Wednesday 30 January 2019

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது

வருத்தமான செய்தி தான்.  

தமிழ் நேசன் நாளிதழ் ஒரு முடிவுக்கு வந்தது. நூறு ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் பொருளாதாரா சுமைகளைத் தாங்க முடியாமல் அந்த நாளிதழ் நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் கடைசி பதிப்பு நாளை 31-1-2019 பதிப்போடு ஒரு முடிவுக்கு வரும்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பத்திரிக்கை உடனான எனது தொடர்பு ஏறக்குறைய  பத்து வயதில் இருந்து  ஆரம்பமாகிறது. அருகில் உள்ள  கடைக்காரர் தமிழ் நேசன் தான் வாங்குவார்.  அவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் பற்றாளர்.  அது காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கை என்பதாகத்தான்  வெளி வந்து வந்து கொண்டிருந்தது.அப்போதெல்லாம் திரு என்னும் சொல்லுக்குப் பதிலாக ஸ்ரீ என்னும் சொல்லைத்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள்.  அந்த ஒரு பத்திரிக்கை தான் அத்தோட்டத்திற்கு வரும் ஒரே பத்திரிக்கை.  வேறு பத்திரிக்கைகள் உண்டா என்பதுகூட நான் அறிந்திருக்கவில்லை. 

அந்த வயதில் அப்படி என்ன செய்திகளைப் படித்திருப்பேன்> ஒரு வேளை சினிமா செய்திகளாக இருக்கலாம்!  ஞாபகமில்லை! ஆனால் தினசரி படிப்பேன்.  ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகிற எல்லாக் கதைகளையும் படித்து விடுவேன்! நான் ஒரு சிறுகதை பைத்தியம். அப்போதெல்லாம் யார் சிறுகதைகள் எழுதினார்கள் என்பதை நான் மறந்து போனாலும் ஒரு சில பெயர்கள் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. "தூதன்" என்னும் பெயரில் ஒருவர் எழுதி வந்தார். மு.தனபாக்கியம் என்னும் யாழ்ப்பாணப் பெண்மணி ஒருவர் எழுதி வந்தார். இவர் சிரம்பானைச் சேர்ந்தவர். உஷா நாயர் என்பவரும் எழுதி வந்தார். லாபு. சி.வடிவேலுவும் ஞாபகத்திற்கு வருகிறார்.வேறு பெயர்கள் எதுவும் உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை.

நான் தமிழ் நேசனுடன் தொடர்புடைய காலத்தில் யார் ஆசிரியராக இருந்தார் என்பது தெரியவில்லை என்றாலும்  கு.அழகிரிசாமியின் பெயரும் ஆதிநாகப்பன் பெயரும் இன்னும் மனதில் நிற்கிறது.

ஏறக்குறைய தமிழ் நேசன் நாளிதழை நாற்பது- நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் காசு போட்டு வாங்கி படித்து வந்திருக்கிறேன். பின்னர் அரசியல்  காரணங்களுக்காக நான் அந்த பத்திரிக்கையுடனான தொடர்பை துண்டித்து விட்டேன்.

தமிழ் நேசன் அரசியல்வாதிகளின் சொத்தாக மாறிய பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை  நமது
அரசியல்வாதிகளுக்கு அழிக்கத்தான் தெரியுமே தவிர ஆக்கப்பூர்வமாக எதனையும் செய்யத் தெரியாது. அது தான் நடந்திருக்கிறது.

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. வேதனையே!

No comments:

Post a Comment