Wednesday 16 January 2019

மனிதம் இன்னும் வாழ்கிறது..!

சில  சமயங்களில்  சில செய்திகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அத்தகையைச் செய்தி தான் இன்று காலை படித்த செய்தி. ஏழு வயது  மாணவி பள்ளிவிட்டுப் போகும் போது வீட்டுக்குப்  போகும் பாதையைத் தவற விட்டார். அப்போது ஒரு நல்ல மனிதர் - ஒரு மலாய்க்காரர் - அவரது காரில் அந்தக் குழந்தையை ஏற்றிக் கோண்டு போய் அவரது வீட்டில் விட்டார் என்பது  தான் அந்தச் செய்தி.

பொதுவாகவே  பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லி வளர்க்கிறோம்?   யாருடைய  காரிலும் ஏறாதீர்கள். புதிய - அறிமுகமில்லாத, தெரியாத மனிதர்கள் என்றால் ஒதுங்கி நில்லுங்கள். என்கிறோம்.  நம  தினசரி கடமைகளில்  இதுவும் ஒன்றாகி விட்டது.  அப்படி சொல்லுவதிலும் ஒரு நியாயமுண்டு. காரணம் நாட்டில் நடக்கின்ற சம்பவங்களைப்  பார்க்கும்  போது  பெற்றோர்கள்  எந்த  அளவுக்கு அவர்கள் பிள்ளைகளைப்   பற்றி  கவலைப்படுகிறார்கள் என்பது  விளங்கும்.

ஆனால் அந்த  மலாய்க்கார நண்பர் அனைத்தையும் பொய்யாக்கி விட்டார். கடத்தல் சம்பவங்கள் ஒரு தொடர் கதையாக நடக்கும் நாட்டில் இப்படி ஒரு சம்பவமா என்று நமக்கு வியப்பைத் தருகிறது!

ஆனாலும்  இப்படி  ஒரு சம்பவத்தை வைத்து பெற்றோர்கள் ஏந்த ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது. கடத்தல்காரர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கும் வரை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.  ஒரு தமிழ்ப்பள்ளிக்கு  முன்னால் நடந்தது.  பள்ளிப் பேருந்துக்காக காத்துக் கிடந்த ஒரு மாணவியை  ஒரு வேனில் வந்த நபர் "உன் தகப்பனார் காரில் அடிபட்டு விட்டார்  உடனே வா!" என்று அழைத்திருக்கிறான். அந்த மாணவி சுதாகரித்துக் கொண்டாள். "நான் தலைமை ஆசிரியரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று  பள்ளி அலுவலகத்தை நோக்கி ஓடிவிட்டாள். இது உண்மை சம்பவம். 

இது போன்று பல சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  எப்படியோ கடத்தல்காரர்கள்  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.  தப்பிப்பது எளிது என்கிற  போது  கடத்தல் சம்பவங்கள் கூடிக் கொண்டே போவதும் நடந்து கொண்டு தான் இருக்கும்.

எது எப்படி இருப்பினும் பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விடக்கூடாது. ஏதோ ஒரு சம்பவம். எந்தப் பக்கமும் பாதிப்பு  இல்லை. நல்ல மனதோடு  அந்த  மனிதர்  உதவி செய்திருக்கிறார். நல்லவர்கள் நாடெங்கிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த நல்லவர்களை வாழ்த்துவோம்; வரவேற்போம்! 

மனிதம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது!  அது மலர வேண்டும்!  பெருக வேண்டும்!

No comments:

Post a Comment