Friday 18 January 2019

EWRF வுக்கு நன்றி..!

நமது சமுதாய இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல இயக்கங்கள், மன்றங்கள் தொடர்ந்து அவர்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து  கொண்டு தான் வருகின்றனர்.  இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

அந்த வகையில் EWRF நீண்ட காலமாக இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஓர் இயக்கம்.

இந்த ஆண்டு தொழிற் திறன் பயிற்சிக்காக பல நூறு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு களம் இறங்கியிருக்கின்றனர். நல்ல நோக்கம். தைப்பூச  தினத்தன்று அனைத்து திருத்தலங்களிலும் அவர்களின் முகப்பிடங்களைத் திறக்கின்றனர். பத்துமலை, கெர்லிங்,  தண்ணிர்மலை, கல்லுமலை இன்னும் அனைத்து திருத்தலங்களிலும் அவர்களின் முகப்பிடங்கள் திறந்திருக்கும்.

இந்த ஆண்டு நாம் இன்னும் அதிகமாக இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வேண்டும்.  அவர்களோடு சேர்ந்து நமது இளைஞர்களுக்கு நாமும் வழி காட்ட வேண்டும்.

இதற்கு முன்னர் யாரும் ஒன்றும் செய்யவில்லையா என்னும் கேள்வி எழுவது இயல்பு. செய்தார்கள். முயற்சி எடுத்தார்கள். நாம் ஐநூறு இளைஞர்களுக்கு விண்ணப்பம் செய்தால் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஐந்து இளைஞர்களுக்குத் தான் வாய்ப்புக் கொடுப்பார்கள்! அது ம.இ.கா. வின் கணக்கு! நமக்குப் புரிய நியாயமில்லை. 

ஆனால் இப்போது கணக்கு மாறியிருக்கிறது. இப்போது பக்காத்தானின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கும் என நம்பலாம். நம்புகிறோம். அதனால்  தான் காற்று உள்ள போதே  தூற்றிக் கொள்ள  வேண்டுமென  விரும்புகிறோம்.

கல்லூரிகளில் இடம் இல்லை  என்பதெல்லாம் சும்மா பேச்சு! அவர்களுடைய கணக்கு  வேறு.  ஒரே இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்றால் வெவ்வேறு   உணவுகள் என்கிற பிரச்சனைகள்  எழாது. மேலும் திறமையான  மாணவர்களை அவர்கள் விரும்புவதில்லை. இருக்கட்டும்! அது அவர்கள் பிரச்சனை. அவர்களுக்காக  நாம்  முட்டாள்களாக இருக்க முடியாது!

இப்போது நமது தேவை  எல்லாம்;  தொழிற் திறன் பயிற்சி  பெற  யார் யார்  தகுதி  பெற்றிருக்கிறார்களோ அவர்கள்  அனைவரும்  தொழிற் பயிற்சி பெற  வேண்டும். 

எங்குப் படித்தாலும் இன்னும் மேலே படிக்கின்ற  வாய்ப்பு  பிரகாசமாய் இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் வரை போகலாம். படிக்கலாம். ஒரு தடையும் இல்லை.

ஒரு தகுதியும் இல்லாமல், ஒரு பயிற்சியும் இல்லாமல்  வருங்காலங்கலில் உங்களுக்கான  வேலை  வாய்ப்புகளுக்கான தகுதியை இழந்து விடுவீர்கள்.  இன்றைய காலம் என்பது கல்வி சான்றிதழ் காலம்!  ஏதாவது ஒரு பயிற்சி. ஏதாவது ஒரு சான்றிதழ்.  அது தான் உங்களுக்கான வேலை வாய்ப்புக்களைக்  கொண்டு வரும்.

இந்த ஆண்டு முதல் நம் நாட்டு தொழிற் மையங்களில் நமது இந்திய  மாணவர்களின்  எண்ணிக்கை  கூடுதலாக வேண்டும். இதுவே  நமது கோரிக்கை.

மீண்டும் EWRF வுக்கு நன்றி!

No comments:

Post a Comment