சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைப் பற்றியான ஒரு கட்டுரையைத் தமிழ் மலரில் படிக்க நேர்ந்தது.
இவ்வளவு நாள் நான் தேடி வந்த ஒரு செய்தி இந்தக் கட்டுரையில் கிடைத்தது. சீனப் பள்ளிகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 14,000! பெரிய எண்ணிக்கை தான்.
ஏன் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்? கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அவர்களின் ஆரம்பத் தேர்வு தமிழ்ப்பள்ளிகள் தான். ஆனாலும் பின்னர் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுகின்றனர். ஏன்?
தமிழ்ப் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு பள்ளியைக் கட்ட அல்லது இணைக் கட்டடங்கள் கட்ட சுமார் இருபது ஆண்டுகள் கூடப் பிடிக்கின்றன! அப்படியே தப்பித் தவறி கட்டிவிட்டால் அதற்கு நகராண்மைக் கழக சான்றிதழ் கிடைக்காது! அதனால் அந்தக் கட்டடம் மாணவர்கள் கல்வி பயில இயலாத நிலை! அதன் பின்னர் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
சமீபத்திய ஒரு செய்தி. மாணவர்கள் கொள்கலனில் கல்வி பயிலுகிறார்களாம்! இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் ரயில் பெட்டிகளிலும் தமிழ் படிக்கலாம்!
இன்னும் ஒரு செய்தி. தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள். எது, எதற்கு என்பதெல்லாம் புரியாத புதிர். தலைமை ஆசிரியரை மாற்றம் செய்தால் "மாற்றக்கூடாது" என்பதாக ஓர் ஆர்ப்பாட்டம்! 'சொன்ன மாதிரி ஏன் கட்டடம் கட்டவில்லை" என்பதற்கு ஓர் ஆர்ப்பாட்டம்!
கட்டடங்கள் கட்டுவதாகச் சொல்லி பல இலட்சங்கள் செலவு செய்த பின்னர் கட்டடத்தையே காணோம் என்பதாக ஒரு செய்தி.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குவதற்கு இவைகளெல்லாம் காரணிகள் தான். பெற்றோர்கள் பள்ளிகளுக்குக் கல்வி பயில அனுப்புகிறார்களே தவிர ஆர்ப்பாட்டங்களை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்காக அல்ல!
சீனப்பள்ளிகளில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இல்லை என்பது ஒரு நல்ல செய்தி. அதனைப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
நான் மேற்குறிப்பிட்ட அனைத்தும் முந்தைய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிள்ளைகள் போகாமல் தடுப்பதற்குப் பல வழிகளில் சில! தரமற்ற கட்டடங்கள் என்றால் யார் பிள்ளைகளை அனுப்புவார்கள்? கல்வி யமைச்சும், ம.இ.கா,வும் சேர்ந்து தமிழர்களுக்குச் செய்த துரோகம் இது. அதுவும் ம.இ.கா.வில் தலைவர்களாக இருந்தவர்கள் தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்கள். அவர்களின் பற்றும் பாசமும் எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
எப்படி இருப்பினும் தமிழ்ப்பள்ளிகளில் பல மாற்றங்கள், குறிப்பாக கட்டடங்கள் புதிய அரசாங்கத்தால் சீரமைக்கப்படும் என நம்பலாம். கட்டடத்த வைத்துத் தான் "தரமா, தரமில்லையா" என்பதை பெற்றோர்கள் தீர்மானித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? அது அவர்கள் உரிமை அல்லவா!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இவைகளும் காரணங்கள் தாம் என்பது தான்!
No comments:
Post a Comment