Thursday 3 January 2019

கொள்கலனில் ஒரு வகுப்பறை..!

படிப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது; கேட்பதற்கும் கூச்சமாக இருக்கிறது!

ஆமாம்,  கொள்கலனில் ஒரு வகுப்பறை என்று படிக்கும் போது இப்படியும் மலேசியாவில் நடக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.  குவந்தான்,  ஜெராம் தோட்டத் தமிழப்பள்ளியில் தான் இந்த நிலைமை! முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆறு பேர் இந்த ஆண்டில் சேர்ந்திருக்கின்றனர். கொள்கலனில் படிப்பதற்கு அவ்வளவு போதும் என்று பெற்றோர்கள் நினைத்திருக்கலாம்.  ஆமாம். அங்கு என்ன அமைச்சர் வீட்டுப் பிள்ளைகளா படிக்கப் போகிறார்கள் என்று கல்வி அமைச்சு அமைதியாக இருந்திருக்கலாம்!

ஆனால் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? கடந்த இருபது ஆண்டுகளாக இதே நிலை தான் என்கிறார் பள்ளியின் வாரியத் தலைவரான டத்தோ! கேட்பதற்கே சங்கடமாக இருக்கிறது! ஒரு டத்தோவுக்கே இவ்வளவு தான் மதிப்பு, மரியாதையா! அல்லது டத்தோவும் அரசியல் விளையாட்டு விளையாடுகிறாரா  என்பதும் தெரியவில்லை!    

புதிய அரசு அமைந்து இந்த ஏழு மாதத்தில் துணைக்கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறார். இன்னும் கல்வி அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதே சுறுசுறுப்பை முன்னாள் அரசாங்கத்தில் இருந்த 'நம்ம' துணைக்கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இந்த இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு முறை என்றாலும் இருபது முறை சந்தித்திருக்கலாம். அடியாத மாடுகளைப் படிய வைக்க வேறு வழிகள் தான் என்ன?

எது எப்படி இருப்பினும் நாம் சொல்ல வருவது ஒன்று தான். பள்ளி நிர்வாகத்தினருக்குத் தாங்கள் பணிபுரியும் பள்ளியின் மீது  எந்த  வித  அக்கறையும் இல்லை என்பது மட்டும்  உண்மை!  ஆமாம்,  டத்தோ, டத்தோஸ்ரீ வீட்டுப் பிள்ளைகளா  படிக்கப் போகிறார்கள்!  தோட்டப்புறத்தானுக்கு இதுவே போதும் என்று கல்வி அமைச்சு நினைக்கிறது!


என்னைக்  கேட்டால்  பல  பிரச்சனைகள்  பள்ளி நிர்வாகத் தரப்பினரிடமிருந்தே வருகிறது என்பேன். நான்  பார்த்தவரை  அப்படித்தான். 

வெறு வழியில்லை.  இவர்களோடு  தான்  நாம்  வாழ வேண்டும். கொள்கலனாக இருந்தால் என்ன, மாட்டுக் கொட்டையாக இருந்தால் என்ன அவர்கள்  வீட்டுப்  பிள்ளைகள்  படிக்காத வரை எதுவாக இருந்தாலும் அவர்களுக்குச் சம்மதமே!

கொள்கலனுக்கு வெகு விரைவில் கொள்ளி வைக்கும் நாள் வரும் என நம்புவோம்!

No comments:

Post a Comment