Sunday 6 January 2019

இது யார் தவறு..?

பொதுவாக தமிழைப் புறக்கணிப்பது அரசாங்க பணியாளர்களுக்கு இயல்பான ஒன்று தான். காரணம் 'நீ என்ன பெருசா?' என்கிற எண்ணம் தான். இப்பொழுது அவர்கள் புறக்கணித்தால் "நீ பக்கத்தானுக்கு வாக்களித்தால் மட்டும் உன்னால் என்ன செய்ய முடியும்?' என்கிற கோபம் தான்!

ஆனால் இதனை நாம் சரி செய்ய முடியும்.  சுகாதார அமைச்சு அதிகாரிகள் உணவகங்களில் "புகை பிடிக்கக் கூடாது" என்கிற விளம்பரங்களை இப்போது உணவகங்களில் பொருத்தி வருகின்றனர்.  தேசிய மொழி, ஆங்கிலம், சீனம் அனைத்தும் உண்டு, தமிழைத் தவிர. இதன் அர்த்தம் உணவகங்களில் இந்தியர்கள் புகை பிடிக்கலாம் என்று சொல்ல வருகிறார்களா என்பதும் நமக்குத் தெரியவில்லை! அப்படி இருக்க நியாயம் இல்லை!

சில பிரச்சனைகளை மேலிடத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். போர்ட்டிக்சன் நகரில் இது நடக்கிறது என்றால்  அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் வருங்கால பிரதமர் என்று சொல்லப்படும் அன்வார் இப்ராகிம். அவருடைய அலுவலகம் அங்கு இருக்கத்தான் செய்யும். அவருடைய பார்வைக்கு அது கொண்டு செல்லப்பட வேண்டும். அல்லது நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது சபாநாயகர் என்று வரிசைப்பிடித்து நிற்கிறார்கள்! இவர்களையெல்லாம் நாம் வெறும் தெண்டச்சோறுகள் என்று நினைக்கிறோம்! உண்டு களிக்கத்தான் பதவியில் இருப்பதாக நாம் நினைக்கிறோம்! அந்த எண்ணங்கள் தவறானது. நமது பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் அவர்கள் பதவியில் இருக்கிறார்கள். மொழி புறக்கணிப்பும் நமது பிரச்சனையே!

முன்பு எல்லா மாநிலங்களிலும் இரண்டு மைல்களுக்கு ஒரு கிளை என்று கொண்டிருந்தது ம.இ.கா.  என்ன புண்ணியம்? யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! நாம் சொல்லுவதோடு சரி. அதனை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்! 

ஆனால் இப்போதும் அந்த நிலை நீடித்தால் நாம் கேனையன்கள் என்பதில் அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறுமில்லை! இப்போது பி.கே.ஆர்., ஜ.செ.க. - இப்படி  எல்லாக் கட்சிகளின் கிளைகள் நாடெங்கிலும் இருக்கின்றன.  இது  போன்ற  புறக்கணிப்பை விவாதிக்க வேண்டும். இனி வருங்காலங்கிலும் இந்த மொழி புறக்கணிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.

மாநில ரீதியில் சுகாதார அமைச்சு யாருடைய கண்காணிப்பில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அங்கும் அந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்ல வேண்டும். ரெப்பா, ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர், எஸ்.வீரப்பன் தான் மாநில சுகாதார அமைச்சராக இருக்கிறார்.  அவரால் அந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும். நமக்குள்ளே ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.

நாம் முயற்சி எடுக்காவிட்டால் அது நம்முடைய தவறு தான்!

No comments:

Post a Comment