Monday 14 January 2019

சகிப்புத்தன்மை உங்களுக்கும் சேர்த்துத்தான்...!


இந்நாடு ஓர் இஸ்லாமிய  நாடு.   இதனை நாம் - அனைத்து மதத்தினரும் - ஏற்றுக் கொண்டது தான்.  இங்கு வாழ்கின்ற மக்கள் இஸ்லாமியர், கிறிஸ்துவர், இந்துக்கள், பௌத்தர்கள், பாரம்பரிய சீன மதத்தினர் இன்னும் சிறு சிறு மதத்தைச் சேர்ந்தவர்கள். 

இது தான் மலேசியா.    இதில் இஸ்லாமியர்கள் மட்டுமே சுமார் 70 விழுக்காட்டினர். கூடலாம அல்லது குறையலாம். ஆனால்  இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சி  என்பது அசுர வளர்ச்சி எனலாம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சியே அன்றி எந்தத் தளர்ச்சியும் இல்லை. மற்ற மதத்தினரின் வளர்ச்சி என்பது வெறும் பூஜ்ஜியமே! குறைகிறதே தவிர கூடுகிறது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

ஆனால்  ஒரு  சில அரசியல்வாதிகள் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய அரசியல்வாதிகள்  பேசுகின்ற போது எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது என்று அதிசயத்துப் போகிறோம்! இவர்கள் அரசியல் இலாபம் பெறுவதற்கு எதை எதையோ கற்பனையான செய்திகளையெல்லாம்  வெளியிட்டு  வேஷம்  போடுகிறார்களே  என்று  அவர்களின்  அறிவின்  மீதே  நமக்குச்  சந்தேகம்  வந்து விடுகிறது!

அந்த  அறிவு ஜீவிகளில் ஒருவர் தான் ரிசால் மரைக்கான்! பினாங்கு, கப்பளா பத்தாஸ்  நாடாளுமன்ற ஊறுப்பினர். அம்னோவின்  தங்க  மகனில் ஒருவர்!  இவர் பெயரைப்  பார்த்தாலே  தெரியும்  கலப்பற்ற தூயவர் என்பது!

ஒரு செய்தியை அவர் கொண்டு வந்திருக்கிறார்.  பினாங்கில்  ஏதோ  ஒரு  கட்டடத்தில்  இரவு நேரத்தில் விளக்குகள் போடப்பட்டதும் சிலுவை வடிவில் ஒளி வீசுகிறதாம்! பாவம்! பயந்து போயிருக்கிறார் மனிதர்! பினாங்கு  தீவுக்கு  ஏதோ  அபாயம் வந்து விட்டதோ  என்று எண்ணி  புலம்பியிருக்கிறார்! உடனே  தனது  பரிவாரங்களுக்கு ஓலமிட்டிருக்கிறார்! போய் காவல்துறைக்கு  புகார் செய்யுங்கள்!  ஆபத்து நெருங்கிவிட்டது என்று.

இப்படியெல்லாம் இவரால் எப்படி  கற்பனை   செய்ய முடிகிறது? மரைக்காயர்  அடிக்கடி  ஒன்றை  மறந்து விடுகிறார். இஸ்லாமியர்களோ எழுபது விழுக்காட்டினர். கிறிஸ்துவர்களோ பத்துக்கும் குறைவான விழுக்காட்டினர். இந்தப் பத்துக்கும் குறைவான  விழுக்காட்டினர்  எப்படி  எழுபது  விழுக்காட்டினருக்கு  மிரட்டலாக  இருக்க  முடியும்? 

இப்படி பத்து விழுக்காட்டுக்கும் குறைவான கிறிஸ்துவர்களைப்   பார்த்து  ஏன் மரைக்காயர் புலம்புகிறார்?  நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள்  ஆபத்து  ஆபத்து  என்று  கத்தினால்  உங்களிடம்  ஏதோ  குறைபாடு  இருக்கிறது  என்பது  தான்  அர்த்தம்!  எழுபது  விழுக்காடு மக்கள் பத்து  விழுக்காடு மக்களைப் பார்த்து  பயப்படலாமா?  இங்கு ஒன்றைக் குறிப்பிட  விரும்புகிறேன். மக்களிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரசியல்வாதிகளிடம் தான்  பிரச்சனையே!  ஏன் அவர்களிடம் பிரச்சனை?  காரணம் அவர்கள் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல. கூடுதலாக அவர்கள் திருடர்களாகவும் இருக்கிறார்கள்! அது தான் அவர்களை அடிக்கடி  புலம்ப வைக்கிறது!

நண்பரே! சகிப்புத்தன்மை  எங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் சேர்த்துத் தான்!

 

No comments:

Post a Comment