Sunday 27 January 2019

இதுவும் நல்லது தான்..!

கேமரன்மலை இடைத் தேர்தலின் முடிவு நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஆனால் இதுவும் நல்லதுக்குத் தான்  என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் பாரிசானின் பிடியிலிருந்த ஒரு தொகுதி (இன்னுந்தான்) அந்தத் தொகுதியில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக பூர்வீகக் குடியினரின் வாழ்க்கைத் தரம் எந்த ஒரு மேம்பாடும் காணவில்லை. அதே போல இந்தியர்களின் விவசாயத்தையும்  அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.  

இது கடந்த காலம். அதனை விடுவோம். முடிந்து போனவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.

இனி எப்படி இருக்கும்? முதல் மாற்றம் அந்தத் தொகுதி இந்தியருக்கும் இல்லை மலாய்க்காரருக்கும் இல்லை. பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் அத்தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்!   கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அறுபது ஆண்டுகளாக செய்ய முடியாத ஒரு மாற்றத்தை யார் செய்தார். அம்னோ செய்யவில்லை.  பக்கத்தான் அரசாங்கம் இந்த மாற்றத்தை அம்னோவின் மூலம் கொண்டு வரச் செய்திருக்கிறது! பக்கத்தான் அரசாங்கம் அமையவில்லை என்றால் அங்கு ஒரு இந்தியரோ அல்லது மலாய்க்காரரோ போட்டியிட்டிருப்பார்!  நிச்சயமாக ஒரு பூர்வீகக்குடியச் சேர்ந்த ஒருவருக்கு அம்னோ இடம் கொடுத்திருக்காது! அந்த அளவுக்கு அவர்கள் மேல் அம்னோவுக்கு மரியாதை இல்லை! ஆனால் வருங்காலங்களில் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் தான் அங்கு போட்டியிடுவார் என நம்பலாம். அதுவே பூர்வீகக்குடியினருக்கு மாபெரும் அங்கீகாரம். முதல் மரியாதைக் கிடைத்திருக்கிறது! வாழ்த்துகள்!

இந்தத் தொகுதி  இத்தனை ஆண்டுகள் மாற்றாந்தாய் பிள்ளையாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இனி இத்தொகுதி அப்படியெல்லாம் கருத முடியாது. காரணம் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக வேலை செய்ய வேண்டும். அம்னோவினர் எந்தக் காலத்திலும் தொகுதிப் பக்கம் வருவதில்லை!   வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தே பழக்கமானவர்கள்! இனி இந்த வேலையெல்லாம் நடக்காது!  தொகுதிக்கு என்ன செய்தாய் என்று  தலை நிமிர்ந்து கேட்கக் கூடியவர்களாக இந்த மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

வருங்காலத்தில் பகாங் மாநிலம் கண் திறந்த மாநிலமாக இருக்கும். சும்மா காசை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களாக இருக்க மாட்டார்கள்! காரணம் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளுவார்கள். இலஞ்சம் தலைவிரித்தாடும் போது எந்த ஒரு நல்ல காரியத்தையும் குறிப்பிட்ட நாள்களில் செய்த முடிக்க முடியாது! ஏற்கனவே நமக்குள்ள அனுபவம் தான்!


இந்த கேமரன்மலை இப்போது நமக்கு ஒரு புதிய பாதையைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. பூர்வக்குடியினர் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படும்; ஏற்பட்டே ஆக வேண்டும். இந்திய விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்த்தே  ஆக வேண்டும்!  சும்மா பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.   சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால் சோத்துக்கு ஆகாது!

இது நல்ல மாற்றம் தான்!

No comments:

Post a Comment