப்பட்டுக் கிடந்தால் யார் என்ன செய்ய முடியும்? அதனை ஓர் உணவாக நாம் பார்க்க வேண்டும். அதற்கான மரியாதையும் நாம் கொடுக்க வேண்டும்.

பக்திக்கு நாம் மரியாதைக் கொடுக்க வேண்டும். தேங்காய் ஓர் உணவு என்னும் முறையிலும் நாம் மரியாதைக் கொடுக்க வேண்டும்.

வீணடிப்பு வேண்டாம். எல்லாவற்றுக்கும்  ஓர் அளவு உண்டு. அளவுக்கு மீறினால் ....?

அதனால் முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment