Saturday 19 January 2019

இது தான் வெற்றிகரமான தோல்வி என்பது..!

சமீபத்தில் ஒர் அரசியல்வாதி பெண்மணி தனது கட்சியின் தோல்வியைப் பற்றி குறிப்பிடும் போது அது "வெற்றிகரமான தோல்வி!?" என்றார்,

இப்போது நமது சி.ஐ.டி. தலைவர் வான் அகமது நாஜ்முடீன் முகமது அப்படித்தான் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்! கடந்த ஐந்து ஆண்டுகளாக காவல்துறை இந்திராகாந்தியின் மகளான பிரசன்னா டிக்சாவை தேடி வருகின்றது என்றும் இதுவரை பிரசன்னாவையும் அவரது தந்தையும் இந்திராகாந்தியின் முன்னாள் கணவருமான பத்மநாதனையும்  கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றும் வான் அகமது கூறுகிறார். 

"நாங்கள் பொது மக்களின் உதவியை நாடுகிறோம். அவரின் இருப்பிடத்தைத் தெரிந்தவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கமாறு பல வேண்டுகோள்கள் விடுத்தும் இதுவரை எந்தப் பயனுமில்லை!"  என்கிறார் சி.ஐ.டி. தலைவர்!

பொது மக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? பத்மநாதன் அல்லது முகமது ரிதுவான் சமயத்தைச் சார்ந்தவர்கள் எவரும்  அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது தலைவருக்குத் தெரியாதா? காட்டிக் கொடுப்பது சாமிக் குற்றம் என நம்புபவர்கள்  எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்? சரி அதை விடுங்கள். சீனர்களுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்தியர்களின் மத்தியில் ரிதுவான் வாழ வழியில்லை  அகப்பட்டுக் கொள்ளுவார்! நேரம் சரியில்லை என்றால் அடியும் வாங்குவார்! ஆக, இப்போது எங்கே தேடுவது? தலைவர் எங்கே தேடிக் கொண்டிருக்கிறார்?

அதனால் பொது மக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?  இது மலேசியர்களின் பிரச்சனை அல்ல. ஒரு சமயத்தைச் சார்ந்தவரின் பிரச்சனை. சமயத்தின் மூலம்  தான் ரிதுவானுக்கு நல்ல  புத்தியைக் கொடுக்க முடியும். சமயம் தான் சரியான வழி காட்ட முடியும்.  சமயவாதிகளின் அறிவுரை தான் அவருக்கு ஏற்றதாக இருக்கும்.

இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும்  ரிதுவானைக் கண்டுப்  பிடிப்பது எளிதல்ல!  ஜாகிர் நாயக்-கிற்கே  அடைக்கலம் கொடுத்து ஒரு புதிய பாதையை  காட்டியவர்கள் நாம்.  ரிதுவானுக்கும் நம்மால் ஒரு புதிய பாதையைக் காட்ட முடியாதா என்ன? 

இந்த நீண்ட நாள் தேடுதல் வேட்டை காவல்துறைக்கு  ஒரு க‌‌‌‌ஷ்டகாலம். . இதற்கு ஒரு முடிவைக் காண  வேண்டும்.  ஒரு பிரச்சனையை  இழுத்துக் கொண்டே போவது  காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்! அல்லது அது யாரால் முடியும் என்பதை அறிந்து அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

காவல் துறைக்கு இது தோல்வி அல்ல! வெற்றிகரமான தோல்வி!

No comments:

Post a Comment