Tuesday 29 January 2019

ஊழலை ஒழிப்போம்...!

ஊழலை ஒழிப்போம் என்கிற மாபெரும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஊழல்  முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் - அதுவே  அரசாங்கம் மட்டும் அல்ல - மக்களின் எண்ணங்களும் கூட.

ஆனால் ஐந்து ஆண்டுகள் என்பது தேவை தானா என்கிற ஐயமும் நமக்கு ஏற்படுகிறது. காரணம் பக்கத்தான் அரசு அமைந்த பிறகு  பொதுவாகவே ஊழல் குறைந்திருக்கிறது என்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். அதனை நாம் வரவேற்கிறோம்.

இதுவே நமக்கு ஆறுதல். இப்போது குறைந்திருக்கிற இந்த ஊழல் என்பது  நேரடியாக மக்களுடன் தொடர்புடையது. இதெல்லாம் சிறிய அளவிலும் உண்டு ஒரு சில பெரிய அளவிலும் உண்டு.

நமக்குத் தேவை அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை சொல்ல முடியாத அளவுக்கு எகிறிப்போய் விட்டது! அதே போல எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் விலைகள் ஏறிப்போய் விட்டன! பல பொருள்களின் விலை ஏற்றம் என்றால் நம் கண்ணுக்குத் தெரியாமல் யாரோ கையூட்டு வாங்கிறார்கள்  என்பது தானே அர்த்தம்! 

அரசாங்கத்தின் இந்த ஊழல் ஒழிப்பு சரியான வழியில் செல்லுகிறது. எல்லா அரசுத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கு ஊழல் அதிகாரிகளே காரணம். ஆனால் எங்கு, யார் இந்த ஊழல் அதிகாரிகள் என்பது நமக்குப் புலப்படவில்லை!  அரசாங்கம் அதனை அறியும். அரசாங்க அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கூட்டுச் சேர்ந்து செய்கின்ற ஊழல்கள் பொது மக்களைப் பாதிக்கின்றது. விலைவாசிகள் ஏறுகின்றன.  இங்குக் கைமாறுவது கோடிக்கணக்கில் - அதன்  சுமையை மக்கள் சுமக்கின்றனர்!

  இந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அதன் விளைவுகள் என்னவென்று தெரிவதில்லை. காரணம் இந்த ஊழல்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் மிகவும் கௌரவமான முறையில் நடைபெறுகின்றது.  நஜிப் செய்த ஊழல்கள் நமக்குத் தெரியவில்லையே! ம.இ.கா. செய்த ஊழல்கள் நமக்குத் தெரியவில்லையே!  ஆனால் இந்த ஊழல்கள் எல்லாம் மக்களைப் பாதிக்கிறது என்பது கொஞ்சம் ஆழமாகப் போனால் தெரியும்! குறிப்பாக அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் இவர்களைக் கண்காணித்தாலே  ஊழல்கள் குறையும்!

ஊழலை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும்  நடவடிக்கைகளை வரவேற்போம்!  ஊழல் ஒழிக! ஊழல்வாதிகள் ஒழிக!

No comments:

Post a Comment