சில விஷயங்களை நம்மால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. தமிழ்ப்பள்ளி பிரச்சனை என்னும் போது நமக்கு மனம் வலிக்கத்தான் செய்கிறது.
ஆனால் என்ன செய்வது? பாரிசான் ஆட்சியில் உள்ள மிச்சம் உள்ள எச்சங்களை அரசு எதிர்நோக்குகிறதோ இல்லையோ தமிழ்ப் பள்ளிகளை நேசிக்கும் நமக்கு அரசை விட அதிகமாகவே நாம் பாதிப்படைகிறோம்.
காஜாங், செமினி தமிழ்ப்பள்ளியின் நுழைவாயிலை மாநகர் மன்ற அதிகாரிகள் உடைக்க முயற்சி செய்த போது அதனைப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக செய்தி.
ஆக, இது புது செய்தி அல்ல. பழைய செய்தி. நம்மைப் போன்று வெளியே உள்ளவர்களுக்குப் புதிய செய்தி. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இதனை அறிந்திருக்கின்றனர். பள்ளி நிர்வாகம் இதனை அறிந்திருக்கிறது அவர்களுக்கு அது புதிதல்ல.
எப்போது இந்தப் பிரச்சனை ஆரம்பமானது என்பது தெரியவில்லை. நிச்சயமாக சென்ற பாரிசான் ஆட்சியில் தான். ஆனால் எவ்வளவு நாளைக்கு அதனையே நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? ஏற்கனவே பக்கத்தான் ஆட்சியில் தான் சிலாங்கூர் மாநிலம் உள்ளது. ஆனாலும் கல்வி மத்திய அமைச்சிடம் இருந்தது நமக்குத் தெரியும். அதனால் அப்போது அவர்களால் எதனையும் செய்யா இயலாத நிலை. ஆனால் இப்போது?
கணபதி ராவ் அந்த மாநிலத்தின் பிரச்சனைகளை அறிந்தவர். தமிழ்ப்பள்ளிகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் இந்தத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனையை அறிந்தவராகத் தான் இருப்பார். இப்போது இவர்களது இந்த "நுழைவாயில்" பிரச்சனையை அப்போதே அறிந்த அவர் கொஞ்சம் சிரத்தை எடுத்து இப்போதாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுத்திருக்கலாம். கல்வி என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்காக அவர் அதனை அலட்சியப்படுத்த முடியாது. கல்வி அமைச்சராக இருப்பவர் அவரது கட்சியினர் தான். அவரே அதற்கு ஒரு தீர்வு காண முயற்சி எடுத்திருக்கலாம். அவருடைய நிலைப்பாடு என்னவென்பது நமக்குத் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் ஒன்று சொல்லுவேன். புதிய அரசாங்கத்தின் மீது நாங்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் மறவாதீர்கள். இத்தனை ஆண்டுகள் பாரிசான் கட்சி எங்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது இப்போது இவர்களும் அதே பாணி ஆட்சியை எங்கள் மீது திணிக்க வேண்டாம்
முடிந்த அளவு இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டுங்கள். அதுவும் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுங்கள்.
செமினி தமிழ்ப்பள்ளியின் உள்ளூர் அரசியல் என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வி முக்கியம். அது தீர்க்கப்பட வேண்டும். முன்னர் நடந்த குளறுபடிகள் இனி வேண்டாம்.
பக்கத்தான் ஆட்சி பக்காவாக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment