பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொரு வாரமும் விலை ஏறுமா, இறங்குமா என்று இப்போது பார்க்க வேண்டியுள்ளது. இறங்கினால் மகிழ்ச்சி தான்!
எண்ணைய் விலை குறைந்தாலும் விலைவாசிகளின் விலை குறைய வேணடுமே என்கின்ற எதிர்பார்ப்பு இயற்கையாகவே பொது மக்களுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படி குறைகின்ற சாத்தியம் உண்டா என்கின்ற கேள்வி எழும்போது கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது! காரணம் விலைவாசி ஏறினால் ஏறியது தான் என்கிற ஒரு மனப்பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டோம். அதே போல வியாபாரிகளும் விலைகளை ஏற்றத் தயராக இருக்கிறார்களே தவிர குறைக்க வேண்டும் என்னும் மனப்பக்குவத்தை இன்னும் பெறவில்லை. ஏறினால் ஏறியது தான் என்பது அவர்களின் அன்றாட மந்திரமாக ஆகி விட்டது.
ஒரு சிறிய விஷயம் தான். எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி விட்டது. பழங்கள் தான். எல்லாம் நாட்டுப் பழங்கள் தான். இரண்டு, மூன்று வெள்ளி விற்றவை இப்போது நூறு விழுக்காடு ஏறி விட்டது! எதுவும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாக வில்லை! உள்ளூர் பழங்கள் தான்! எண்ணைய் விலை குறைந்து விட்டதே அப்புறம் ஏன் விலை ஏறுகிறது? அதற்கும் காரணம் உண்டு.
"இப்போது தானே எண்ணைய் விலை குறைந்திருக்கிறது. இதற்கு முன் நாங்கள் வாங்கிய உரம், மருந்துகள் எல்லாம் ஏகப்பட்ட விலை கொடுத்துத் தானே வாங்கினோம். இப்போது நாங்கள் விலைகளைக் குறைத்தால் எங்களுக்கு நட்டம் வரும் இல்லையா?" என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்!
இதனையே காரணமாக வைத்து சில காலங்களைக் கடத்துவார்கள்! அடுத்து விலை எப்போது ஏறும் என்று தான் அவர்கள் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்!
எது எப்படியோ நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். விலைவாசியைக் குறைப்பது என்பது கடைக்காரர்களால் இயலாத காரியம். அரசாங்கம் தலையிட்டால் ஒழிய விலைகள் குறைகின்ற வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் அரசாங்கமே விலைகளை நிர்ணயிக்க வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள்.
இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் இருக்கின்ற விலைகளை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விலைகள் குறைக்கப்பட வேண்டும். முன்பெல்லாம் இன்று எண்ணைய் விலை ஏறினால் நாளை அனைத்து விலைகளும் ஏறிவிடும்! ஆனால் இப்போதோ எண்ணைய் விலை குறைந்து ஒரு மாதம் ஆகியும் எதுவும் குறைந்த பாடில்லை!
ஏறியது ஏறியது தான் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது! அதற்கு ஒரு முடிவு கட்டுவது என்பது அரசாங்கத்தால் முடியும்! முடிய வேண்டும்!
No comments:
Post a Comment